இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால்

அன்றொரு நாள் ட்விட்டரில் ஒரு அட்டகாசமான வெண்பா விளையாட்டு. நண்பர் @nchokkan கண்ணன் பற்றி வெண்பா எழுத நண்பர் @elavasam அதில் ஒரு கேள்வி கேட்க — இவர் பதில் சொல்ல என்று பரபரப்பான one day மாட்ச்  போல சுவாரசியமாக இருந்தது.

எனக்கு வெண்பாவும் தெரியாது விருத்தமும் தெரியாது. ஆனால் விவாதிக்கப்பட்ட விஷயம் கண்ணனும் ராமனும். கண்ணன் பற்றிய பாட்டில் ஏன் ராமர் பற்றிய Reference என்று முதல் கேள்வி.. இருவரும் ஒன்றுதானே என்று ஒரு பதில். தப்பு செய்தவன் ஒருவன் மாட்டிக்கொண்டவன் வேறொருவன் என்று ஒரு மறுமொழி.  ஒரே பாட்டில் பல அவதாரங்கள் என்று ஒரு தனி track. அட அட

அதே கேள்விகளுக்கு நாமும் பதில் தேடலாம் என்று ஒரு (விபரீத) ஆசை. ஆண்டாள் திருப்பாவையில் கொக்கு உருவத்தில் வந்த பகாசுரனை வதம் செய்த கண்ணனைக் குறித்தும், பொல்லா அரக்கனாகிய ராவணனைக் கொன்ற ராமனைக் குறித்தும்

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா வரக்கனைக்

கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்

என்று ஒரே பாசுரத்தில் பாடியுள்ளதாகப் படித்தேன். மணாளன் எப்படி இருக்க வேண்டும் ஆண்டாள் கலங்குகிறாள். கண்ணனா ராமனா ? கண்ணுக்கு இனிய கண்ணனுக்கு ஒரு வரி மனத்துக்கு இனிய ராமனுக்கு ஒரு வரி என்று மாறி மாறி உருகுகிறாள்.  கண்ணதாசன் சுமைதாங்கி என்ற படத்தில் ஒரு matrimonial விளம்பரம் போல எழுதுகிறார் (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் எஸ் ஜானகி)

http://www.youtube.com/watch?v=lsY6sJPpAF0

ராதைக்கேற்ற கண்ணனோ

சீதைக்கேற்ற ராமனோ

கோதைக்கேற்ற கோவலன் யாரோ அழகு

கோதைக்கேற்ற காவலன் யாரோ

அன்னை இல்லம் படத்தில் நடையா இது நடையா என்ற பாடலிலும் (இசை கே வி மகாதேவன் பாடியவர் டி எம் எஸ்) பொருத்தம் பார்க்கிறார்.

தேரோட்டும் கண்ணனுக்கு ராதா

சிங்கார ராமனுக்கு சீதா

காரோட்டும் எனக்கொரு கீதா

கல்யாணம் பண்ணிக்கொள்ளத் தோதா

நம்மாழ்வார்  ராமன் கூனி மேல் மண் உருண்டை எறிந்த பழியை

மானேய் நோக்கி மடவாளை மார்வில் கொண்டாய் மாதவா

கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா!

என்ற பாடலில் கண்ணன் மேல் போடுகிறார். .

ராமன் ஒரு வகை கண்ணன் ஒரு வகை என்பது ஆண்டாள் கட்சியா? நம்மாழ்வார் அதெல்லாம் இல்லை இருவரும் ஒன்றே என்கிறாரா? இன்னும் நிறைய படிக்க வேண்டும்.

கண்ணதாசன் அந்த Bride / Bridegroom தேவை என்பதையெல்லாம் தள்ளிவைத்து இருவேடம் போட்டாலும் திருமால் ஒன்றே என்று உயர்ந்தவர்கள் படத்தில் (இசை சங்கர் கணேஷ் பாடியவர் எம் பாலமுரளிகிருஷ்ணா)

http://www.palanikumar.com/filmsongdetails.phtml?filmid=2697&songid=13160

ராமனும் நீயே கிருஷ்ணனும் நீயே

ராதையின் வடிவம் சீதையும் தாயே

நால் வேதம் அவனாக உருவானதோ

நாலாகும் குணம் பெண்மை வடிவானதோ

என்று சொல்கிறார்.

தசாவதார வரிசை ஒரு evolution செய்தி சொல்லும் என்று படித்தேன் . முதலில் நீர் வாழ் உயிரினம் அடுத்து ஒரு amphibian அப்புறம் ஒரு நிலத்தில் வாழும் வராகம் அடுத்து கொஞ்சம் மிருகம் கொஞ்சம் மனிதன் என்று அது ஒரு அழகான வரிசை. இதில் ராமனுக்கு அடுத்து கண்ணன். இதில் இருக்கும் evolution செய்தி என்ன?

மோகனகிருஷ்ணன்

325/365