முகவரிகள் தொலைந்தனவோ

இந்திய தபால் துறையின் ஸ்பீட் போஸ்ட் சேவை மூலம் சில விண்ணப்ப படிவங்களை வெளிநாட்டில் வசிக்கும் ஒருவருக்கு அனுப்பினேன். குறைந்த கட்டணம். விளம்பர வெளிச்சம் இல்லாமல், வியாபார ரீதியில் சரியான விலை நிர்ணயம் இல்லாமல் நடக்கும் சேவை. ஆனால் தனியார் அஞ்சலுக்கு நிகரான சேவை.

பள்ளிக்கு நடந்து போகும்போது மரத்தில், மின் கம்பத்தில் தொங்கும் சிவப்பு நிற தபால் பெட்டியில் ‘Next clearance’ என்ற நேரம் மாறுவதை வியப்புடன் பார்த்திருக்கிறேன். அந்த நேரத்துக்கு முன் போடப்படும் கடிதங்கள் விரைவாக சேரும் என்று புரிந்தபோது ஆச்சரியமாக இருந்தது.

நிறைய கடிதங்கள் வரும். நானும் நிறைய கடிதங்கள் எழுதியிருக்கிறேன். பின்னர் நவீன தொழில்நுட்பங்கள் வளர்ச்சியால் மாற்றங்கள் ஏற்பட்டு இ-மெயில், SMS, சமூக வலைத்தளங்கள் என்றும் நானும் மாறியிருக்கிறேன். இப்போது இரண்டு பக்க கடிதம் எழுத முடியுமா என்று மலைப்பாக இருக்கிறது. உணர்வுபூர்வமான இழப்பு என்றெல்லாம் இல்லை. கையால் எழுதிய கடிதம் இன்னும் கொஞ்சம் intimate ஆக இருக்கிறது என்று நினைக்கிறேன்.

கௌரி கல்யாணம் என்ற படத்தில் கண்ணதாசன் தபால் சேவையைப் பற்றி எழுதிய ஒரு பாடல் (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர் டி எம் எஸ்)

https://www.youtube.com/watch?v=yirJLzTqonk

ஒருவர் மனதை ஒருவர் அறிய

உதவும் சேவை இது,- வாழ்வை

இணைக்கும் பாலம் இது !

கடிதங்கள் நம் இடையில் இருக்கும் தூரங்களை உடைத்து – வாழ்வை இணைக்கும் பாலம் என்கிறார். உறவும் நட்பும் நம் வாழ்வில் அக்கறை கொண்டு ‘நலமா என்று கேட்கும் அந்த கடிதம் ஸ்பெஷல்தான்

தாயைப் பிரிந்த பிள்ளை என்றாலும்,

தாரம் பிரிந்த கணவன் என்றாலும்,

உடன் பிறந்தோரின் பிரிவென்ற போதும்

பிரிவுத் துயரை பேசிடும் கடிதம்

கன்னியரே காலம் வரும் ,

காதலரின் தூது வரும் !

பிள்ளை அனுப்பும் வெள்ளிப் பணம் நூறு,

அன்னை முகத்தில் ஆனந்தம் பாரு !

மகனை நினைத்து மயங்கும் மனமே,

விரைவில் வருவான் முருகன் அருள்வான் !

இந்த பாடலில் கடிதத்தில் வரும் செய்தி இன்பமும் தரலாம் துன்பமும் தரலாம் என்ற பொருளில் வரும்

காலம் என்னும் தெய்வமகள்

கலங்க வைப்பாள் – சிரிக்க வைப்பாள் !

எந்தெந்த முறையில் என்ன என்ன கதையோ,

எந்தெந்த முகத்தில் என்ன என்ன வருமோ ,

சுகமும் வரலாம் , துன்பமும் வரலாம்,

இறைவன் அருளால் நலமே வருக

வரிகள் தபால் துறைக்கும் பொருந்தும். குறுஞ்செய்தியிடம் தோற்ற தந்தி, மின்னஞ்சலிடம் தோற்கும் கடிதங்கள். ATM வளர்ச்சியில் அடி வாங்கும் மணி ஆர்டர் என்று தொழில்நுட்பம் தந்ததெல்லாம் துன்பமே. இப்போது கொஞ்சம் modernize செய்ய முயற்சி நடந்துகொண்டிருக்கிறது. இறைவன் அருளால் நலமே வருக.

மோகனகிருஷ்ணன்
328/365