இயந்திரப் படைப்பா அவள்?

  • படம்: இந்தியன்
  • பாடல்: டெலிஃபோன் மணிபோல்
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
  • பாடியவர்கள்: ஹரிஹரன், ஹரிணி
  • Link: http://www.youtube.com/watch?v=SfHbknfOOuA

சோனா, சோனா, இவள் அங்கம் தங்கம்தானா,

சோனா, சோனா, இவள் லேட்டஸ்ட் செல்லுலார் ஃபோனா

கம்ப்யூட்டர் கொண்டிவளை அந்த பிரம்மன் படைத்தானா?

கடைக்குச் செல்கிறோம். அழகிய சிலை ஒன்றை வாங்குகிறோம். விலை ஐயாயிரம் ரூபாய்.

பக்கத்திலேயே, கிட்டத்தட்ட அதேமாதிரி இன்னொரு சிலை இருக்கிறது. அதன் விலை ஐம்பதாயிரம் என்கிறார்கள்.

ஏன் இந்த விலை வித்தியாசம்? இரண்டும் ஒரே சிலைதானே?

கடைக்காரர் சிரிக்கிறார். ‘சார், இது மெஷின்ல தயாரிச்சது, ஸ்விட்சைத் தட்டினா இந்தமாதிரி நூறு சிலை வந்து விழும், ஆனா அது கையால செஞ்சது, handmadeங்கறதால இந்தமாதிரி இன்னொண்ணை நீங்க பார்க்கவே முடியாது, அதுக்குதான் மதிப்பு அதிகம், காசும் அதிகம்!’

அப்படியானால் இந்தப் பாடலில் கதாநாயகியை ‘கம்ப்யூட்டர் கொண்டிவளை அந்த பிரம்மன் படைத்தானா?’ என்று வைரமுத்து எழுதுவது புகழ்ச்சியா? அல்லது, நீயும் template அழகிதான் என்று மட்டம் தட்டுகிறாரா? 🙂

சுவையான குழப்பம், அந்தக் காதலிக்குச் சொல்லிவிடாதீர்கள், பாடிய காதலன் பாடு பேஜாராகிவிடும்!

கிட்டத்தட்ட இதேமாதிரி ஒரு புகழ்ச்சியை சீதைக்குக் கம்பரும் செய்கிறார். ஆனால் அவர் காலத்தில் கம்ப்யூட்டர் இல்லை. ஆகவே, ’ஆதரித்து, அமுதத்தில் கோல் தோய்த்து, அவயவம் அமைக்கும் தன்மை யாது என்று திகைக்கும்’ என்கிறார்.

அதாவது, சீதையைப் படமாக வரைய விரும்பிய மன்மதன் அமுதத்தில் தூரிகையைத் தோய்த்து வரையத் தொடங்கினானாம். ‘இந்த அழகை எப்படி வரையமுடியும்?’ என்று திகைத்து நின்றானாம். அப்படி ஓர் அழகு சீதை!

ஒருவேளை இந்தப் பாட்டு சீதைக்கும் ராமனுக்கும் டூயட் என்றால், ரஹ்மான் தந்த இதே மெட்டில் கம்பரின் சிந்தனையை  ’அமுதத்தில் கோல்தோய்த்து அந்த மாரன் திகைத்தானா?’ என்று பொருத்திவிடலாம்!

***

என். சொக்கன் …

06 10 2013

309/365