வீரமுண்டு வெற்றியுண்டு

ஏதோ விளாடிமிர் புடின் புண்ணியத்தில் ஒரு போர் தற்காலிகமாக கைவிடப்பட்டிருக்கிறது. அல்லது தள்ளிப் போடப்பட்டிருக்கிறது யார் சரி யார் தவறு என்பதல்ல கேள்வி.  பெஞ்சமின் ஃப்ரங்க்ளின் சொன்னதுபோல்  There was never a good war or a bad peace.

போர் என்பது மனிதனின் இயற்கையான குணம். அதுதான் factory setting!. ஒருவனோடு ஒருவன் போரிடுதலும் அழித்தலும் உலகத்து இயற்கை என்று புறநானூறு.சொல்கிறது

ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்

புதுவதன்று இவ்வுலகத்து இயற்கை

சங்ககால வீரர்கள் போர் வேட்கை உடையவர்களாய் இருந்தனர். பொதுவாகப் போர் என்பது இரு வேந்தர்களுக்கிடையே நடைபெறும் செயலாகும். இன்று நாடுகளுக்கிடையே நடக்கிறது. .

இந்தியா சந்தித்த போர்கள் அதிகமில்லை. ஆனால் சுற்றியிருக்கும் எல்லா நாடுகளும் இந்தியாவை எப்போதும் சீண்டிக்கொண்டே இருக்கும் நிலை. அதனால் நம் தேசம்  ஒரு நிரந்தர பதட்டத்துடன் இருக்கும். பாகிஸ்தானை விடுங்கள். அது பங்காளிச் சண்டை. காரணங்களே தேவையில்லை. கிரிக்கெட்டில் தோற்றால் போர். திரைப்படம் / புத்தகம்  வந்தால் போர். இதை ஊதி ஊதி பெரிதாக்க நிறைய குரல்கள். ஆனால் சீனா? சமீபத்தில் சீனா மறுபடியும் நம் எல்லைக்குள் நுழைந்து இந்திய எல்லைப் பகுதியில் 3 நாட்களுக்கு மேல் தங்கியிருந்தது பற்றி இந்தியா டுடே (இதுவும் தி இந்து மாதிரி தானே?) யில் செய்தி படித்தேன்.

சீனா 1962 ல் இந்தியா எல்லையை ஆக்ரமித்தது பற்றி பள்ளியில் படித்திருக்கிறேன். அப்போது தேசிய உணர்வைத் தூண்டுவதற்காக தயாரிக்கப்ப்ட்டு வெளிவந்த இரத்த திலகம் படத்தில் கண்ணதாசன் புத்தன் வந்த திசையிலே போர் என்று ஒரு பாடல் இசை கே வி மகாதேவன் பாடியவர் டி எம் எஸ்) எழுதினார். ஒவ்வொரு வரியும் முத்து.

http://www.youtube.com/watch?v=5aigM0TMAOA

 புத்தன் வந்த திசையிலே போர்

புனித காந்தி மண்ணிலே போர்

சத்தியத்தின் நிழலிலே போர்

தர்மத் தாயின் மடியிலே போர்

போர் நடக்கும் திசை சொல்லி பகைவன் நம் எல்லைக்குள் வந்ததையும் சொல்லி சத்தியம் தர்மம் இரண்டும் நம் பக்கம் என்று விளக்கும் வரிகள். ஒவ்வொரு குடிமகனையும் போர் முனைக்கு அழைக்கும் பாடல்

பரத நாட்டுத் திருமகனே வா

பச்சை ரத்தத் திலகமிட்டு வா

பொருது வெங்களத்தை நோக்கி வா

பொன்னளந்த மண்ணளக்க வா வா

‘தென் பாலிலங்கை வெங்களம் செய்தனம் விண்ணோர் பிரானார்’ என்று திருமங்கையாழ்வார் சொன்ன வெங்களம் பெரும் அழிவை கண்ட போர்க்களம். அந்த ஒரு வார்த்தையில்  போர் முனைக்கு வருபவனுக்கு அங்கே இருக்கும் நிலவரம் பற்றி ஒரு status update. நமக்கு பொன்னை வாரி வழங்கிய தாய் மண்ணை மீட்டு அளக்க ஒரு அழைப்பு

மக்களுக்கு புத்தி சொல்லி வா

மனைவி கண்ணில் முத்தமிடடு வா

பெற்றவர்க்குத் தாள் வணங்கி வா

பேரெடுக்கப் போர் முடிக்க வா வா வா

பெற்றோர், மனைவி, மக்கள் என்று எல்லாருக்கும் என்ன செய்துவிட்டு வரவேண்டும் என்றும் சொல்லிவிட்டார். No excuses.

மறுபடிக்கும் வீழ்வதில்லை வா

மரணமேனும் பெறுவதென்று வா

பருவ நெஞ்சை முன் நிமிர்த்தி வா

பகைவனுக்கும் ஓர் உயிர் தான் வா வா

நிலைத்திருக்கும் பேரெடுக்க வா என்றுதான் அழைக்கிறார். ஆனால் குறைந்தபட்ச உத்திரவாதம் மரணம்!  முத்தாய்ப்பாக அமைந்திருக்கும் பகைவனுக்கும் ஓர் உயிர் தான் வா என்பது ஒரு அற்புதமான கருத்து.

மோகனகிருஷ்ணன்

298/365