யாமறிந்த நாடுகளிலே

பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்னால் வெளிநாட்டில் நடப்பது போல கதை இருந்தால் தான் வெளிநாட்டுக் காட்சிகளைப் பார்க்க முடியும்.

அப்படி வெளிநாட்டுப் பாடல் காட்சிகளைப் படம் பிடிக்கும் போது அந்த நாடு தொடர்பாக ஏதேனும் செய்தியோ பெயர்களோ பாடல் வரிகளில் வரும்.

எனக்குத் தெரிந்து சிவந்தமண் திரைப்படம் இந்தப் பாணியை பிரபலப் படுத்தியது என நினைக்கிறேன். அதற்கு முன் வந்திருந்தால் சொல்லுங்கள். நானும் தெரிந்து கொள்கிறேன்.

ஐரோப்பாவில் மேற்படிப்பு படிக்கும் நாயகனும் நாயகியும் காதல் கொண்டு பாடுவது போல சிவந்த மண் திரைப்படத்தில் ஒரு காட்சி. சாதாரண காதல் பாடல்தான் என்றாலும் கண்ணதாசன் வெளிநாட்டையும் பாட்டில் கொண்டு வந்திருப்பார். நீங்களே பாருங்களேன்.

ஒரு ராஜா ராணியிடம்
…………………
ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில்
அழகிய ரைன் நதியின் ஓரத்தில்
மாலைப் பொழுதின் சாரத்தில்
மயங்கித் திரிவோம் பறவைகள் போல்

ஐரோப்பாவின் அழகுமலை ஆல்ப்ஸ். பனிகொட்டிய சிகரங்கள் காதலர் விளையாடும் கூடங்கள். அந்த ஆல்ப்ஸ் மலையைப் பற்றிப் பேசும் போது ஐரோப்பாவின் ரைன் நதியைக் கொண்டு வந்தது அழகுணர்ச்சியைக் கூட்டுகிறது.

அடுத்து குறிப்பிட்டு சொல்ல வேண்டிய திரைப்படம் உலகம் சுற்றும் வாலிபன். கிழக்காசிய நாடுகளைச் சுற்றி விட்டு உலகம் சுற்றும் வாலிபன் என்று பெயர் வைக்கவும் ஒரு துணிச்சல் வேண்டும். ஆனால் அந்தக் காலத்தில் அதுவே பெரிய விஷயம். அயல்நாடுகளில் படமாக்கப்பட்ட ஒவ்வொரு பாட்டும் காலத்தால் என்றும் புதியவை.

மாங்கனியே தேன்சுவையே தாமரையே தளிரழகே மருக்கொழுந்தே மண்ணாங்கட்டியே என்று ஏற்கனவே தமிழ்நாட்டுக் காதலுக்கு ஆயிரம் பாடல்கள் எழுதியாகி விட்டது. இதுவோ வெளிநாட்டுக் காதல். யோசிக்காமல் இப்படி எழுதினார் கண்ணதாசன்.

லில்லி மலருக்கு கொண்டாட்டம் – உன்னைப் பார்த்ததிலே
செர்ரி பழத்துக்கு கொண்டாட்டம் – பெண்ணைப் பார்த்ததிலே

பாட்டில் இங்கிலீஷ் பழங்களையும் பூக்களையும் கொண்டு வந்து விட்டார். இதே படத்துக்காக ஒரு பாட்டு எழுதினார் கவிஞர் வாலி.

பன்சாயி…….
காதல் பறவைகள்
பாடும் கவிதைகள்
தீராததோ ஆறாததோ
வளரும் இன்ப சுகம்
உறவில் வந்த சுகம்

பன்சாயி என்பது ஜப்பான் நாட்டில் இருக்கும் ஒரு தற்கொலைச் சிகரம். கடலோரத்தில் அமைந்த மலைப்பகுதி அது. அங்கிருந்து குதித்தால் அதோகதிதான். இன்று வரலாற்றுப் புகழ் வாய்ந்த இடமாக பாதுகாக்கப்பட்டு வரும் பகுதி.

ஜப்பானில் பாடும் டூயட் பாடலில் பன்சாயி சிகரத்தை நுழைக்க கவிஞருக்கு எது தூண்டுதலாக இருந்ததென்று தெரியவில்லை.

அவ்வளவு தொலைவு சென்றவர்கள் இலங்கையை விட்டு வைப்பார்களா? பைலட் பிரேம்நாத் என்று இந்திய இலங்கை கூட்டுத் தயாரிப்பாகவே ஒரு திரைப்படம் வெளிவந்தது. இந்தப் படத்தில் எல்லாப் பாடல்களும் இலங்கையிலேயே படமாக்கப்பட்டன.

“அழகி ஒருத்தி இளநி விக்கிற கொழும்பு வீதியிலே” – காதல் பாட்டு
“கோப்பி தோட்ட முதலாளி” – மலையகத்து தமிழ் வழக்கில் வந்த பாடல்
“முருகனெனும் திருநாமம் முழங்குமிடம் கதிர்காமம்” – கதிர்காமப் பாடல்

இருந்தாலும் மிகப் பிரபலமானது “இலங்கையின் இளம் குயில்” என்ற காதல் பாடல்தான். அந்தப் பாடலில் இலங்கையின் பிரபலமான பௌத்த மதத்தைப் பற்றி எழுதியிருக்கிறார் வாலி.

அன்புத் தெய்வம் கௌதமனின் அருள் கூறும் ஆலயங்கள்
வளரும் நம் உறவுகளை வாழ்த்துகின்ற நேரமிது

அடுத்த படம் வருவான் வடிவேலன். இந்த முறை சிங்கப்பூரும் மலேசியாவும். இப்போது கவியரசரின் முறை.

ஜாய்ஃபுல் சிங்கப்பூர் கலர்ஃபுல் மலேசியா
ஆகாயப் பந்ததிலே ஆலவட்ட மேகங்கள்
அழகான மலைநாட்டின் மூன்று மொழி ராகங்கள்

ஜாய்ஃபுல் சிங்கப்பூர் மலேசியா என்று எழுதியது ஒரு பக்கம் இருக்க, அழகான மலைநாட்டின் மூன்று மொழி ராகங்கள் என்று எழுதியது சிறப்பு.

மலைநாடு என்பது மலாயா(மலேசியா)வைக் குறிக்கும். இன்றைய சிங்கப்பூர் மலாயாவின் ஒரு பகுதியாகத்தான் முன்பு இருந்தது. இந்த இரண்டு நாடுகளிலும் மலாய் மொழியும் சீன மொழியும் தமிழ் மொழியும் அரசு மொழிகள். அதைக் குறிக்கும் விதமாகத்தான் “மூன்று மொழி ராகங்கள்” என்று எழுதினார் கண்ணதாசன்.

எவ்வளவு நாட்கள்தான் ஐரோப்பா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என்று சுற்றுவது. உலக வல்லரசான அமெரிக்கா இருக்கிறதே. அந்த நாட்டுக்குப் படமெடுக்கப் போனார்கள் ஒரே வானம் ஒரே பூமி படக் குழுவினர்.

மலைராணி முந்தானை சரியச் சரிய” என்று நயாகரா நீர்வீழ்ச்சியைப் பற்றி கவியரசர் கவித்துவமாக எழுதினார். அதே பாட்டுக்கு மலையாளத்தில் “சுரலோக ஜலதார ஒழுகி ஒழுகி” ஒரு கவிஞர் என்று எழுதியதை மறந்துவிடலாம்.

கதாநாயகன் பாடும் அறிமுகப் பாடலான “ஒரே வானம் ஒரே பூமி” பாடலில் அமெரிக்காவின் வரலாற்றை லேசாக உரசி வைத்திருக்கிறார் கவிஞர் வாலி.

அப்ரஹாம் லிங்கன் தான் அன்பால் வென்றால்
கருப்பென்ன வெளுப்பென்ன ஒன்றே என்றார்
இனவெறி இல்லாமல் நிறவெறி கொள்ளாமல்
எத்தனை முன்னோர்கள் தத்துவம் சொன்னார்கள்

வெளிநாட்டுப் பாடல்களில் கவியரசர் எழுதியதை மட்டும் எடுத்துப் பார்த்தாலே கீழே கொடுத்துள்ளபடி அடுக்கிக்கொண்டே போகலாம்.

இமயம் கண்டேன் பொன் தொட்டில் கட்டும் நேபாளம் – நேபாளம் – இமயம் திரைப்படம்
நம்ம ஊரு சிங்காரி சிங்கப்பூரு வந்தாளாம் – சிங்கப்பூர் – நினைத்தாலே இனிக்கும்
யாதும் ஊரே யாவரும் கேளிர் – சிங்கப்பூர், மலேசியா – நினைத்தாலே இனிக்கும்

ப்ரியா படத்தில் பஞ்சு அருணாச்சலம் எழுதி இடம்பெற்ற “என்னுயிர் நீதானே உன்னுயிர் நான் தானே” பாடலிலும் நிறைய மலாயா வரிகள் இருக்கும். “ஹத்தியக்கு சுக்காவா லாலுவாக்கு சிந்தாவா” என்று தப்பும் தவறுமாக அந்தப் பாட்டைப் பாடுவதும் சுகமே.

உல்லாசப் பறவைகள் என்றொரு படம் வந்தது. அதில் பஞ்சு அருணாச்சலம் “ஜெர்மனியின் செந்தேன் மலரே” என்று எழுதினார். ஆனால் பாடல் காட்சியில் ஜெர்மனிக்கு பதிலாக நெதர்லாந்தின் தலைநகரமான ஆம்ஸ்டர்டாமின் மையப்பகுதி காட்டப்படும். பிறகு பாரிஸ் நகரத்துக்கு கேமிரா போகும்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு “நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்” என்று எழுதினார் கவிஞர் வாலி. நியூயார்க் சென்றிருந்த கதாநாயகன் தன்னுடைய மனைவியை நினைத்துப் பாடுவதாக அமைந்த பாடல்.

இப்படியெல்லாம் ஊருலகத்தைப் பற்றி எழுதியிருக்க… வெளிநாட்டுக்குப் போய் எழுதினார் கங்கையமரன். என்னவென்று தெரியுமா?

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமா
எந்நாடு என்றாலும் அது நம்நாட்டுக்கு ஈடாகுமா
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா….

அன்புடன்,
ஜிரா

305/365