எல்லாம் சிவமயம்

  • படம்: திருவருட்செல்வர்
  • பாடல்: சித்தமெல்லாம் எனக்குச் சிவமயமே
  • எழுதியவர்: கண்ணதாசன்
  • இசை: கே. வி. மகாதேவன்
  • பாடியவர்: டி. எம். சௌந்தர்ராஜன்
  • Link: http://www.youtube.com/watch?v=trsW6cL9a9o

சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே, இறைவா, உன்னைச்

சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே!

அத்தன் இல்லாமல் ஒரு அம்மை இல்லை, அந்த

அம்மை இல்லாமல் இந்தப் பிள்ளை இல்லை!

’அத்தான்’ தெரியும், அது என்ன ‘அத்தன்’?

அடுத்து வரும் ‘அம்மை’யோடு சேர்த்துப் பார்த்தால் பொருள் தெரிந்துவிடும். அத்தன் என்றால் தந்தை என்று பொருள்.

சுந்தரர் தன்னுடைய ஒரு பாடலில் சிவனை ‘பித்தா! பிறைசூடி! பெருமானே! அருளாளா! அத்தா!’ என்பார். இந்தத் திரைப்படப் பாடலின் தொடக்கத்திலேயே நாம் அதைக் கேட்கலாம்.

இன்றைக்கும் இஸ்லாமியர்களின் வீடுகளில் தந்தையை ‘அத்தா’ என்று அழைக்கும் பழக்கம் இருக்கிறது. அதேபோல் மலையாளிகள் ‘அச்சா’ (அதாவது, ‘அச்சன்’, ‘அச்சனே’) என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள்.

கம்ப ராமாயணத்தின் ஒரு பாடலில் ராமன் தன் தம்பி லட்சுமணனிடம், ‘அத்தா! இது கேள்!’ என்று தொடங்கிப் பேசுவான். இன்னொரு பாடலில் விபீஷணன் தன் அண்ணன் ராவணனிடம் ‘அத்த! என் பிழை பொருத்தருள்’ என்பான்.

என்ன குழப்பம் இது? ராமனுக்கு எப்படி லட்சுமணன் தந்தை ஆவான்? விபீஷணனுக்கு எப்படி ராவணன் தந்தை ஆவான்?

அது ஒன்றும் பெரிய மர்மம் இல்லை. தம்பியிடமோ அண்ணனிடமோ உரையாடும்போது, ‘அப்படி இல்லைப்பா’ என்று பேச்சுவாக்கில் சொல்கிறோம் அல்லவா? அதுபோலதான் ராமனும் விபீஷணனும் ‘அத்தன்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். இந்த இரண்டு பாடல்களிலும் அதன் பொருள், ‘எனக்கு தந்தையைப்போன்றவனே!’

***

என். சொக்கன் …

12 10 2013

315/365