நோய் விட்டுப்போகும்

சில தினங்களுக்கு முன் ட்விட்டரில் @amas32 ‘நோயற்றே வாழ்வே செலவற்ற செல்வம்’ என்று புது மொழி சொன்னார். தொடர்ந்து இன்றைய மருத்துவம், செலவுகள் என்று ஒரு பெரிய விவாதம்.

நோயற்ற வாழ்வு பற்றி மாற்று கருத்து இருக்க முடியாது. Health is wealth. நோயற்ற உடல் என்பது பதினாறு செல்வங்களில் ஒன்று என்று அபிராமி பட்டர் ‘திருக்கடவூர் அபிராமியம்மை பதிகம்’ என்ற நூலில் சொல்கிறார்

கலையாத கல்வியும், குறையாத வயதும், ஓர் கபடு வாராத நட்பும்,

கன்றாத வளமையும், குன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும்,

சலியாத மனமும்

என்ற வரிகளில் குறையாத வயதும் குன்றாத இளமையும் கழுபிணி இல்லாத உடலும் என்று நோயற்ற ஆரோக்கியமான வாழ்வு பற்றி மூன்று செல்வங்கள். வாலி பேசும் தெய்வம் படத்தில் ஒரு பாடலில் (இசை கே வி மகாதேவன் பாடியவர்கள் எல் ஆர் ஈஸ்வரி சூலமங்கலம் ராஜலக்ஷ்மி) இந்த செல்வங்களை rearrange செய்கிறார்

http://www.youtube.com/watch?v=ZqtdSAA-5Es

நூறாண்டு காலம் வாழ்க

நோய் நொடி இல்லாமல் வளர்க

ஊராண்ட மன்னர் புகழ் போலே

உலகாண்ட புலவர் தமிழ் போலே

குறையாது வளரும் பிறையாக

குவியாத குமுத மலராக

குன்றாத நவநிதியாக

துள்ளி குதித்தோடும் ஜீவ நதியாக

நீ வாழ்க.. நீ வாழ்க..

நீண்ட ஆயுள் என்பது அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டும் என்றால் முதலில் நோய் இல்லாத உடல் வேண்டும். கலையாத கல்வியும், குன்றாத நவநிதியும் என்ற மற்ற செல்வங்கள் எல்லாம் அடுத்த priority தான்

அனைவரும் அரை நிஜார் அடிடாஸ் சகிதம் நடந்து, ஓடி நல்ல ஆரோக்கியம் தேடிக்கொண்டே இருக்கிறோம். வள்ளுவர் மருந்து என்று ஒரு அதிகாரம் வைத்து முக்கியமாக உணவைப் பற்றியே பேசுகிறார். நல்ல உணவு, ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி என்று நினைக்கும் போது சுலபம்தான் ஆனால் நடைமுறையில்?

நோய் வராமல் தடுப்பதுதான் நலம். வந்து விட்டால் அலோபதி, ஹோமியோபதி நேச்சுரோபதி என்று அலைந்து  இவை எதுவும் கை கொடுக்கவில்லையென்றால் வெங்கடாஜலபதி தான் துணை !

மோகனகிருஷ்ணன்

301/365

Advertisements