கம்பனுக்கும் தாசன்
தொலைக்காட்சியில் கொடிமலர் படம் ஓடிக்கொண்டிருந்தது. கணவன் குடும்பத்தால் கைவிடப்பட்ட கதாநாயகி வீட்டை விட்டு துரத்தப்படுகிறாள்.
அந்த சோகக் காட்சியில் பின்னணியில் கவியரசர் எழுதி மெல்லிசை மன்னர் இசையமைத்த பாடலை சீர்காழி கோவிந்தாரஜன் பாடினார்.
கானகத்தை தேடி இன்று போகிறாள்
கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் ஜானகி
தெரிந்த பாடலாக இருந்தாலும் பாடலைக் கேட்டதுமே மனக்குரங்கு கம்பமரத்தில் தாவி விட்டது.
ஆம். கம்பராமாயணத்தின் ஒரு உணர்ச்சி மிகுந்த பாடலில் இருந்து ஒரு வரி இந்தப் பாட்டில் கண்ணதாசனால் எடுத்தாளப்பட்டுள்ளது.
அதுவும் ஒரு சோகக் காட்சிதான். ஆமாம். ஆமாம். ஒரு பெண் துயரப்படும் சோகக் காட்சிதான்.
யாருக்குமே கிடைக்காத புகழ் அவனுக்குக் கிடைத்தது. அந்தப் பெருமையால் யாருக்கும் கிடைக்காத அவன் அவளுக்குக் கிடைத்தான்.
அவனும் அவளும் நன்றாகத்தான் வாழ்ந்தார்கள். பிள்ளைகளும் பெற்றார்கள். ஆனாலும் அவன் கண் அவளை விட்டு இன்னொருத்தியை நாடியது.
பிறன்மனை நோக்கியது பேராண்மையாகவே இருந்தாலும் குற்றம் குற்றமே என்று போர் தீர்ப்பு கூறியது.
பெற்ற பெருமைகளை எல்லாம் தொலைத்தவன் உயிரையும் தொலைத்தான். அவனா தொலைத்தான்? அவள் அல்லவா அவனைத் தொலைத்தாள்.
தொலைத்த சோகம் துரத்த போர்க்களத்துக்கு ஓடி வருகிறாள். விழுந்து கிடந்தவனை.. இல்லை இல்லை. விழுந்து கிடந்த அவன் உடலைப் பார்க்கிறாள்.
துளைத்த அம்புகள் ஒன்றா இரண்டா? சல்லடையாய் அவன் உடல்.
சலம்பல் இல்லாமல் கிடந்த உடலைக் கண்டவள் வாயில் புலம்பல்தான் வருகிறது.
கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்கும் எனக்கருதி உள் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி
கள் ததும்பும் மலர் சூடிய சானகி மீது உன் மனதில் காதல் வந்ததே… அந்தக் காதல் உன்னுடைய உடம்பில் எங்கே இருக்கின்றது என்று இராமனுடைய அம்பு உன்னுடம்பைத் துளைத்துத் துளைத்துத் தேடியதோ!
*[அந்த இராமன் உன்னைக் கொல்ல அம்பு விட்டனா? உன்னுடைய காதலைக் கொல்ல அம்பு விட்டானா?
இராமனுடைய அம்பு காதலைக் கொல்லாமல் உன்னைக் கொன்று விட்டதோ?
இல்லை. இராமனுடைய அம்பு அந்தப் பொருந்தாக் காதலைத்தான் கொன்றிருக்க வேண்டும். அந்தக் காதல் இறந்த பின்னே உன்னுடைய தவறை உணர்ந்து நீயே உயிரை விட்டிருக்க வேண்டும்.]
வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும்
எள் இருக்கும் இடன் இன்றி உயிர் இருக்கும் இடன் நாடிழைத்தவாறே
தெய்வத்தில் எல்லாம் பெரிய தெய்வம் உட்கார்ந்திருப்பது எங்கு தெரியுமா? உலகத்தில் பெரிய மலைகளுக்கெல்லாம் பெரிய மலை. அந்த மலையை எளிதாகத் தோளில் தூக்கிய உன்னுடைய உடம்பில் எள்ளளவும் இடமின்றி அம்பால் துளைத்தானே இராமன்!
*[அவன் உன்னைக் கொல்ல நினைத்தானா! உன் உள்ளத்தில் இருக்கும் பொருந்தாக் காதலைக் கொல்ல நினைத்தானா! இல்லை. மனைவியைப் பிரிந்த சோகத்தைப் புரிய வைக்க என்னைக் கொல்ல நினைத்தான். அதனால் உன்னைக் கொன்றான்.]
இவ்வளவு நேரம் இங்கு புலம்பியது மண்டோதரிதான். ஆம். கம்பராமாயணத்தில் இராவணன் மறைவுக்குப் பிறகு மண்டோதரி புலம்பிய பாடலில் வரும் வரியை எவ்வளவு அழகாகவும் பொருத்தமாகவும் கவியரசர் கையாண்டிருக்கிறார்!
என்னது? கண்ணதாசன் திருடிவிட்டாரா? இல்லை. இல்லவே இல்லை.
கணவனாலும் குடும்பத்தாலும் கைவிடப்பட்ட அந்தக் கதாநாயகியை நினைக்கும் போது உத்தர காண்டத்தில் சந்தேகத்தால் காட்டுக்கு அனுப்பப்பட்ட சீதைதான் நினைவுக்கு வந்திருக்கிறாள்.
ஆகவே அந்தப் பெண்ணையும் சீதையின் உருவமாகவே கண்டு பாடியிருக்கிறார் கண்ணதாசன். அதனால்தான் அவர் கவியரசர்.
கானகத்தைத் தேடி இன்று போகிறாள்
கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகி!
சீர்காழி கோவிந்தராஜன் தொலைக்காட்சியில் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தார்.
*அடைப்புக்குறிக்குள் இருப்பது கம்பன் சொன்னதல்ல. என்னுடைய கற்பனை.
அன்புடன்,
ஜிரா
311/365
amas32 10:01 pm on October 8, 2013 Permalink |
ஆஹா! ஜிரா you have out done yourself today! whattey! கம்பனையும் கண்ணதாசனையும் என்ன ஒரு அருமையான் பாடல்களுடன் ஒப்பீடு செய்துள்ளீர்கள்!
//கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்கும் எனக்கருதி உள் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி//
கம்பனுக்குத் தான் மண்டோதரி என்ன சொல்லியிருப்பாள் என்று எப்படியொரு அற்புதக் கற்பனை!
அதை மனத்தில் கொண்டு, சீதையாக அந்த கதாநாயகியின் நிலையை நினைத்து கவியரசர் புனைந்த வரிகள் அருமையிலும் அருமை.
//கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகி// அழகு!
நன்றி ஜிரா 🙂
amas32 .