விஸ்வநாதன், நெல் வேண்டும்!

  • படம்: காதலிக்க நேரமில்லை
  • பாடல்: விஸ்வநாதன், வேலை வேணும்
  • எழுதியவர்: கண்ணதாசன்
  • இசை: விஸ்வநாதன், ராமமூர்த்தி
  • பாடியவர்: பி. பி. ஸ்ரீனிவாஸ்
  • Link: http://www.youtube.com/watch?v=VndSgJLoKkU

மாடி மேல மாடி கட்டி

கோடி கோடி சேர்த்துவிட்ட சீமானே!

ஆளு அம்பு சேனை வெச்சு, காரு வெச்சு

போரடிக்கும் கோமானே!

பழந்தமிழ் நாட்டில் மாடு கட்டிப் போரடித்தால் கட்டுப்படியாகாது என்று யானை கட்டிப் போரடித்ததாகச் சொல்வார்கள். ஆனால் இந்தப் பாட்டில் வருகிற விஸ்வநாதன் என்ற சீமான் Car வைத்துப் போரடித்ததாக எழுதுகிறார் கண்ணதாசன்.

மாடோ, யானையோ, காரோ, போரடித்தல்ன்னா என்ன?

நானும் பார்த்ததில்லை. படித்துத் தெரிந்துகொண்டதைச் சொல்கிறேன்.

நெல்வயலில் இருந்து கதிர்களை அறுவடை செய்தபிறகு, அவற்றிலிருந்து தானிய மணிகளைப் பிரித்து எடுத்தால்தானே அரிசி கிடைக்கும்? அதற்காக, அறுத்த கதிர்களைக் கையில் பிடித்து அடிப்பார்கள், அவற்றிலிருந்து நெல் மணிகள் மொத்தமாகக் கீழே விழும்.

ஆனால் அப்போதும், சில நெல் மணிகள் பிடிவாதமாகக் கதிரிலேயே ஒட்டிக்கொண்டிருக்கும். அவற்றை ஒவ்வொன்றாகப் பிரித்து எடுக்கவா முடியும்?

அதற்காக, அடித்து முடித்த கதிர்களையெல்லாம் ஒரு களத்தில் வட்டமாகப் பரப்பிவைப்பார்கள். அதன்மீது மாடுகளை நடந்துவரச் செய்வார்கள். அவை மிதிக்க மிதிக்க, கதிர்களில் மீதமுள்ள நெல்மணிகள் அனைத்தும் உதிர்ந்துவிடும். இதற்குதான் போரடித்தல் அல்லது சூடடித்தல் என்று பெயர்.

விளைந்த நெற்கதிர்களின் அளவு குறைவாக இருந்தால், மாடுகளை மிதிக்கச் சொல்லலாம். நிறைய்ய்ய்ய்ய இருந்தால்? அதற்குப் பெரிய யானைகளோ கார்களோ தேவைப்படும் என்று பாடல்களில் புலவர்கள் உயர்வு நவிற்சி அணியாக மிகைப்படுத்திச் சொல்லிப் புகழ்கிறார்கள்!

இதற்குமேல் இந்த விஷயத்தை விவரித்தால் bore அடித்துவிடும்!

***

என். சொக்கன் …

19 10 2013

321/365