அன்னலட்சுமி

சமீபத்தில் வெளிவந்த Lunchbox  திரைப்படம் எனக்கு மீண்டும் ‘டப்பாவாலாக்களை’ நினைவுபடுத்தியது. ஒரு டப்பாவாலா செய்யும் பிழைதான் படத்தின் முக்கியமான முடிச்சு.

டப்பாவாலா என்போர் மும்பையில் அலுவலங்களில் பணி புரிவோரின் வீடுகளில் சமைக்கப்பட்ட உணவைப் பெற்று அவரவர்க்கு உரிய நேரத்தில் சேர்க்கும் பணியைச் செய்யும் தொழிலாளர்கள் ஆவர். பிரமிக்க வைக்கும் அசுர உழைப்பு. இங்கிலாந்து இளவரசர் வந்து பார்த்தது, டாக்குமெண்டரி, சிக்ஸ் சிக்மா என்று நிறைய வெளிச்சம். சிக்ஸ் சிக்மா வாங்கவேயில்லையாம். ஆனால் அதையெல்லாம் தாண்டி ஒரு புனிதமான சேவை.

அந்த நாளில் சென்னையில் அலுவலகங்களுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு, மிச்சமிருப்பதை தொழிலாளர்களுக்கு கொடுக்கும் சாப்பாடு கூடைக்காரர்கள் உண்டு. வட சென்னையில் மதிய நேரங்களில் வழக்கமான நிகழ்வு. Unorganised தொழிலாளிகளுக்கு இந்த கூடைக்காரர்தான் டப்பாவாலா, அன்னம் தரும் தெய்வம் எல்லாம். (இப்போது இவர்களெல்லாம் அம்மா உணவகம் போகிறார்கள் என்று நினைக்கிறேன்)

பாபு திரைப்படத்தில் வாலி இதை வரதப்பா வரதப்பா என்ற பாடலில் (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர்கள் டி எம் எஸ் & குழுவினர்) பதிவு செய்கிறார். கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி வரும் கூடைக்காரியை  அத்தனை பேர்க்கும் படியளக்கும் அன்னலட்சுமியாக வர்ணிக்கிறார். பசி மயக்கத்தில் இருக்கும் ஒருவனின் contextual வர்ணனை

https://www.youtube.com/watch?v=9oCR6E9LRgY

சாதம் போல சிரிக்கிறா – மீன்

கொழம்பு போல மணக்குறா

ரகசியமா ஏதுஞ் சொன்னா

ரசத்தப் போல கொதிக்கிறா

தொடர்ந்து ஒரு சுவாரசியமான செய்தி சொல்கிறார்.

குலாம் காதர் புலாவிலே கறி கெடக்குது அது

அனுமந்தராவ் அவியலிலே கலந்திருக்குது

மேரியம்மா கேரியரில் எறா இருக்குது அது

பத்மநாப ஐயர் வீட்டு குழம்பில் மிதக்குது

சமையல் எல்லாம் கலக்குது.அது

சமத்துவத்தை வளக்குது .

சாதி சமய பேதமெல்லாம்

சோத்தைக்கண்டா பறக்குது

இப்போது இந்த கூடைக்காரர்கள் உண்டா என்று தெரியவில்லை. ஆனால் தெருவோரங்களில் சாப்பாட்டு கடைகள் மதிய வேளைகளில் பர பரவென்று இயங்குவதைப் பார்க்கலாம். பலரும்  எல்லா பேதங்களையும் மறந்து கூடும் இடம் சாப்பிடும் இடமாகத்தான் இருக்கும்.

மோகனகிருஷ்ணன்

304/365