மென்மஞ்சம்

  • படம்: ராஜபார்ட் ரங்கதுரை
  • பாடல்: மதன மாளிகையில்
  • எழுதியவர்: கண்ணதாசன்
  • இசை: எம். எஸ். விஸ்வநாதன்
  • பாடியவர்கள்: டி. எம். சௌந்தர்ராஜன், பி. சுசீலா
  • Link: http://www.youtube.com/watch?v=ds_8nIPwc2I

அழகு மாணிக்கமா, கட்டில்

அனிச்ச மலரணையா!

வாசலில் தோரணம் உன்னை

வரச்சொல்லும் தோழிகளா!

முதலிரவில் கட்டில்மீது மலர் தூவுவார்கள் என்று தெரியும். அதில் என்ன குறிப்பாக அனிச்ச மலரணை?

அதற்குமுன்னால், கட்டில்மீது எதற்குப் பூவைத் தூவுகிறார்கள்?

என்னதான் மென்மையான மெத்தையாக இருப்பினும், அதில் சில நுட்பமான தூசுகள் இருந்தே தீரும், அவை நாயகன், நாயகியின் உடலை உறுத்திவிட்டால் காதல் நாடகத்துக்கு இடைஞ்சல் இல்லையா?

அதைத் தவிர்ப்பதற்காகதான் மெத்தையின்மீது மலர்களைத் தூவுகிறார்களாம். அவை உடம்பை உறுத்தாது, மென்மையாக ஒத்தடம்தான் கொடுக்கும்.

பொதுவாக எல்லா மலர்களுமே (காலிஃப்ளவர்தவிர) மென்மையானவைதான். அவை செடியில் இருக்கும்வரை அழகு, பறிக்க முயன்றாலே கொஞ்சம் சிதையும், பறித்துவிட்டால் வாடத் தொடங்கிவிடும்.

அதிலும் குறிப்பாக, அனிச்ச மலர் மிகவும் மென்மையானது. அதைப் பறிக்கக்கூட வேண்டாம், சும்மா முகர்ந்து பார்த்தாலே குழைந்து துவண்டுவிடும்.

இதைதான் திருவள்ளுவர் தாடியைத் தடவியபடி சொன்னார், ‘மோப்பக் குழையும் அனிச்சம்!’

’மோத்தல்’ என்றால் முகர்ந்து பார்த்தல், ‘நாய் மோப்பம் பிடிக்கிறது’ என்கிறோமே, அதே மோப்பம்தான் இதுவும்.

இதே சொல் குடும்பத்தைச் சேர்ந்த இன்னொரு பிரபலமான சொல், ‘முகர்தல்’. ‘அவன் நறுமணத்தை நன்கு முகர்ந்தான்’ என்று படித்திருப்போம்.

சிலர் இதனை ‘நறுமணத்தை நுகர்ந்தான்’ என்றும் எழுதுவார்கள். அது சரியா?

‘நுகர்தல்’ என்றால் பயன்படுத்துதல் என்று அர்த்தம். ’நுகர்வோர் உரிமைச் சட்டம்’ என்று செய்திகளிலும் ‘நுகர்வோரே! விழித்திடுங்கள்’ என்று தூர்தர்ஷன் விளம்பரங்களிலும் இதைக் கேட்டிருப்போம்.

ஆக, ‘நறுமணத்தை நுகர்ந்தான்’ என்றால், நறுமணத்தைப் பயன்படுத்தினான் என்றுதான் அர்த்தம். ‘நறுமணத்தை முகர்ந்தான்’ என்றால் மூக்கால் வாசனை பிடித்தான் என்று அர்த்தம்!

சுற்றிவளைத்துப் பார்த்தால், இரண்டும் ஒன்றுதானோ?!

***

என். சொக்கன் …

27 09 2013

300/365