குழந்தையும் தெய்வமும்

குழந்தைகளுக்கு புரியும்படி விளக்குவது என்பது ஒரு பெரிய கலை. கதையாக பாட்டாக அவர்களின் மொழியில் உரையாடி புராணம், வரலாறு, அறிவியல் கணிதம் என்று எல்லாவற்றையும் சொல்லித்தரும் வித்தை சிலருக்கே வசப்படுகிறது. இடைமறித்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விடை தேடும்போது நமக்கே புதிய அர்த்தங்கள் புலப்படும்.

கடவுள் என்ற ஒரு Complex விஷயத்தை எப்படி குழந்தைகளுக்கு விளக்குவது? சாந்தி நிலையம் படத்தில் கண்ணதாசன் எழுதிய இறைவன் வருவான் என்றும் நல்வழி தருவான் என்ற ஒரு பாடல் (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர்கள் பி சுசீலா & குழுவினர்). குழந்தைகளுக்கு home schooling முறையில் கற்றுத்தரும் ஆசிரியர் பாடுவதுபோல் காட்சி. கடவுளைப் பற்றி குழந்தைகளுக்கு விளக்கம் சொல்வதுபோல் அமைந்த வரிகள்.

http://www.youtube.com/watch?v=Mc_kXk4AaVI

வண்ண வண்ணப் பூவினில் காயை வைத்தவன்

சிப்பி ஒன்றின் நடுவே முத்தை வைத்தவன்

சின்னச் சின்ன நெஞ்சினில் பாசம் வைத்தான்

நெஞ்சில் வரும் பாசத்தை பேச வைத்தான்

கண் முன் தெரியும் இயற்கையை முன்னிறுத்தி இறைவனைப்பற்றி சொல்வது வழக்கம். கவிஞரும் வண்ண வண்ண பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம், சிப்பிக்குள் இருக்கும் முத்து எல்லாம் இறைவன் தந்தது என்கிறார். அருணகிரிநாதர் கந்தர் அனுபூதியில்

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்

என்று மொட்டாய் மலராய் எல்லாமுமாய் இருப்பவன் குருவாகவும் வந்து அருள் செய்ய வேண்டுகிறார். கண்ணதாசன் இறைவன் வந்து நல்வழி தருவான் என்கிறார், அடுத்த சரணத்தில்

கண்கள் அவனை காண

உள்ளம் அவனை நினைக்க

கைகள் அவனை வணங்க

என்று சொல்கிறார். வணங்கத் தலைவைத்து வார்கழல்வாய் வாழ்த்த வைத்து என்று திருவாசகம் சொன்னதும் இதுதான். அப்பர் திரு அங்கமாலையில்

வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்

தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனைச்

சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே

வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே

என்ற சொன்னதும் இதுதான். அருணகிரி நாதரும் அப்பர் பெருமானும் சொன்ன ஆழமான விஷயங்களை ஒரு நர்சரி ரைம் போல எளிமையாக சொல்கிறார் – குழந்தைகளுக்கும் நமக்கும் புரியும்படி!

பெரியவர்களும் குழந்தைகளாக மாறி பொம்மைகளுடன் விளையாடி கடவுளுடன் பேசி மகிழும் நவராத்திரி ஆரம்பம். அனைவருக்கும் வாழ்த்துகள்

மோகனகிருஷ்ணன்

307/365