இறைவன் படைத்த…

நிலவேம்பு பொடி வாங்குவதற்காக நாட்டு மருந்து கடையில் ஒரு ஐந்து நிமிட வேலை. ஆனால் அங்கிருந்த மற்ற மருந்துகளை நோட்டம் விட்டதில் அரை மணி நேரம் என்னை மறந்து அங்கேயே நின்றேன் – இலை, காய், கனி, மரத்தின் பட்டை, வேர், குச்சி என்று ரகளையான collection. நாவல், அரசு, வேலம், அத்தி, நாயுருவி, சோத்துக் கத்தாழை, விலாமிச்சம் வேர், வாள்விளங்கம், திவிரகந்தம், மதுக்கரை, அதிமதுரம், துக்கமளங்கி, பருத்தி விதை, எட்டி என்று அது வேறு உலகம்.

அங்கே உதிய மரத்தின் பட்டையும் இருந்தது. அட கண்ணதாசன் சொன்ன ஒதிய மரமா? படித்தால் மட்டும் போதுமா என்ற படத்தில் ஓஹோ ஓஹோ மனிதர்களே ஓடுவதெங்கே சொல்லுங்கள் என்ற பாடலில் (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் டி எம் எஸ்)

http://www.youtube.com/watch?v=_pyYU7U4kQs

ஒதிய மரங்கள் பெருத்து இருந்தாலும்

உத்திரமாகாது

உருவத்தில் சிறியது கடுகானாலும்

காரம் போகாது

என்று சொல்கிறார். Indian Ash என்ற இந்த மரத்தின் botanical பெயர் odina woodier ஒதிய மரம் என்ற தமிழ் வார்த்தையிலிருந்தே வந்திருக்கும். ஒதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ என்று வழக்கு மொழி ஒன்று படித்தேன். இந்த மரங்கள் அடுப்பில் வைத்தாலும் எரியாது புகைதான் வரும். அடுப்பெரிக்க முடியாது, தூணாகாது, உத்திரமாகாது – சரி அதனால் ஒன்றுக்கும் உதவாதா? இந்த மரத்தை Tree of Healing என்று குறிப்பிடும் அளவுக்கு இதற்கு மருத்துவ குணங்கள் உண்டு என்று படித்தபோது ஆச்சரியம்.

இதே பாடலில் இன்னொரு சரணத்தில்

அடிப்படை இன்றி கட்டிய மாளிகை

காற்றுக்கு நிக்காது

அழகாய் இருக்கும் காஞ்சிரம் பழங்கள்

சந்தையில் விக்காது

என்று இன்னொரு தகவல் சொல்கிறார். அதென்ன காஞ்சிரம்?தேடினால் திருமூலர் திருமந்திரத்தில் வான் சிறப்பு பற்றி சொல்லும் பொது அமுதூறு மாமழை நீரத னாலே பயன் தரும் கமுகு தென்னை வாழை கரும்பு இவற்றோடு காஞ்சிரை (எட்டி) என்ற நச்சு மரமும் வளரும் என்று மழையின் பாரபட்சமில்லாத தன்மை சொல்கிறார்.. ‘தேனார் பலாக் குறைத்துக் காஞ்சிரை நட்டுவிடல்’ என்ற பழமொழியும் தென்பட்டது. நமக்கு நன்மை செய்வாரை நீக்கிவிட்டு, பயன்படாத கீழ்மக்களைத் தம்மோடு மிகுதியும் சேர்த்தல், தேன் நிறைந்த பலாமரத்தை வெட்டி அவ்விடத்தில் எட்டி மரத்தை வைத்து வளர்ப்பது போல என்னும் பழமொழி. அட காஞ்சிரம் என்பது எட்டிதானா? கசப்பின் உச்சம் ஆனால் இதன் இலைகள், விதைகள், பட்டை, வேர்கட்டை, ஆகிய பகுதிகள் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தப்பாடலில் அழுகிப் போனால் காய்கறி கூட சமையலுக்காகாது என்கிறார். ஆனால் இதிலிருந்து biogas கிடைக்கும். உத்திரமாகாத ஒதிய மரமும் சந்தையில் விற்காத காஞ்சிரம் பழங்களும் நமக்கு மருந்து.

இறைவன் படைப்பில் ‘ஒன்றுக்கும் உதவாத’ என்று எதுவுமே இல்லை என்றே தோன்றுகிறது.

மோகனகிருஷ்ணன்

322/365