ஆசை நரைப்பதில்லை

காதலிக்க நேரமில்லை
காதலிப்பார் யாருமில்லை
வாலிபத்தில் காதலிக்க
ஜாதகத்தில் வழியுமில்லை

டிவியில் காதலிக்க நேரமில்லை படத்துக்காக கண்ணதாசன் வரிகளை சீர்காழி கோவிந்தரன் பாடிக்கொண்டிருந்தார்.

வாலிபத்தில் காதலிக்க முடியாமல் போய் விட்டதே என்று வேதனைப்படும் முதியவரின் பாத்திரம் பாடும் பாடல் அது.

காதல் என்றால் வாலிபத்தில் மட்டும் வருமா? வந்தாலும் வாலிபத்தோடு போய்விடுமா?

இல்லை இல்லை என்று அடித்துச் சொல்கிறது கவியரசரின் இன்னொரு பாடல்.

ஐம்பதிலும் ஆசை வரும்
ஆசையுடன் பாசம் வரும்
இதில் அந்தரங்கம் கிடையாதம்மா
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா

இது உண்மைதான் போலும். வயது ஆனாலும் கணவனும் மனைவியுமாக வாழும் வாழ்க்கையின் அனுபவங்கள் அந்தக் காதலை கூட்டத்தான் செய்யும். அதையும் அந்தப் பாடலில் அழகாக சொல்லியிருக்கிறார் கவியரசர்.

வீடு வரும்போது ஓடி வரும் மாது
நினைவில் இன்னும் நிற்கின்றாள்
ஆறு சுவை செய்தாள் அருகிருந்து தந்தாள்
அன்புமிக்க தாயாகின்றாள்

என்ன அழகாகவும் எளிமையாகவும் கண்ணதாசன் கூறியிருக்கிறார். அவர் சொன்னதும் உண்மைதான். வயது கூடக் கூடத்தான் கணவனுக்கும் மனைவிக்கும் அன்னியோன்யம் கூடுமாம். அதற்கும் ஒரு பாடல் எழுதியிருக்கிறார் கவியரசர். எதற்குதான் இவர் எழுதவில்லையோ!

எங்க வீட்டு ராணிக்கிப்போ இளமை திரும்புது
வயது ஏற ஏற பருவம் ஏறி காதல் அரும்புது

இப்படி ஒரு கணவன் பாடினால் அதற்கு மனைவி என்ன எதிர்ப்பாட்டு பாட வேண்டும்?

இந்த வயசில் தானே எனக்கு விவரம் புரியுது
நீங்க ஏற இறங்கப் பார்க்கும் போது விளக்கம் தெரியுது

அவர்கள் பேசிக் கொண்டிருப்பது அவர்களது அன்னியோன்யத்தை. ஆனால் கொஞ்சமும் ஆபாசம் இல்லை. எவ்வளவு இயல்பாக தமிழ் விளையாடுகிறது. அப்படித்தான் இல்லறமும் இனிமையானது. ஒருவரையொருவர் எப்போதும் நினைத்துக் கொண்டு… நேரங்களில் அணைத்துக் கொண்டு… உயிரோடு உயிரை இணைத்துக் கொண்டு… அதுதான் வயதுகளையும் கடந்து நிற்கும் காதல்.

காலம் தாண்டி கிடைக்கும்போது
காதல் இனிக்கும் இனிப்பு
கட்டி வெல்லம் கசந்து போகும்
கட்டிப் பிடிக்கும் பிடிப்பு

என்ன… கவிஞர்கள் சொல்வது சரிதானே?!?

பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
பாடல் – காதலிக்க நேரமில்லை
வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
பாடியவர் – சீர்காழி கோவிந்தராஜன்
இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன், டி.கே.இராமமூர்த்தி
படம் – காதலிக்க நேரமில்லை
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=wx6ID51LVyc

பாடல் – ஐம்பதிலும் ஆசை வரும்
வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
பாடியவர் – டி.எம்.சௌந்தரராஜன்
இசை – இசைஞானி இளையராஜா
படம் – ரிஷிமூலம்
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=zkTZUSTmGsw

பாடல் – எங்க வீட்டு இராணிக்கிப்போ
வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்கள் – பி.சுசீலா, டி.எம்.சௌந்தரராஜன்
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
படம் – கிரகப் பிரவேசம்
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=-MH6-OkHvTk

அன்புடன்,
ஜிரா

332/365