நிலவின் நிறம்

  • படம்: ஸ்ரீராகவேந்திரா

  • பாடல்: ஆடல் கலையே

  • எழுதியவர்: வாலி

  • இசை: இளையராஜா

  • பாடியவர்: கே ஜே யேசுதாஸ்

  • Link: http://www.youtube.com/watch?v=Tjs3heWyCiU

சித்திர நாட்டியம் நித்தமும் காட்டிடும்

சிற்றிடை தான் கண் பறிக்கும் மின்கொடியோ?

விண்ணிலே வாழ்ந்திருக்கும் வெண்ணிற நிலா

பெண்ணென காலெடுத்து வந்ததோ உலா

நிலவின் நிறம்  என்ன என்ற கேட்டால் நம்மில் பலர் வெண்மை என்றே சொல்வோம். வெறும் கண்களால் பார்க்கும்போது நமக்கு நிலவு வெள்ளையாகவே தெரியும். வெண்ணிலா, வெண்மதி என்று நிறம் சேர்த்தே சொல்வது வழக்கம். நவக்கிரக வழிபாட்டிலும் சந்திரனுக்கு வெள்ளைதான் உகந்த நிறம். பால் போலவே வான் மீதிலே என்று நிலவுக்கு கவிஞர்களும் வெள்ளையடிப்பது உண்டு.

By the light of the silvery moon என்ற பாடல் ஒன்று நிலவு வெள்ளியின் நிறம் என்று சொல்லும். ஆங்கிலத்தில் Blue moon என்றொரு சொற்றொடர் உண்டு. இது நிலவின் நிறம் இல்லை. அபூர்வமாக நடக்கும் நிகழ்வு என்ற பொருளில் சொல்லப்படுவது.

ஆனால்  நிஜத்தில் நிலவின் நிறம் என்ன? பொதுவாக வானில், உயரத்தில் நிலவு வெள்ளையாகவே தெரியும்.  கூர்ந்து கவனித்தால் சில சாம்பல் நிற கறைகள்  தெரியும். விண்வெளியிலிருந்து எடுத்த படங்களில் நிலவு மங்கிய வெண்மை / சாம்பல் நிறத்தில் இருக்கும். இதற்கு சில விதிவிலக்குகள் உண்டு. இதற்கு பார்க்கும் கோணம், atmosphere, ஒளிச்சிதறல் என்று பல காரணங்கள்.  கடற்கரையில் நின்று சந்திரன் உதயமாகும்போது பார்த்தால் நிலவின் நிறம் மஞ்சள். சில நாட்களில் அது ஆரஞ்சு சிவப்பு நிறத்திலும் தெரிவதுண்டு.

நிறங்கள் பற்றி வைரமுத்து எழுதிய சகியே என்ற பாடலில் நிலவுக்கு என்ன நிறம் சொல்கிறார்? நேரடியாக எதுவுமில்லை. ஆனால்

அந்தி வானம் அரைக்கும் மஞ்சள்

அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள்

என்ற வரி சூரியனின் ஒளியில் பூத்த நிலவை குறிக்கிறதோ? வெறும் சாம்பல் நிறம் கவிதைக்கு உதவாது. அதனால் வெள்ளி நிலா, மஞ்சள் நிலா சிவப்பு நிலா என்று கவிஞர்கள் அழகு சேர்ப்பார்கள்

மோகனகிருஷ்ணன்

336/365