சின்னஞ்சிறு பெண் போலே!

  • படம்: வண்ணக்கிளி
  • பாடல்: சித்தாடை கட்டிக்கிட்டு
  • எழுதியவர்: மருதகாசி
  • இசை: கே. வி. மகாதேவன்
  • பாடியவர்கள்: S. C. கிருஷ்ணன், P. சுசீலா
  • Link: http://www.youtube.com/watch?v=zAZfkh7H6PI

முத்தாத அரும்பெடுத்து,

முழம்நீள சரம் தொடுத்து,

வித்தாரக் கள்ளி கழுத்தில்

முத்தாரம் போட்டானாம்!

’முத்தாரம்’ என்ற சொல் எல்லாருக்கும் தெரியும், முத்து + ஆரம், முத்துகளால் ஆன மாலை. இங்கே, முற்றாத (மல்லிகை அல்லது முல்லை) அரும்புகளைத் தொடுத்து முத்து மாலைபோல் காதலியின் கழுத்தில் போடுகிறான் காதலன்.

அதுவும் எப்படிப்பட்ட காதலி? ’வித்தாரக் கள்ளி’யாம்!

அதென்ன வித்தாரம்? வித்து + ஆரம்? விதைகளைத் தொகுத்த மாலையா?

இந்தச் சொல்லை நாம் பேச்சில் அதிகம் பயன்படுத்துவதில்லை. பாடல்களில் கேட்டிருக்கிறேன், ’வித்தாரக் கவி’ என்று சிலரைச் சொல்வார்கள். ‘வித்தாரக் கள்ளி வெறகொடிக்கப் போனாளாம், கத்தாழை முள்ளு கொத்தோட வந்துச்சாம்’ என்று ஒரு பழமொழி உண்டு.

இதே சொல்லின் வடமொழி வடிவமான ‘விஸ்தாரம்’ நமக்கு நன்றாகத் தெரியும். ஒருவர் விரிவாக எதையாவது பேசினால், ‘நன்கு விஸ்தாரமா விளக்கறார்’ என்போம்.

இங்கேயும் அதே அர்த்தம்தான், ‘வித்தாரக் கள்ளி’ என்றால், வாயைத் திறந்தால் நிறுத்தமாட்டாள், பேசிக்கொண்டே இருப்பாள் என்று பொருள்.

மருதகாசி ரொம்பக் குறும்பான மனிதர்தான். புகழ்வதுபோல் காதலியை ‘வாயாடி’ என்று சொல்லிவிட்டாரே!

ஆனால், காதலில் உள்ளவர்களுக்கு அவள் பேசும் சிறு சொல்லும் இன்பமாகவே இருக்கும். ’Sweet Nothings’ என்று புகழ்வார்கள். ஆகவே, அவள் நிறைய பேசும் வித்தாரக் கள்ளி என்றால் இன்னும் சந்தோஷம்தான்!

Jokes Apart, ’வித்தாரம்’ என்பது வளவளா என்று வாய்க்கு வந்ததைப் பேசுவதல்ல. ஒரு விஷயத்தைப்பற்றி ஆழமாகவும் விரிவாகவும் பேசுவது. அதனால்தான் ‘வித்தாரக் கவி’ என்பது பெருமையாகச் சொல்லப்படுகிறது. ஆகவே, நாம் ‘வித்தாரக் கள்ளி’யையும் பெருமையான வர்ணனையாகவே எடுத்துக்கொள்ளலாம்!

***

என். சொக்கன் …

02 11 2013

335/365