சென்னை செந்தமிழ்!

என்னுடன் லிப்டில் வந்த சிலர் ஒரு குறிப்பிட்ட சமூக / வட்டார மொழியை imitate செய்துகொண்டிருந்தனர். இவர் இப்படி பேசுவார் நமக்கு புரியவே புரியாது என்று யார் தலையையோ உருட்டிக் கொண்டிருந்தார்கள். வழக்கமாக நடக்கும் விஷயம்தான் – திரைப்படங்களில், கதைகளில், பதிவுகளில், சமூக வலைத்தளங்களில் தினமும் பார்க்கும் விஷயம்தான். ஆனால்  வட்டார வழக்கு கேலிக்குரியதா  ? இடம் சார்ந்து அல்லது சமூகம் சார்ந்து அல்லது தொழில் சார்ந்து வழங்கும் வட்டார  வழக்குகள் ஒரு மொழியை சுவாரஸ்யமாக்குகிறது என்பது என் கருத்து.

லிப்டில் பேசியவர்கள் எந்த வட்டாரம் என்று எனக்கு தெரியாவில்லை. ஆனால் அவர்களின் உரையாடலில் ‘மச்சான், பந்தா, பீட்டர், ஃபிலிம் காட்டறது’ போன்ற வார்த்தைகளை மிகவும்  சரளமாக தெளித்து மகிழ்ந்தனர். அட இந்த வார்த்தைகளும் மெட்ராஸ் பாஷை என்ற ஒரு வட்டார மொழியின் தாக்கம்தானே? இவர்கள் கண்ணாடி வீட்டில் இருந்து கல்லெறிந்தார்களா?

சென்னை மாநகரில் பேசப்பட்டு வந்த பிற மொழிச் சொற்கள் கலந்த தமிழ். சோ வின் Madras by night நாடகம் பார்த்ததிலிருந்தே எனக்கு இந்த மெட்ராஸ் பாஷை  மேல் மிகுந்த ஆர்வம் இருந்தது, அந்த நாளில் ஜாம்பஜார் ஜக்கு என்ற கற்பனை பாத்திரம் ‘அசால்ட்டா’  பேசும் தமிழை ரசித்தேன். சோ,தேங்காய், லூஸ் மோகன் ஜாலியாக பேசிய மொழி. திரைப்படங்களில் கமல் அதை சிறப்பாக நகைச்சுவை முலாம் பூசி மெருகேற்றினார். இந்த மெட்ராஸ் பாஷைக்கு இணையத்தில் நிறைய crash course பதிவுகள் உண்டு. சில அருஞ்சொற்பொருள் பதிவுகளும் உண்டு.

அறுபதுகளின் இறுதியில் வந்த பொம்மலாட்டம் படத்தில் வாலி இந்த மெட்ராஸ் பாஷையில் எழுதிய ஒரு பாடல் பிரபலமானது (இசை வி.குமார் பாடியவர் மனோரமா).

https://www.youtube.com/watch?v=x5qzl4mKCgE

வா வாத்யாரே வூட்டாண்ட

நீ வராங்காட்டி நா வுடமாட்டேன்

ஜாம்பஜார் ஜக்கு நான்

சைதாபேட்டை கொக்கு

வூட்டாண்ட என்றால் என்ன? வீடு தான் வூடு. அண்டை  வீடு என்றால் பக்கத்து வீடு So இதை மாற்றி ‘வீடு அண்டை’ என்ற construction வீட்டுக்கு அருகில் என்ற  பொருள் தருகிறதோ ?

வாராவதிலே நின்னுக்கினிருந்தேன்

அமராவதியாட்டம்

சைட்டடிச்சு நீ ஜகா வாங்கினே

அம்பிகாபதியாட்டம்

வாராவதி ? வார் என்றால் நீர். போக்குவரத்துக்காக ஆற்றின் இரு கரைளை  இணைத்துக் கட்டப்படும் பாலம் தான் வாராவதி. ஆங்கிலேயர் ஒருவர் பெயரால் சென்னையில் ஆமில்ட்டன் வாராவதி எனும் பாலம் ஒன்றுண்டு

லவ்வாப் பாத்து சோக்காப் பேசி

டேக்காக் கொடுத்தே பின்னாலே

சர்தான் வாம்மா கண்ணு  படா

பேஜாராச்சு நின்னு

காதலாகி கசிந்துருகி தான் லவ்வாப் பாத்து. ஆனால் சோக்காப் பேசி?  ஒருவேளை ஜோக் ஆ பேசி சிரிக்க வைத்தான் என்று சொல்கிறாரா ? இருக்கலாம். அடுத்து இந்த பேஜார் என்ற வார்த்தை. நாம் எல்லாரும் உபயோகிக்கும் சொல்.  ஆங்கிலேயர்கள் dont badger me (என்னை நச்சரிக்காதே) என்று சொன்ன அந்த badgerஐ, கொஞ்சம் டிங்கரிங் செய்து  பட்டி பார்த்து பேஜார் ஆக்கிவிட்டார்கள்.

நைனா உன் நெனப்பாலே நான் நாஸ்தா பண்ணி நாளாச்சு

மச்சான் ஒன் மூஞ்சப் பார்த்தேன்

சால்னா நெனப்பு வந்தாச்சு

ஆயாக்கடை இடியாப்பம் நான்

பாயாக்கறியும் நீயாச்சு

வா வா மச்சான் ஒண்ணா சேந்து

வாராவதிக்கே போகலாம்

நீ காற்று நான் மரம் என்றும் சொல்லலாம். குயிலாக நீ பாட்டாக நான் என்று சொல்லலாம்  நான் ஆயாக்கடை இடியாப்பம் நீ பாயாக்கறி என்றும் சொல்லலாம். அதே அர்த்தம் தானே?  குறிலாக நான் இருக்க, நெடிலாக நீ வளர்க்க ,சென்னை தமிழ் சங்க தமிழ் ஆனதடி என்று அறிவுமதி  சொல்வது சரிதானே?

ஜாலியான மொழி. Kerosene என்பதை ‘கிருஷ்ணா’யில் என்றும் Palm Oil என்பதை ‘பாமா’யில் என்றும் புராண வாசனையுடன் சொன்ன அருமையான மொழி. இதை மறக்க முடியுமா?

மோகனகிருஷ்ணன்

292/365