அனல் மேலே

ஒரு விஷயத்தை மக்களுக்கு உணர்த்த அவர்கள் அறிந்த வேறு ஒரு விஷயத்தை ஒப்பிட்டு சொல்லும் உவமை மொழிக்கு கூடுதல் சுவை சேர்க்கிறது. இதன் மூலம் சொல்லப்படும் கருத்துகள் மக்களுக்கு விரைவில் சென்று சேரும். உவமைகளை சரியாகப்  பயன்படுத்துவதில் சங்ககாலப் புலவர்கள் சிறந்து விளங்கினர். குறுந்தொகை ஒரு  உவமை களஞ்சியம் என்றே சொல்லலாம்.

தமிழ் இலக்கியம் முன் வைத்த இரண்டு முக்கியமான விஷயங்கள் பக்தியும் காதலும். இந்த இரண்டுக்கும் பொருந்தும் சில உவமைகள் உண்டு மாணிக்கவாசகர் தழலது கண்ட மெழுகது போல என்கிறார். திருவருட்பாவில்  அலைக்கடலில் துரும்பாகி அலைகின்றார் என்றும் பெரும்பேதை யேன்சிறு வாழ்க்கைத் துயர்எனும் பேரலையில்  துரும்பே எனஅலை கின்றேன் என்றும் வரிகள் உண்டு. நெருப்பில் விழுந்த மெழுகு போல என்றும் கடலில் தத்தளிக்கும் துரும்பு போல என்று விளக்கும்போது  சட்டென்று இதுதான் விஷயம் என்று புலப்படுகிறது.

பக்தி காதல் இந்த இரண்டும் கவிஞர் வாலிக்கு  Home Ground ல் ஆடுவது போல. மேலே சொன்ன இரண்டு உவமைகளையும் ஒன்றாக கோத்து அதை பக்தி காதல் இரண்டு நிலைகளிலும் சொல்கிறார். பஞ்சவர்ணக்கிளி படத்தில் அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் என்ற பாடலில் (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர் பி சுசீலா)

http://www.youtube.com/watch?v=9a0rNJBS594

மலை மேல் இருப்பவனோ மயில் மேல் வருபவனோ

மெய்யுருகிப் பாட வந்தால் தன்னைத் தான் தருபவனோ

அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன்

ஐயன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்

என்று பக்தி ரசம் சொல்கிறார். முருகன் மேல் உள்ள பக்தியில் அனல் மேல் விழுந்த மெழுகு போல உருகி கடல் மேல் விழுந்த துரும்பு போல அலைந்த ஒரு பெண்ணின் நிலை

அழகே உன்னை ஆராதிக்கிறேன் என்ற படத்தில் குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை என்ற பாடலில் (இசை இளையராஜா பாடியவர்கள் எஸ் பி பி வாணி ஜெயராம்) இதே உவமைகளை வைத்து காதலில் தவிக்கும் ஆணின் நிலை சொல்கிறார்

http://www.youtube.com/watch?v=AAQfccjYAlQ

மேளதாளம் முழங்கும் முதல்நாள் இரவு

மேனிமீது எழுதும் மடல்தான்  உறவு

தலையிலிருந்து பாதம் வரையில்

தழுவி கொள்ளலாம்

என்று பெண் சொல்ல அதற்கு ஆண் சொல்லும் பதில்

அதுவரையில் நான்…அனலில் மெழுகோ

அலைகடலில்தான் அலையும் படகோ

இரண்டு உவமைகளை இணைத்து பக்திக்கு ஒரு பாடல் காதலுக்கு ஒரு பாடல். அதுதான் வாலி!

மோகனகிருஷ்ணன்

310/365