”ஓ” போடு
- படம்: பார்த்தேன் ரசித்தேன்
- பாடல்: எனக்கென ஏற்கெனவே
- எழுதியவர்: வைரமுத்து
- இசை: பரத்வாஜ்
- பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், ஹரிணி
- Link: http://www.youtube.com/watch?v=Y2_9E4M4zWo
எனக்கென ஏற்கெனவே பிறந்தவள் இவளோ!
இதயத்தைக் கயிறு கட்டி இழுத்தவள் இவளோ!
தமிழில் ’ஓ’ என்ற எழுத்து ஒரு பெயர்ச் சொல்லோடு ஒட்டி வந்தால், அது சந்தேகத்தைக் குறிப்பிடும்.
‘நான்’ என்றால் உறுதிப்பொருள், ‘நானோ’ என்றால் சந்தேகம்! (”டாடா நானோ” அல்ல!)
‘அவன்’ என்றால் உறுதிப்பொருள், ‘அவனோ’ என்றால் சந்தேகம்!
ஆகவே, இந்தப் பாடலில் ‘எனக்கென ஏற்கெனவே பிறந்தவள் இவளோ’ என்றால், காதலனுக்கு இன்னும் அவள்தான் தன்னுடைய காதலி, பின்னர் தன் மனைவியாகப்போகிறவள் எனும் நம்பிக்கை வரவில்லையோ? அதனால்தான் கொஞ்சம் சந்தேகமாகவே பாடுகிறானோ?
காதலனுக்குச் சந்தேகம் வரலாம், கவிஞருக்கு வரலாமா? அவள்தான் என்று உறுதியாக அடித்துச் சொல்லவேண்டாமோ?
வைரமுத்து அதைதான் செய்திருக்கிறார், தண்டியலங்காரத்தில் ‘அதிசய அணி’ என்று குறிப்பிடப்படும் அணியின்கீழ் வருகிற ‘ஐய அதிசயம்’ என்ற வகையில் இந்தப் பாடலை எழுதியிருக்கிறார்.
’ஐய அதிசயம்’ என்றால் ஐயப்படுவதன்மூலம் (சந்தேகப்படுவதன்மூலம்) ஒரு பொருளை உயர்த்திச் சொல்வது. ‘இவளோ’ என்றால், இங்கே ‘இவள்தான்’ என்று அர்த்தம்!
உதாரணமாக, காதலியைப் பார்த்து ஒருவன், ‘அடியே நீ வெண்ணிலவோ, பூங்கொத்தோ, தேவதையோ, அப்ஸரஸோ, ஹன்ஸிகாவோ, நஸ்ரியாவோ’ என்றெல்லாம் வரிசையாக “ஓ” போட்டால், அதெல்லாம் சந்தேகம் அல்ல, நீதான் வெண்ணிலவு, நீதான் பூங்கொத்து, நீதான் தேவதை என்று உறுதியாகச் சொல்லி அவளை உயர்த்திப் பேசுவதாக அர்த்தம்!
ஆஹா, இதுவல்லவோ கவிதை!
***
என். சொக்கன் …
04 11 2013
337/365
Kannan 10:45 pm on November 4, 2013 Permalink |
Super. O Podu
rajinirams 11:45 pm on November 4, 2013 Permalink |
“ஐய அதிசயம்’ பற்றி எடுத்துரைத்த அருமையான பதிவு.-நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற “அழகோ”…குடந்தையில் பாயும் காவிரி அலை தான் காதலியே உன் “பூங்குழலோ”-மதுரையில் பிறந்த -பாடல் இப்படி ….. நன்றி.
amas32 9:18 pm on November 5, 2013 Permalink |
நீ தான் என் நஸ்ரியாவோ, நயந்தாராவோ என்றால் காதலியிடம் இருந்து அடி தான் கிடைக்கும். காதலி has to be exclusive/special 🙂 நிலவோடு, காப்பியத் தலைவிகளோடு தைரியமாக ஒப்பிடலாம் ஏனென்றால் நிலவு ஒரு அற்புத அழகின் சின்னம், காவியத் தலைவிகளோ இன்று உயிருடன் இல்லை 🙂
amas32
lotusmoonbell 9:20 pm on November 6, 2013 Permalink |
ஓ ஓ போட்டுவிட்டேன். நாலு வரிக்கு ஜே போடு!