அழகிய நதியென அதில் வரும் அலையென…

இந்தியாவின் பிரபல ஆறுகள் என்று சொன்னால் உடனே கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, சோனா என்று அடுக்குவார்கள்.

இந்தப் பெயர்கள் எல்லாமே பெண்பாற் பெயர்கள். நன்றாக யோசித்துப் பார்த்தால் பெரும்பாலாண நதிகளுக்கு இந்தியர்கள் பெண்பாற் பெயர்களையே வைத்துள்ளார்கள்.

அப்படியென்றால் வையை(வைகை), பொருணை(தாமிரபரணி), மணிமுத்தாறு எல்லாம் என்ன பெயர்கள்?

வையை என்பதும் பொருணை என்பதும் பெண்பாற் பெயர்களே. மணிமுத்து என்பது பெண்பாற் பெயராகவும் இருக்கலாம். ஆண்பாற் பெயராகவும் இருக்கலாம்.

ஆனால் இந்தியாவில் ஒரு பெரிய நதிக்கு ஆண்பாற் பெயர் உண்டு. அதுதான் பிரம்மபுத்ரா. ஏனென்று யோசித்துப் பார்த்தால் இப்படித் தோன்றுகிறது.

இந்திய ஆறுகளிலேயே அதிக வெள்ளச் சேதத்தைக் கொடுப்பது பிரம்மபுத்ரா தான். அதே போல சில இடங்களில் பிரம்மபுத்ராவின் அகலம் மட்டுமே பத்து கிலோ மீட்டர்கள் இருக்கும். அவ்வளவு அகலமான ஆறு இந்தியாவில் வேறு கிடையாது. அதனால்தானோ என்னவோ பிரம்மபுத்ரா என்று ஆண்பாற் பெயர்.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் ஆறுகள் பெண்கள் தானோ என்று தோன்றுகிறது. வளைந்து நெளிந்து ஓடும் பாங்கும் கண்ணைக் கவரும் அழகும் போதாதா இந்த முடிவுக்கு வர. அதற்கும் மேலாக உயிர்களுக்கு ஆதாரமாக இருப்பதே நீர்தானே. உயிர்களைச் சுமப்பதும் பெண் தானே.

இந்தக் கருத்தை இன்னும் விரிவாகவும் சிறப்பாகவும் வைரமுத்து ஒரு பாடலில் எழுதியுள்ளார். ஆம். ரிதம் திரைப்படத்தில் உன்னி மேனன் பாடிய “நதியே நதியே காதல் நதியே” பாடலைத்தான் குறிப்பிடுகிறேன்.

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண் தானே
அடி நீயும் பெண் தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே

பெண் எப்போது பெண்ணாகிறாள்?” என்று பாக்கியராஜ் கேட்பதுதான் நினைவுக்கு வருகிறது. குழந்தையாப் பிறந்து சிறுமியாக வளர்ந்து குமரியாக மலர்ந்து மனைவியாக இணைந்து தாயாக உயிர்த்தெழும் பெண்ணைப் போலத்தான் ஆறுகளும். ஆறாக ஓடி அருவியாக எழுந்து விழுந்து கடலாக நிற்பதும் அதன் பண்புதானே.

நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடலல்லோ
சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ

பெரும்பாலும் ஆண்களுக்கு மனைவியின் பெருமை இருக்கும் போது தெரியாது. புரியாது. ஒரு வாரம் அந்தப் பெண் ஊருக்குப் போகட்டுமே.. அவனுக்கு எதுவும் ஒழுங்காக நடக்காது. எதையோ சாப்பிட்டு எதையோ உடுத்தி எதையோ பிரிந்த நிலை அது.

அது போலத்தான் நீர்வளம் இருக்கும் போது நாம் அதை மதிப்பதில்லை. ஆறுகளைப் பராமரிப்பதில்லை. கரைகளை வலுப்படுத்துவதில்லை. குளங்களை தூர் வாருவதில்லை. ஆனால் கோடையிலோ மழை பெய்யாத காலங்களிலோ தண்ணீருக்கு ஆலாய்ப் பரப்போம்.

காதலில் அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை அறிவாய் கோடையிலே

குளிரில் உறைவதும் வெம்மையில் உருகுவதும் நீரின் தன்மை. காதலனை நினைக்கும் போதே சட்டென்று ஒரு வெட்கம் ஒட்டிக்கொள்ள உறைந்து போகின்றவளும் பெண் தான். பெண்ணை நினைத்து ஆண் வெட்கத்தில் உறைந்ததுண்டா?!? அதை யார் பார்ப்பது? அதே போல காதலன் கைவிரல் பட்டதும் தொட்டதும் அந்த வெட்கம் விட்டதும் உணர்வுகள் பெருகி உருகுவதும் பெண்ணே!

வெட்கம் வந்தால் உறையும் விரல்கள் தொட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே

இதையெல்லாம் விட ஒரு தாய் தன் குழந்தையை வயிற்றில் சுமப்பது தண்ணீர்க் குடத்தில்தான். பனிக்குடத்தைதான் சொல்கிறேன். அத்தோடு எல்லாம் முடிந்து சாம்பலான பின்னாலும் கடலிலோ ஆற்றிலோதான் கரைக்கிறார்கள்.

தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ

அதனால்தானோ என்னவோ ஆறுகளைப் பெண்களாகப் பார்க்கும் வழக்கம் வந்திருக்குமோ! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பாடல் – நதியே நதியே காதல் நதியே
வரிகள் – கவிஞர் வைரமுத்து
பாடியவர் – உன்னி மேனன்
இசை – ஏ.ஆர்.ரகுமான்
படம் – ரிதம்
பாடலின் சுட்டி – http://youtu.be/wVFvZ9TUsuA

அன்புடன்,
ஜிரா

308/365