சினம் ஏனோ சின்னவளு(னு)க்கு!

மெல்லியதோர் உணர்வினை இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். பூவினும் மெல்லியது. பனியினும் மெல்லியது. நம் கண்கள் காணாத தென்றலிலும் மெல்லியது.

குழந்தைகளுக்கு வரும் கோவத்தைதான் சொல்கிறேன். சட்டியில் விழுந்த வெண்ணெய் உருகிவிடாமல் எடுப்பது போன்றது கோவம் கொண்ட குழந்தைகளை சமாதானப்படுத்துவது.

குழந்தைகளே அழகு. அதிலும் கோவம் கொண்டு முகத்தைத் தூக்கி வைத்திருக்கும் போது பாருங்கள்…. அதை விட அழகு உலகில் இல்லவேயில்லை என்ற முடிவுக்கு வருவீர்கள்.

அந்தக் குழந்தைகளை எப்படியெல்லாம் பாடி கவிஞர்கள் சமாதானப்படுத்தியிருக்கிறார்கள் என்று இன்று பார்க்கப் போகிறோம்.

எதையும் கண்ணதாசனிடம் இருந்தே தொடங்கிப் பழகிவிட்டோம். இதையும் அவரிடமிருந்தே தொடங்குவோம்.

தாயிடம் முகம் காட்டாமல் திரும்பி ஓடும் மகளை அழைக்க வேண்டும். திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும். எப்படி பாடுவாள் தாய்?

சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே கேளம்மா
உன்னைக் காக்கும் அம்மா என்னைப் பாரம்மா

அழைத்தால் திரும்பிப் பார்க்குமா கோவம் கொண்ட குழந்தைகள். அவர்களைத் தூக்கி வைத்து புகழ்ந்தால்தானே காது கொஞ்சமாவது கேட்கும்.

நீ தங்கம் போலே அழகு
நீ எங்கள் வானில் நிலவு
இளம் தாமரைப் பூவே விளையாடு
காவிரி போலே கவி பாடு

விளையாடச் சொன்னால் போதாதா குழந்தைகளுக்கு? அதுவரை இருந்த கோபமும் அழுகையும் மறைந்து சமாதானம் பிறக்கிறது. சமாதானம் ஆனபிறகு என்னாகும்? அணைத்துக் கொண்டு பாட வேண்டியதுதானே!

அணைக்கும் அன்பான கைகள்
அங்கே சொந்தம் கொண்டாட வேண்டும்
வரும் நாளை வாழ்விலே உயர் மேன்மை காணலாம்
நல்ல காலம் தோன்றினால் இந்த உலகை வெல்லலாம்

கிட்டத்தட்ட ஒரு கதையாகவே பாடலை எழுதியிருக்கிறார் கவியரசர் கண்ணதாசன்.

சரி. நாம் அடுத்த குழந்தைக்குப் போவோம். ஏதோவொரு செல்லச் சண்டை. அம்மாவோடு கோவம். கண் நிறைய கண்ணீர். யாரோடும் பேசாமல் ஒதுங்கி நிற்கும் பெண்குழந்தை. எப்படியெல்லாம் கொஞ்சி சமாதானப் படுத்தலாம்? புலவர் புலமைப்பித்தனைக் கேட்போமா

மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே
அன்பு கொண்ட செல்லக்கிளி
கண்ணில் என்ன கங்கைநதி… சொல்லம்மா….
நிலவே… மலரே….
நிலவே மலரே.. மலரின் இதழே… இதழின் அழகே!

ச்சோ ச்வீட் என்று புலவர் புலமைப்பித்தனைப் பாராட்டத் தோன்றுகிறதல்லவா? அதிலும் அந்தாதி போல “நிலவே மலரே… மலரின் இதழே… இதழின் அழகே” என்று அடுக்குவது அட்டகாசம்.

அதென்ன பெண் குழந்தைகள் தான் கோவித்துக் கொள்வார்களா? ஆண்குழந்தைகளுக்குக் கோவம் வராதா? அம்மா திரைப்படத்தில் வந்ததே. இந்த முறை சமாதானப்படுத்துவது கவிஞர் வைரமுத்து.

ஆனால் ஒரு சின்ன பிரச்சனை. அவளுடைய மகன் தான் அந்தச் சிறுவன். ஆனால் இருவருக்கும் தாங்கள் தாய்-மகன் என்று தெரியாது. அவர்களுக்குள் ஏதோவொரு சண்டை. அதனால் கோவம். கோவத்தின் விளைவாக சோகம். சரி பாட்டைப் பார்க்கலாம்.

பூமுகம் சிவக்க
சோகமென்ன நானிருக்க

குழந்தைகளே மென்மை. அந்த மென்மையான முகம் அழுதால் செக்கச் சிவந்து போய்விடுகிறதே! அதைப் பார்க்கத் தான் முடியுமா? பார்த்துவிட்டு சும்மாயிருக்கத்தான் முடியுமா? எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாவது அந்தப் பூமுகத்தில் புன்னகையை அல்லவா பார்க்கத் துடிக்கும் தாயுள்ளம்!

தாயின் வடிவில் என்னை நினைத்து விடு
எனக்கும் அழுகை வரும் துடைத்து விடு

எப்போதுமே பிள்ளைகளை அடித்து விட்டு அதற்கு வருத்தப்படுவது தாயாகத்தான் இருக்கும். அப்படியிருக்கும் போது மகன் அழும் போது தாய் அழாமல் இருந்தால்தான் அதிசயம். அதைக் கண்டு கண்ணீரைத் துடைக்க மகன் வருவான் என்ற நம்பிக்கைதான் இந்தத் தாயின் நம்பிக்கையும். அதே போல மகனும் வந்தான். கண்ணீரைத் துடைத்தான்.

எவ்வளவு மென்மையான உணர்வுகள் இவை. இவற்றைப் பாடலிலும் குரலிலும் இசையிலும் கொண்டு வருவது எவ்வளவு கடினமாக இருந்திருக்கும். ஆனால் பாருங்கள்… நாம் பார்த்த மூன்று பாடல்களையுமே பாடியவர் இசையரசி பி.சுசீலா தான். இந்த ஒற்றுமை தற்செயலானதாக இருக்கும் என்று நினைக்கவில்லை. ஒவ்வொரு பாடலிலும் அவர் காட்டியிருக்கும் குழைவும் உணர்வுகளும் போதும் அவர் பெருமையைச் சொல்ல.

இன்னொரு வகையான குழந்தைகள் உண்டு. ஆம். “நானொரு குழந்தை நீயொரு குழந்தை” என்று கவிஞர் வாலி சொன்ன கணவன் மனையர் தான் அந்தக் குழந்தைகள். அந்தக் குழந்தைகளில் ஒரு குழந்தை கோவித்துக் கொண்டால் எப்படி சமாதானப்படுத்துவது?

பச்சப்புள்ள அழுதுச்சுன்னா பாட்டுப் பாடலாம்
இந்த மீசை வெச்ச கொழந்தைக்கு என் பாட்டு போதுமா!

புலமைப் பித்தன் கேட்கும் கேள்வியும் நியாயமானதுதான். குழந்தைகளுக்கு பொம்மையைக் கொடுத்து அழுகையை அடக்கலாம். காதலர்களுக்குள் அழுகை வரும் போது ஒருவரையொருவர் கொடுத்துத்தான் சமாதானப் படுத்த வேண்டும்.

பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
பாடல் – சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே
வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
பாடியவர் – இசையரசி பி.சுசீலா
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
படம் – பொல்லாதவன்
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=VPM_AqzmZr0

பாடல் – மண்ணில் வந்த நிலவே
வரிகள் – புலவர் புலமைப்பித்தன்
பாடியவர் – இசையரசி பி.சுசீலா
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
படம் – நிலவே மலரே
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=UmCcv-4uv7k

பாடல் – பூமுகம் சிவக்க
வரிகள் – கவிப்பேரரசு வைரமுத்து
பாடியவர் – இசையரசி பி.சுசீலா
இசை – இன்னிசை வேந்தர்கள் சங்கர் – கணேஷ்
படம் – அம்மா
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=o70tn84msTs

பாடல் – பச்சப்புள்ள அழுதுச்சுன்னா
வரிகள் – புலவர் புலமைப் பித்தன்
பாடியவர் – வாணி ஜெயராம்
இசை – சந்திரபோஸ்
படம் – புதிய பாதை
பாடலின் சுட்டி – http://youtu.be/ae3gVTQwWDk

அன்புடன்,
ஜிரா

320/365