கூந்தலிலே

தீபாவளி என்றால் புதிய உடை, பட்டாசு,  இனிப்புகள், புதுப்பட ரிலீஸ்  என்று பல அடையாளங்கள் உண்டு. இன்னொரு முக்கிய அடையாளம் அந்த விடியற்கால எண்ணெய் குளியல்!.  இஞ்சித்துண்டு, பூண்டு, மிளகு, சிறிய வெங்காயம், விரலிமஞ்சள் துண்டு, சீரகம் எல்லாம் சேர்த்து நன்றாகக் காய்ச்சிய  நல்லெண்ணெயை தலையில் தேய்த்து பின் அந்த அதிகாலை குளிருக்கு இதமான வெந்நீரில் குளிக்கும் event.

என்னது கிச்சன் item எல்லாம் போட்டு தலைக்கு தேய்ப்பதா என்று யோசித்த காலம் உண்டு. ஆனால் இன்றைய ஹேர் ஆயில் விளம்பரங்களை பாருங்கள் . நெல்லிக்காய், ஆப்பிள், ஆரஞ்சு, எலுமிச்சை, மருதாணி, செம்பருத்தி, மல்லிகைப்பூ, கத்தாழை, துளசி, வேப்பிலை,மூலிகைகள்  என்று பல வித கலவைகள். அதிலும் பெண்களின் கூந்தல் பராமரிப்பு முட்டை, தயிர், வெண்ணெய், நெய் என்று நீள்கிறது.

குணங்குடியார் என்ற இஸ்லாமிய சூஃபி ஞானி. இறைவனை நாயகியாகப் பாவித்து பாடும் பாடல்

கூந்தலுக்கு நெய் தோய்த்து

   குளிர் மஞ்சள் நீராட்டி

வார்த்து சிங்காரித்து

   வைப்பேன் மனோன்மணியே

என்று தொடங்கி மகளின் திருமண நாளன்று தாய் ஆசையோடு செய்யும் அலங்காரக் காட்சியை விவரிக்கும்.  கல்யாண ஊர்வலம் என்ற படத்தில் வாலி எழுதிய பாடல் வரிகளில் (இசை ஆர் பார்த்தசாரதி பாடியவர்கள் கே ஜே யேசுதாஸ், ஜானகி)

http://www.youtube.com/watch?v=IvKOzk3wKLI

கூந்தலிலே நெய் தடவி குளிர் விழியில் மை தடவி

காத்திருக்கும் கன்னி மகள் காதல் மனம் ஒரு தேனருவி

இளம் வயது வளர்ந்து வர கனவு தொடர்ந்துவர

கல்யாண ஊர்வலமோ…கல்யாண ஊர்வலமோ..

அதே மணக்கோலம் சொல்கிறார்.

தலையில் நெய் பட்டால் முடி நரைக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  குணங்குடியாரும் வாலியும் நெய் தடவி என்கிறார்களே? எள்ளிலிருந்து எடுக்கப்படும் நெய் தான் எண்ணெய். ஆனால் எண்ணெய் என்ற சொல் எல்லா நெய்களையும் குறிக்கும் பொதுச்  சொல் ஆகிவிட்டது. பாடலில் வரும் நெய் – எண்ணெயா? வெண்ணையை உருக்கி வரும் நெய்யா? தெரியவில்லை

சும்மா ஒரு curiosity தலையில் நெய் தடவலாமா என்று கூகிளினால் நெய் ஒரு நல்ல ஹேர் கண்டிஷனர் என்று தகவல் வருகிறது!

மோகனகிருஷ்ணன்

334/365