யாரோ ஆட்டும் பொம்மை

  • படம்: பார்த்தாலே பரவசம்
  • பாடல்: பார்த்தாலே பரவசமே
  • எழுதியவர்: நா. முத்துக்குமார்
  • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
  • பாடியவர்கள்: ரெஹானா, கங்கா, ஃபெபி, ஃபெஜி, பூர்ணிமா
  • Link: http://www.youtube.com/watch?v=65jlOHVvg9A

ராத்திரியின் சொந்தக்காரா, ரகசியப் போர் வித்தைக்காரா,

முத்தத்தால் வன்முறை செய்வாயா?

பார்த்தாலே பரவசமே!

’வசம்’ என்ற சொல்லை, ஏதோ ஒன்றைத் தன்னிடம் வைத்திருப்பது என்கிற பொருளில் பயன்படுத்துகிறோம். உதாரணமாக, ‘இந்தப் பையன் கைவசம் நிறைய திறமைகள் இருக்கு!’

இதையே செயலாகவும் குறிப்பிடலாம், ‘என்ன மாயமோ, அந்தப் பொண்ணு என் பையனை அப்படியே வசப்படுத்திட்டா!’

இப்படிப்பட்ட ஒரு நிலையைதான் ‘பரவசம்’ என்கிறோம், பர + வசம், அதாவது, ஒருவர் தன்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை, சுய வசத்தில் இல்லை, இன்னொருவருடைய, அல்லது இன்னொன்றுடைய (பர) வசத்தில் இருக்கிறார். தேசி, பரதேசிபோல, வசம், பரவசம்.

இந்தப் பாடலில் காதலனைச் சூழும் பெண்கள் உன்னைப் ‘பார்த்தாலே பரவசம்’ என்கிறார்கள். அதாவது, ‘டேய், உன்னைப் பார்த்தாலே போதும், அடுத்த விநாடி எங்க மனசு எங்க கையில இருக்கறதில்லைடா!’

இதையே கோயிலில் கடவுள் முன்னால் நிற்கும்போதும் சொல்லலாம். கண்ணனைப்பற்றி ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் ‘பால் வடியும் முகம், நினைந்து நினைந்து என் உள்ளம், பரவசம் மிக ஆகுதே’ என்று பாடுவார்.

இந்தப் பரவசத்துக்கு ‘இன்னொருவர் வசம்’ என்பதைத்தவிர இன்னோர் அர்த்தமும் சொல்லலாம்: பரவசம் = பரன் + வசம்.

பரன் என்றால் கடவுள், பரவசம், பரன் + வசம் என்றால் கடவுளின் வசம், ‘நானா இயங்குகிறேன்? என்னை ஆட்டுவிப்பவன் அவன் அல்லவா?’ என்கிறார்கள் பக்தர்கள்!

***

என். சொக்கன் …

24 09 2013

297/365