பூமாலையும் பாமாலையும்

சென்னை பாண்டி பஜாரில் சாலையோரத்தில் உள்ள பூக்கடைகள் அகற்றப்படலாம் என்று ஒரு செய்தி படித்தேன். நடைபாதை வியாபாரிகள் , வழக்கு, தீர்ப்பு – இவை தவிர சுவாரசியமான ஒரு தகவல் கண்ணில் பட்டது. ‘Petal Rose’ மாலைக்கு ஜோதிகா மாலை என்று பெயர்., பெரிய ரோஜா மாலைக்கு ‘படையப்பா’ மாலை என்று பெயர். சம்பங்கி, விரிச்சி, வாடாமல்லி கொண்டு காட்டப்படும் மாலைக்கு ஆண்டாள் மாலை என்று பெயர்.

ஆண்டாள் என்றாலே முதலில் அவள் சூடிய பூமாலைதான் நினைவுக்கு வரும். எம்பெருமான் மேல் ஆழ்ந்த பக்தியும் காதலும் கொண்டவள். ஆழ்வார் எம்பெருமானுக்கு கட்டிய மாலையைச் சூடி மகிழ்ந்தவள். மணப்பருவம் வந்தவுடன் தட்டுச் சேலையணிந்து, பருத்த செங்கழுநீர் மாலை சூடி, அன்ன நடையிட்டு அரங்கனோடு சேர்கிறாள். அதனால் ஆண்டாள் மாலை ஸ்பெஷல் தான். இன்றும் மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவின் போது வைகை ஆற்றில் இறங்க வரும் கள்ளழகர் சூடுவது ஆண்டாளின் அழகு மாலைதான். ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி பிரம்மோற்சவத்தின் போது திருவேங்கடமுடையவனுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாளின் மாலை செல்கிறது.

கண்ணதாசன் பாடல்களில் ஆண்டாள் பற்றிய reference நிறைய உண்டு. மணக்கோலத்தில் இருக்கும் நாயகியைப் பாடும் பல வரிகளில் கோதை வர்ணனை இருக்கும். ஆனால் டீச்சரம்மா என்ற படத்தில் இந்த ஆண்டாள், மாலை என்பதை ஒரு காதல் முக்கோணத்தில் பயன்படுத்திய விதம் அருமை. தோழிகள் இருவரும் நாயகன் மேல் காதல் கொள்ள, ஒரு பெண் விட்டுக்கொடுக்கும் காட்சியமைப்பு (இசை டி ஆர் பாப்பா பாடியவர் பி சுசீலா)

http://www.palanikumar.com/filmsongdetails_tamil.phtml?filmid=1367&songid=4737

சூடிக் கொடுத்தவள் நான் தோழி

சூட்டிக் கொண்டவளே நீ வாழி

பாடிக் கொடுத்தவள் நான் தோழி

பாட்டை முடித்தவள் நீ வாழி

ஆண்டாள் தந்த பூமாலை பாமாலை இரண்டையும் வைத்து ஒரு ஆரம்பம். இதில் தோழி வாழி எல்லாம் சற்று மாற்றினால் ஆண்டாள் அரங்கன் மேல் பாடுவது போல் பொருள் வரும்

மாலை தொடுத்து மலர் கொண்டு

மஞ்சள் குங்குமச் சிமிழ் கொண்டு

ஏழை எழுந்தேன் எனக்கென்று – அந்த

இறைவன் முடித்தான் உனக்கென்று

கதையை, காட்சியை உள்வாங்கி கண்ணதாசன் ஒரு பாடல் எழுதி கதையை நகர்த்துவார். பல வருடங்கள் கழித்து பாடல் வரிகளை மட்டும் கேட்டாலும் காட்சி மனதில் விரியும். அது ஒரு அபார வித்தை

மோகனகிருஷ்ணன்

331/365