வாழ்க்கையைக் காதலி!

ஒருவர் ஒன்றைச் சொல்லி விட்டார் என்பதற்காக அதை அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை.

காதல் காதல் காதல் போயின் சாதல் சாதல் சாதல்” என்ற பாரதியின் வரிகளைத்தான் சொல்கிறேன் நான். அதை அப்படியே ஏற்றுக் கொள்ளத் தயக்கமாக இருக்கிறது.

காதல் இல்லையென்றால் உயிரை விடத்தான் வேண்டுமா? சற்றே யோசித்துப் பார்த்தால் சரியென்றுதான் தோன்றும். காதல் போன அந்த ஒரு நொடியில் உயிரே போனது போல வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அது உண்மையா? சரியா?

கண்ணதாசன் இதை இன்னும் அழகாக அணுகியிருக்கிறார் என்று தோன்றுகிறது. பாட்டுப் போட்டி நடக்கிறது. பாட்டுப் போட்டி என்றுதான் பெயர். ஆனால் அது காதல் போட்டி. இறந்த காதலியை நினைத்துக் கொண்டிருக்கும் காதலனுக்கும் அந்தக் காதலனை நினைத்துக் கொண்டிருக்கும் பெண்ணுக்கும் நடக்கும் பாட்டுப் போட்டி.

பாடலில் காதலை எத்தனையோ விதமாகச் சொல்லிப் பார்க்கிறாள். அவன் கேட்கவில்லை. ஏனென்றால் அவன் மனம் சமாதானம் ஆகவில்லை. ஆகையால் ஒரு பிரம்மாஸ்திரத்தை எடுத்து விடுகிறான்.

அவன்: ஒரு முறைதான் காதல் வரும் தமிழர் பண்பாடு

பண்பாடு என்ற வட்டத்துக்குள் வந்துவிட்டால் எதையும் கேள்வி கேட்கவே முடியாது. கேட்டால் பண்பாட்டுக் காவலர்கள் சின்னாபின்னமாக்கி விடுவார்கள்.

ஆனால் அவள் அழகானவள் மட்டுமல்ல. அறிவானவளும் கூட. மிக அழகானதொரு விடை சொல்கிறாள்.

அவள்: அந்த ஒன்று என்பதுதான் கேள்வி இப்போது!

போனதுதான் காதலா? இல்லை. இருப்பதுதான் காதல் என்பதை இதைவிட எளிமையாக எப்படிச் சொல்ல முடியும்?

அவனும் விடவில்லை. தமிழ் படித்தவன்.

அவன்: வருவதெல்லாம் காதலித்தால் வாழ்வதெவ்வாறு?

அவளும் விடவில்லை. அவளும் தமிழ் படித்தவள். ஆனால் தமிழோடு சேர்த்து வாழ்க்கையையும் படித்தவள்.

அவள்: தன் வாழ்க்கையையே காதலித்தால் புரியும் அப்போது

இதற்கு மேல் அவனால் சமாளிக்க முடியவில்லை. அவளுடைய காதலை ஏற்றுக் கொள்கிறான்.

கண்ணதாசரே… கவிதைக் கடவுளய்யா நீர்!

எல்லாருக்கும் இப்படி விளக்கமாக புரியும்படி எடுத்துச் சொல்லும் காதலனோ காதலியோ கிடைக்க வேண்டுமல்லவா! கிடைக்காதவர்களுக்கு?

காதலில் மிதப்பது என்பதற்கும் கடல் மேல் பறப்பது என்பதற்கும் வேறுபாடு இருப்பது போலத் தோன்றவில்லை.

அப்படி கடல் மேல் பறக்கும் பறவை வழி தவறுவது போலத்தான் காதலில் உண்டாகும் தோல்விகள். அந்தத் தோல்வியில் துவண்டு விட்டால் கடலோடு கடலாக பறவை சமாதி ஆக வேண்டியதுதான்.

அந்தக் கடலைத் தாண்டிக் கடக்க வேண்டும். பிழைப்பதற்கும் வாழ்க்கையைச் சுவையாக வாழ்வதற்கும் அதுதான் ஒரே வழி. இதே கருத்தை நா.முத்துக்குமார் ஒரு பாடலில் அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

கதைப்படி அவள் விவாகரத்தானவள். பழைய கொடிய நினைவுகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரும் போது இனிமையாக வருகிறான் ஒருவன். அவன் மேல் வருகிறது காதல். தனக்குத் தானே சமாதானமும் துணிச்சலும் சொல்லிக் கொடுத்து காதலை ஏற்றுக் கொள்ளும் போது இந்தப் பாடல் வருகிறது.

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பார மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே

முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே

வளைவில்லாமல் மலை கிடையாது
வலி இல்லாமல் மனம் கிடையாது
வருந்தாதே வா

கவிஞர் சுட்டிக் காட்டிய கண்டம் தாண்டும் பறவையின் கலங்காத உள்ளம் இருந்தால் எதையும் தாண்டி வரலாம். வாழ்க்கையை வண்ணமயமாக தீட்டிக் கொள்ளலாம்.


பதிவில் இடம் பெற்ற பாடல்கள்

பாடல் – ஆண்கவியை வெல்ல வந்த பெண்கவியே
வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்கள் – பி.சுசீலா, டி.எம்.சௌந்தரராஜன்
இசை – திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்
படம் – வானம்பாடி
பாடலின் சுட்டி – http://youtu.be/8GTpHGuobXo

பாடல் – பேசுகிறேன் பேசுகிறேன்
வரிகள் : நா.முத்துகுமார்
பாடியவர் : நேஹா பாஷின்
இசை : யுவன் சங்கர் ராஜா
படம் : சத்தம் போடாதே
பாடலின் சுட்டி – http://youtu.be/F6v8HpkMQaA

அன்புடன்,
ஜிரா

317/365