நான் யார் நான் யார்

சில வாரங்களுக்கு முன் எனக்கு LinkedIn லிருந்து ஒரு தகவல் (மறுபடியும்!) வந்தது – அதாவது நான் slideshare ஐ பயன்படுத்தி  என்னுடைய Profile க்கு ஒளி, ஒலி, கலர் பலூன், சீரியல் லைட் எல்லாம் சேர்த்து இன்னும் மேம்படுத்தலாம்.  ‘பாருங்கள் இவர் எப்படி செய்திருக்கிறார், இது ரொம்ப சுலபம்’ என்று படம் வரைந்து விளக்கம் எல்லாம் இருந்தது.

இதுதான் இப்போது Trend ஆ அல்லது இது வெறும் மேல்பூச்சு வேலையா என்று தெரிந்து கொள்ள கொஞ்சம் ஆர்வம். HR நண்பர் ஒருவரிடம் பேசினேன். ‘இது போல வித்தியாசமான விண்ணப்பங்கள்  ஒரு சதவிகிதத்திற்கும் குறைவே.  சிலர் தன் வீர தீர பராக்கிரமங்களை  வீடியோ பதிவாக கொடுப்பதும் உண்டு. இவை தனித்து நிற்பதால் முதல் கட்டத்தை கடப்பது சுலபம்’ என்றார். மேலும் வள்ளுவர் சொன்ன

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்

ததனை அவன்கண் விடல்

என்பது சுலபமில்லை. Hire for Attitude Train for skills என்பதால் வெறும் காகிதமாக இல்லாமல் Attitude , உடல் மொழி, பேசும் திறன், அணுகுமுறை, presentation திறன்  பற்றி சொல்லும் இந்த முறை விரும்பத்தக்கதே என்றும் சொன்னார்.

திரையுலகிலும் இப்போது குறும்படங்களே தகுதி சான்றிதழ் என்றாகி விட்டது. இப்படியே போனால் நேர்முகத் தேர்வில் ஒருவர் ஆடிப் பாடலாமா? என்ன பாடல் சரியாக இருக்கும் என்று ஒரு (ஜாலியான)  யோசனை. படித்தால் மட்டும் போதுமா என்ற படத்தில் கண்ணதாசன் எழுதிய (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர்கள் டி எம் எஸ் , பி பி ஸ்ரீநிவாஸ்)

http://www.youtube.com/watch?v=-Bk08LHMcok

நல்லவன் எனக்கு நானே நல்லவன்

சொல்லிலும் செயலிலும் நல்லவன்

உள்ளம் சொன்னதை மறைத்தவன் இல்லை

ஊருக்கு தீமை செய்தவனில்லை

வல்லவன் ஆயினும் நல்லவன்

வரிகள் பொருந்துமா? அல்லது குடியிருந்த கோவில் படத்தில் வாலி  எழுதிய  கொஞ்சம் துள்ளலோடு இருக்கும் (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர்கள்  டி எம் எஸ் & குழுவினர்)

http://www.youtube.com/watch?v=ZlhaOQSgD_M

என்னை தெரியுமா என்னை தெரியுமா –

நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன்

உங்கள் கவலை மறக்க கவிதை பாடும்

கவிஞன் என்னை தெரியுமா

நான் புதுமையானவன் உலகை புரிந்து கொண்டவன்

நல்ல அழகை தெரிந்து மனதை கொடுத்து அன்பில் வாழ்பவன்

என்ற வரிகள் சரியாக இருக்குமா?  இந்த குணங்களுடன் வரும் ஒருவரை நீங்கள் தேர்வு செய்வீர்களா?

மோகனகிருஷ்ணன்

319/365