உயர்

  • படம்: புதிய மன்னர்கள்
  • பாடல்: வானில் ஏணி போட்டு
  • எழுதியவர்: பழநிபாரதி
  • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
  • பாடியவர்: மனோ
  • Link: http://www.youtube.com/watch?v=HWmbi8YCEvs

வானில் ஏணி போட்டு கொடி கட்டு!

மின்னல் நமக்கு தங்கச் சங்கிலி,

விண்மீன் எல்லாம் சின்ன மின்மினி,

வானவில்தான் நம் வாலிப தேசக்கொடி!

சென்னையில் ஒரு பெரிய கார்ப்பரேட் அலுவலகம். ஆனாலும் எப்படியோ பெயர்ப்பலகைகளில் ஆங்கிலத்தோடு தமிழுக்கும் சம உரிமை அளித்திருந்தார்கள்.

என்னுடன் வந்திருந்த நண்பர் ‘மின் தூக்கி’ என்ற பெயரைப் பார்த்துவிட்டு நக்கலாகச் சிரித்தார். ‘அபத்தமான மொழிபெயர்ப்பு’ என்றார்.

‘ஏன்? Liftங்கறது ஆங்கிலப் பெயர், அதற்கு இணையான தமிழ்ச்சொல் தூக்குதல், அப்படின்னா மின்சாரத்தால இயங்கற ”தூக்கி”ங்கற பெயர் சரியாதானே இருக்கு?’ என்றேன்.

‘அதென்னவோ, எனக்குத் தூக்கிங்கற பெயர் இயல்பாத் தோணலை’ என்றார் அவர், ‘இதையே ஏணின்னு சொல்லிப்பாருங்க, அது ரொம்ப இயல்பா இருக்கு!’

நண்பருக்கு விளக்க முயன்றேன். ‘நம்மைத் தூக்கிச் செல்லுதல்’ என்பது செயல், அதைச் செய்யும் கருவியைத் ‘தூக்கி’ என்று சொல்வதில் எந்தத் தவறும் இல்லை.

சொல்லப்போனால், ‘ஏணி’ என்ற சொல்லே இப்படி வந்ததுதான்.

தமிழில் ‘ஏண்’ என்றால் உயர்வு என்று அர்த்தம். ‘ஏணிலேன்’ என்று திருமங்கை ஆழ்வார் தன்னைச் சொல்லிக்கொள்வார். அதாவது, ஏண் இலேன், கடவுளுக்கு முன்னால் நான் எந்த உயர்வும் இல்லாத சாதாரண ஆள் என்று பொருள்.

ஏண் என்றால் உயர்வு, நாம் உயர்வடைய உதவும் கருவிக்கு ‘ஏணி’ என்று பெயர்.

அதே முறைப்படி, ‘தூக்கு’ என்ற சொல்லில் இருந்து ‘தூக்கி’ என்ற சொல் வரலாம்தானே?

***

என். சொக்கன் …

16 10 2013

318/365