தவறுகள் குற்றங்களல்ல

வட மாநிலம் ஒன்றில் உயர் பதவியில் இருக்கும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை சந்திக்க நேர்ந்தது. உரையாடலின் நடுவே ‘எந்த முடிவெடுப்பதற்கும் தயக்கமாக இருக்கிறது. எல்லா செயல்களுக்கும் ஒரு Context உண்டு. பின்னணி தெரியாமல் பூதக்கண்ணாடி வைத்து பார்த்து எந்த முடிவையும் தவறு என்று சொல்லலாம்’ என்று சொன்னார். ஒரு மத்திய அமைச்சர் சொன்னது போல் எல்லாருக்கும் Theory of Honest mistakes’ புரியவேண்டும் என்றார்.

தவறு என்பது மனித இயல்பு (To Err is human) என்று சொல்வார்கள். எல்லா தவறுகளும் குற்றங்களல்ல. அறியாமல் அறியாமையால் செய்த தவறு, கவனக்குறைவால் செய்யும் தவறு, அறிந்தே செய்கிற தவறு இவற்றில் எது குற்றம் என்பதற்கு ஏதாவது வரையறைகள் உண்டா? அதில் Honest mistake என்பதை எப்படி கண்டுபிடிக்க முடியும்?

வாலி பெற்றால்தான் பிள்ளையா என்ற படத்தில் நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி என்ற பாடலில் (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர் டி எம் எஸ்) ஒரு framework தருகிறார்

http://www.youtube.com/watch?v=SNePlhFN5hw

தவறு என்பது தவறி செய்வது

தப்பு என்பது தெரிந்து செய்வது

தவறு செய்தவன் திருந்த பார்க்கணும்

தப்பு செய்தவன் வருந்தியாகணும்

அட இதற்கு இவ்வளவு ஈசியான வழி இருக்கிறதா? இது சரியல்ல முறையல்ல என்று தெரிந்தே செய்யப்படும் செயல்கள் குற்றங்களே என்கிறார்.

எங்க வீட்டு பிள்ளை என்ற படத்தில் நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் என்ற பாடலில் (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் டி எம் எஸ்)

http://www.youtube.com/watch?v=x8YtKBtSnvY

ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்

அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்

என்று வாலி கடுமையான வார்னிங் தருகிறார். தண்டனையிலிருந்து தப்பவே முடியாது என்பதை ஒரு கொடியில் இரு மலர்கள் படத்தில் வரும் பாடலில் சொல்கிறார் (இசையமைத்து பாடியவர் எம் எஸ் விஸ்வநாதன்)

http://www.palanikumar.com/filmsongdetails.phtml?filmid=890&songid=11536

உப்பை தின்னவன் தண்ணி குடிப்பான்

தப்பை செய்தவன் தண்டனை கொள்வான்

ஒப்புக்கொண்டவன் வெட்கப்படுவான்

வெட்கப்பட்டவன் ஞானம் பெறுவான்

நாம் செய்யும் தவறுகளை ஒப்புக்கொள்ள மனோபலம் வேண்டும். அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளும் தெளிவும் வேண்டும்.

வாலி சொல்லும் விஷயம் புரிகிறது. ஆனால் தப்பு, தவறு, பிழை, பிசகு என்ற சொற்களுக்கு வெவ்வேறு அர்த்தங்கள் உண்டா?

மோகனகிருஷ்ணன்
313/365