உருவங்கள் மாறலாம்

விஜயதசமி நன்னாளில் மகிழ்ச்சியான ஒரு புதிய ஆரம்பம் காண அனைவருக்கும் #4varinote ன் நல்வாழ்த்துகள்.

நவராத்திரி பூஜைகளில் கொலு பொம்மைகளில் பார்த்த கடவுள் திருவுருவங்கள் ரொம்ப சுவாரசியம். பல வடிவங்களில் விநாயகர். மயிலோடு முருகன்.  மயிலிறகோடு மாதவன்.  கையில் கொட்டும் காசு லட்சுமி, சிவன் என்ற உருவத்தில் இருக்கும் detailing, நின்ற, நடந்த, அமர்ந்த, கிடந்த என்று பல நிலைகளில் நாராயணன். இன்னும் இன்னும்…

இவையெல்லாம் வெறும் கற்பனைகளா? கண்டவர் சொன்னதா ? அடியவர்கள் பக்தியில் உணர்ந்ததா?  பாலில் நெய் போல மறைந்து நிற்கும் இறைவனை முகத்தில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள், அகத்தில் கண்கொண்டு  காண்பதே ஆனந்தம் என்கிறார் திருமூலர். அப்பர் சுவாமிகள் இறைவனின் தோற்றத்தைப் எப்படி எழுதிக் காட்டுவேன் என்கிறார்.

அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்

   அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்

இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன்

   இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே

ஆனால் ஒரு உருவம் கொடுத்தபின் அதை வைத்து பல நல்ல கற்பனைகள். அப்பரின் கிடந்தபாம் பருகுகண் டரிவை பேதுற என்ற பாடலில் சிவபிரான் திருமுடியிற் பாம்பும், பிறையும் உள்ளன.  உமை ஒரு பாகத்தில் இருக்கிறாள். பாம்பினைத் தன் அருகில் கண்டு பார்வதி மயங்க, அப்பாம்பு அவளை நீலமயிலோ என்று ஐயப்பட, பிறையோ, அம்மையின் நுதலைக் கண்டு இவ்வழகு தனக்கில்லையே என்று எண்ணி ஏங்க… அட அட

வாலி தாய் மூகாம்பிகை படத்தில் ஜனனி ஜனனி என்ற பாடலில்

ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்

சடை வார்குழலும் விடை வாகனமும்

கொண்ட நாயகனின் இடப்பாகத்தில் நின்றவளை பாட எல்லாம் சொல்லி கங்கையை பற்றி சொல்லவில்லை. குளிர் தேகத்திலே என்று குறிப்பால் சொல்கிறார். அப்பர் சொன்ன பனித்த சடையும்  போல.

ரவிவர்மா வரைந்த சரஸ்வதி உருவப்படத்தை close-up ல் பார்த்தேன். வெள்ளை உடை அணிந்து வெண் தாமரையில் அமர்த்திருக்கும் அழகிய தோற்றம். நான்கு கைகளில் ஒன்றில் செபமாலையும், மற்றொன்றில் ஏடும் இருக்க, முன் கைகள் இரண்டிலும் வீணையை வைத்து மீட்டுபவளாகச் சரஸ்வதி உருவகப்படுத்தப்படுகிறாள்.  மகாகவி பாரதியார் சொல்லும் சரஸ்வதி வர்ணனை அற்புதம்.

 (திரையில் கௌரி கல்யாணம் படத்தில் இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி)

http://www.youtube.com/watch?v=0oL9BklwdX8

வெள்ளைக் கமலத்திலே — அவள்

வீற்றிருப் பாள், புக ழேற்றிருப் பாள்,

கொள்ளைக் கனியிசை தான் — நன்கு

கொட்டுநல் யாழினைக் கொண்டிருப் பாள்,

முதலில் படம் பார்த்து விளக்கம் சொல்கிறார். அதன் பின் வரும் வரிகளில் கலைமகளின் விழிகள், கண் மை, நுதல், தோடு, நாசி, வாய் என்று அவர் சொல்லும் கற்பனை அட்டகாசமான character sketch

வேதத் திருவிழி யாள், — அதில்

மிக்கபல் லுரையெனுங் கருமையிட் டாள்,

சீதக் கதிர்மதி யே — நுதல்

சிந்தனையே குழ லென்றுடை யாள்,

வாதத் தருக்கமெனுஞ் — செவி

வாய்ந்தநற் றுணிவெனுந் தோடணிந் தாள்,

போதமென் நாசியி னாள், — நலம்

பொங்குபல் சாத்திர வாயுடை யாள்.

குழந்தைக்கு அலங்காரம் செய்து மகிழ்வது போல இறைவன் உருவங்களையும் கற்பனையில் மெருகேற்றி வழிபடுவதும் ஒரு ஆனந்தம்தான்

மோகனகிருஷ்ணன்

316/365