காதலோடு ஒருத்தி

ஆண்டாளின் பாடல்களைப் புரிந்து கொள்ள என்ன தெரிய வேண்டும் என்று கேட்டால், “காதல் தெரிய வேண்டும்” என்பேன்.

பொதுவாகவே காதலர் இருவர் கருத்தொருமித்து களித்து மகிழ்ந்திருப்பதே காதல் என்பது இலக்கணம். அதாவது முருகனையும் வள்ளியையும் போல.

ஆனால் கடவுளைப் போல காதலும் எந்த இலக்கணத்துக்குள் கட்டுப்படுவதே இல்லை என்று உலகைப் பார்த்தால் புரிகிறது.

பாடப்பட்ட காதல் ஆயிரம் வகை என்றால் பாடப்படாதவை கோடி வகைகள் இருக்கும்.

ஆண்டாளின் காதல் வழக்கமான காதலில் இருந்து விலகியதுதான். ஏன் விலகியது?

கண்ணோடு கண் பார்த்து… சொல்லோடு சொல் கேட்டு.. கையோடு கை சேர்த்து… மனம் சேர்ந்து உடல் சேர்ந்து இன்பம் சேர்ந்த காதலல்ல அவளது காதல்.

அவன் தலைவன். பெரியவன். புகழ் வாய்ந்தவன். உலகம் பாராட்டும் ஒருவனை எட்டாத தூரத்தில் இருந்து எட்டும் எண்ணத்தால் காதலித்தாள் ஆண்டாள்.

அதனால்தானோ என்னவோ… அவளுக்குத் திருமணம் கூட கனவில்தான் வந்தது.

வாரணம் ஆயிரம் வந்ததும் அவைகளின் நடுவில் நாரணன் நம்பி வந்ததும் நடந்ததும்… அவனைப் பூரணப் பொற்குடம் வைத்து வரவேற்றதும்… அவன் கையால் திருமாங்கல்யம் கொண்டதும் கனவில்தான் நடந்தது. கனாக் கண்டேன் தோழி என்றுதானே சொல்லியிருக்கிறாள் ஆண்டாள்.

இன்றைக்கு எத்தனையோ பெண்கள் திரைப்பட நடிகர்களை மனதுக்குள் விரும்புகிறார்களே… அதுவும் ஒருவகைக் காதல்தான். ஆண்டாள் காதல் என்றே அதை வகைப்படுத்தலாம். புத்திசாலிப் பெண்கள் அதிலிருந்து ஏதோ ஒரு நேரத்தில் வெளிவந்து விடுகிறார்கள்.

ஆண்டாள் காதலில் இருந்து அப்படி வெளிவராதவள் தென்றல் திரைப்படத்துக் கதாநாயகி. எழுத்தை விரும்பியவள் எழுதியவனையும் விரும்பினால் அவள் தலையெழுத்தை எழுதியவனா சேர்த்து வைப்பான்?

ஆண்டாளைப் போல அவளும் கனவில்தான் பாடினாள் ஆடினாள் கூடினாள். நினைவிலோ அவனை ஓயாமல் தேடினாள்.

எங்கேயோ ஏதோ ஒரு தெய்வம் ஏதோவொரு மகிழ்ச்சியில் அவள் ஆசைக்கு வாழ்த்து சொல்லிவிட்டது. ஆம். எப்படியோ அவனை ஒரேயொரு இரவுக்கு கூட்டி வந்துவிட்டது.

அவன் அத்தனை இரவுகளைக் கண்டவன். வகைவகையாய் பெண்களை உண்டவன். அவனுக்கு அது எத்தனையோ இரவுகளில் ஒரு இரவு. ஆனால் அவளுக்கு எத்தனையோ இரவுகளின் ஏக்கம் தீர்க்கும் ஓர் இரவு.

இரவு முழுக்க அவன் மகிழ்ந்தான். வாழ்க்கையின் எல்லா இரவுகளுக்கும் சேர்த்து அவள் மகிழ்ந்தாள்.

அந்த மகிழ்ச்சியைப் பாட்டில் எழுத வேண்டும் என்று சொன்னால்…..

வித்யாசாகர் இசையில் இதை எழுதிய கவிஞர் பெயர் தெரியவில்லை. பாடியவர் ஷிரேயா கோஷல்.

ஏ பெண்ணே ஏ பெண்ணே என்னாச்சு
ஏனிந்த உற்சாகப் பெருமூச்சு

ஏக்கத்தில்தானே பெருமூச்சு வரும்! உற்சாகத்தில் வருகிறது என்கிறார் கவிஞர். அவர் என்ன சொல்ல வருகிறார் என்று விளக்கிச் சொன்னால் எனக்கு இங்கிதம் இல்லை. விளக்கச் சொன்னால் கேட்டால் கேட்பவர்களுக்கு அனுபவங்கள் இல்லை.

அவள் எத்தனை முறை அவள் உள்ளம் கவர்ந்த எழுத்தாளனுக்கு தூது விட்டிருப்பாள். அந்தத் தூதுகளை எல்லாம் எடுத்துச் செல்ல அன்னமும் மேகமும் தென்றலும் உதவவில்லை. உள்ளத்துக்கும் உள்ளத்துக்கும் தூது விட இவையெல்லாம் எதற்கு?

உன் வீட்டை தேடி என்றும்
என் அன்னம் வந்ததில்லை
நான் சொல்லும் சேதி ஏந்தி
என் தென்றல் சென்றதில்லை
என் ஆசை நினைவை அள்ளி அள்ளி
மேலே ஊற்றி கொள்வேன்

ஓரிரவுதான் என்றாலும் ஆணும் பெண்ணும் கூடினால் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதுதானே. அவளுக்கும் ஒரு மகன் பிறந்தான். அவனைப் போலவே.

நதியின் துளியொன்றை
மகனாக வென்றேன்
இது எங்கோ செல்லும் பாதை
நான் தீயை தீன்ற சீதை
என் கையில் கொஞ்சும் மழலை
நான் வேண்டி பெற்ற சிலுவை
என் நெஞ்சுக்குள்ளே ஆடும் ஆடும்
நில்லா ஊஞ்சல் நீயே
ஒரு போதும் என்னை நீங்கிச் செல்லா
நீயும் எந்தன் தாயே

யாரும் சுமக்க விரும்பி சிலுவையைக் கேட்பதில்லை. ஏசுநாதர் கூட “கடவுளே என்னை ஏன் கைவிட்டீர்” என்று சொன்னதாக பைபிள் சொல்கிறது. அப்படியெல்லாம் கேட்காமல் வேண்டிப் பெற்ற சிலுவையாய் மகனைச் சுமந்த தாய் அவள்.

இவள் யார்? நல்ல பெண்ணா? நல்ல அன்னையா? நல்ல காதலியா? நல்ல சமூகப் பிரதிநிதியா? நல்ல ரசிகையா?

இல்லை. எதுவுமே இல்லை. இவளும் கற்புக்கரசிதான் என்று கவிஞர் ஏற்றுக் கொள்கிறார். அதனால்தான் அவளை தீயைத் தின்ற சீதை என்கிறார். ஒருவகையில் பார்த்தால் ஆண்டாளையும் சீதையின் இடத்தில்தானே வைத்திருக்கிறோம்.

சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது என்றும் ஒரு கவிஞர் எழுதினார். ஆனால் இந்த தென்றல் திரைப்படத்து ஆண்டாளின் காதல் சொர்க்கத்தில் சேர்ந்ததோ இல்லையோ… அவளுக்கென்றே உருவான சொர்க்கத்தில்தான் அவள் இருந்திருப்பாள்.

அன்புடன்,
ஜிரா

299/365