விருந்தினர் பதிவு: பூச்சரமே

சாதி மல்லிப் பூச்சரமே ..சங்கத் தமிழ்ப் பாச்சரமே ஆசையின்னா ஆசையடி அவ்வளவு ஆசையடி ”

சிறு வயதில் பாரதிதாசன் பற்றி பாட நூலில் படித்த பொழுது ஒரு பெண் எப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்று “இருண்ட வீடு” கதையிலும் எப்படி இருக்க வேண்டும் என்று “குடும்ப விளக்கு ” கதையிலும் ொல்லி இருப்பார் என்று தேர்வு நிமித்தம் படித்ததோடு சரி . அதன் பிறகு அதனை மறந்தே போனேன்.

கணவருக்கு ஊட்டி விடுவது பற்றி @amas32 ஒரு ட்வீட் போட நான் பதிலுக்கு அப்படி ஒரு கற்பனை செய்து பார்த்தேன் என்று கிண்டலடிக்கவும் @nchokkan நீங்கள் பாரதிதாசனின் குடும்ப விளக்கு படியுங்கள் என்று காரணம் சொல்லாமல் ிங்க் கொடுத்துவிட்டுப் போய்விட்டார் .சரி என்று படித்துக் கொண்டிருக்கும் பொழுதே “குடும்ப விளக்கு” க்குத் தக்கவாறு இந்தப் பாடல் வெகுவாகப் பொருந்திப் போவதை உணர்ந்தேன். ஒருவேளை அவர் இப்பொழுது எழுதி இருந்தால் பெண்ணீய வாதிகள் எவரேனும் சண்டைக்கு வந்தாலும் வரலாம் 🙂 ஆனால் இப்பொழுது படித்தாலும் இனிக்கவே செய்கிறது 🙂

ஆணோ , பெண்ணோ இருவரும் அன்புக்குக் கட்டுப்பட்டு அடிமைத் தனத்தை விரும்பி ஏற்கும் பொழுது ஆணாதிக்கம் பெண்ணீயம் அனைத்தும் ஒரு புள்ளியில் மறைந்தே போகின்றது .

“குடும்ப விளக்கில்”பகல் முழுக்க அவள் செய்யும் வேலைகள் அவள் குடும்பம் நடத்தும் பாங்கு என்று விவரித்து விட்டு சின்னச் சின்ன அன்புப் பரிமாற்றங்களையும் சொல்லி விட்டு இரவு நேரத்தில் ஓர் அறைக்குள் நாயகனும் நாயகியும் இணைந்து நிற்கும் தருணம் , சற்றே ஆர்வக்கோளாறில் நாற்காலியை இழுத்துப் போட்டு சீட்டின் நுனியில் அமர்கிறேன் அடுத்து என்ன சொல்லப் போகிறாரோ என்று 🙂

ஆனால் நாயகி கவலையுடன் நாட்டுக்கு என்ன செய்தோம் என்ற பேச்சை ஆரம்பிக்கிறாள் இந்தக் காட்சியின் அடிப்படையில் சற்றே உல்டாவாக , தலைவன் தலைவிக்கு சொல்லும் விதமாக கவிஞர் புலமைப் பித்தன் வெகு அழகாகஎழுதியுள்ள பாடலே இது .

​எனக்கு இது மறக்க முடியாத பாடலாகிப் போனதற்கு காரணம் ஒன்று உண்டு ​.கல்லூரியில் பாட்டுப் போட்டியில் தோழிக்கு இந்தப் பாடலைப் பரிந்துரை செய்திருந்தேன். அவளும் சரி என்று சொல்லி விட்டு அங்கே பாடறியேன் படிப்பறியேன் பாடி விட்டாள் .மைக் முன்பு அவள் நிற்கும் வரை பாடலை மாற்றுவதைப் பற்றி அவள் சொல்லவே இல்லை. அதிலே ஒரு வருத்தம் அவள் மீது. அதனால் பாடலைக் கேட்கும் பொழுது அந்த நினைவுகளும் கோர்வையாக வந்து விழும் .

“சாதி மல்லிப் பூச்சரமே ” முத்ல் வரியே தகராறாக ஒரு முறை விவாதித்தோம் ட்விட்டரில் 🙂 சாதி மல்லி என்பது பிச்சி என்று @anu_twits சொல்ல இல்லை இல்ல மல்லிகையில் உயர் தரம் வாய்ந்த மல்லிகை என்று நான் சொல்ல ஒரே பூ வாசனை டைம் லைனில் ஒரு மணி நேரத்திற்கும் மேல். இன்றுவரை பிச்சியை சாதி மல்லியாக நான் ஒத்துக் கொள்ளவே இல்லை போலவே அவரும் 🙂

புதுப் புது அர்த்தங்களில் விளைந்த கருத்து வேறுபாடுக்குப் பிறகு ராஜாவும் பாலசந்தரும் கை கோர்க்கவே இல்லை .ராஜா ஜாம்பாவானாக வலம் வந்து கொண்டிருந்ததருணத்தில் துணிந்து வேறு ஒருவரை இசையமைப்பாளராகப் போட்டு பால சந்தர் எடுத்த ரிஸ்க்குக்கு தான் தகுதியானவன் என்று நிரூபித்து இருக்கிறார் மரகத மணி . பாடல்களெல்லாம் முத்துகள் . MSV யோ இளையராஜாவோ ,மரகதமணியோ ,AR ரகுமானோ தனக்குத் தேவையான பாடல்களைக் கறந்து விடுவதில் இயக்குநர் KB வல்லவர் என்றே அவரின் படங்களில் இடம்பெற்ற பாடல்கள் பறை சாற்றுகின்றன .

இந்தப் பாடலுக்கான பின்னணி வெகு சுவ்ராசியம்.அதிலே பாரதிதாசனின் பாடலைப் புகுத்த வேண்டும் என்ற யோசனைக்காக இயக்குனருக்கு ஒரு ஷொட்டு. ஒருவர் ட்வீட் கூட RT ஆகி வந்தது இது போன்று சினிமாவில் புகுத்தப் பட்ட பாரதியார் பாரதிதாசன் பாடல்களை மட்டுமே பெரும்பாலோனோர் இதுவரை அறிந்திருக்கிறோம் என்று . .நிதர்சனமான உண்மை. ஆக சினிமா என்ற மாபெரும் ஊடகம் மூலமாக எடுத்துச் செ(சொ)ல்லப் படும் சேதிகள் தக்க வீரியத்தோடு மக்களைச் சென்றடையும்.அதனால் படத்திற்குத் தகுந்தாற்போல் மிகப் பொருத்தமாக உறுத்தாமல் KB உட்புகுத்தியதைப் போல வரும் தலைமுறை இயக்குனர்களும் செய்தால் நலம் .

வெள்ளை &வெள்ளை கருப்புக் கண்ணாடியில் மம்முட்டி இன்னும் அழகுடன் மிளிர பாடலின் வீணை இடையிசைக்கெல்லாம் துள்ளலுடன் பானுவின் இடையும் அசைகிறது.தான் விரும்பிய் காதலன் தன் பெயரை உச்சரிக்க வேண்டும் என்று கண்மணி என்று மாற்றி எழுதுவதும் அதை வேறு ஒருவருக்குச் சமர்ப்பிப்பதில் அதிர்ந்தும் போவதுமாக கீதாவின் நடிப்பு கனகச்சிதம் .

“எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா
இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா ”
“யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி
பாடும் நம் தமிழ்ப் பாட்டன் சொன்னது கண்மணி”

யாதும் ஒரே யாவரும் கேளிர் எனச் சொன்னது கணியன் பூங்குன்றனார் ..பாரதிதாசனோடு அவரையும் உள்ளிழுத்து விட்டார் புலமைப் பித்தன்

பாடல் ஆரம்பிப்பதுக்கு முன்பு அழகான உச்சரிப்போடு ஏற்ற இறக்கத்துடன் மம்முட்டி சொல்வதும் அழகு.உதாரணம் கன்னித் தமிழ் தொண்டாற்று அதை முன்னேற்று “பின்பு ” என்பதை நிறுத்திச் சொல்லி கட்டிலில் தாலாட்டு என்பார்.

தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியின் கொதிப்பினை நினைவூட்டும் விதமாக “உலகம் யாவும் உண்ணும் போது நாமும் சாப்பிட எண்ணுவோம் ” என்ற வரிகள் இருக்கின்றது .காதல் மொழி பேச வேண்டிய தருணத்தில் நாட்டைப் பற்றிக் கவலைப் பற்றி அக்கறைப் படுவது நமக்கு இந்த காலத்தில் மிகை தான் . குறைந்த பட்சம் இப்படி கற்பனையிலாவது நடக்க்கிறதே என்று எண்ணிக் கொள்ள வேண்டியதுதான் 🙂

ஒரு இசைக்கு பானு சரிவான பகுதியில் சடசடவென ஆடிக்கொண்டே இறங்குவார் ..அந்த இசைக்கு அக்காட்சியமைப்பு அவ்வளவு பொருத்தம் . பொதுவாக ஒரு காரியம் ஆக வேண்டும் என்றால் என் செல்லம் இல்ல கண்மணி,ராசாத்திஎன்ற அழைப்புகள் சொல்லிக் காரியம் சாதிப்பதுண்டு தலைவனும் தலைவியை அவ்வாறே கொஞ்சி காரியம் சாதிக்கப் பார்க்கிறார் 🙂 “கேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாடாச்சு இந்த நாட்டுக்கு நாமாச்சு ”

வெறும் பாடலோடு நிறுத்தாம பாரதிதாசனின் அந்தக் கவிதையோடும் ,பின்னணிக் காட்சியோடு சேர்த்தே ரசிக்க ​
http://www.youtube.com/watch?v=9G8e0uaWzLw

உமா கிருஷ்ணமூர்த்தி

தென் மதுரைச் சீமையைச் சேர்ந்தவர். ட்விட்டரில் பெரியாள். தன்னுடைய வலைப்பதிவுக்கு (http://umakrishhonline.blogspot.in/) ”நிச்சயம் புரட்சிப்பெண் அல்ல, மனித கூட்டங்களின் நடுவே எனக்கென்று ஒரு அடையாளத்தை மட்டுமே விரும்புகின்றேன்” என்று Tagline வைத்திருக்கிறார்.

”வேற எதாவது சொல்லுங்க” என்றால் இப்படிப் பதில் வருகிறது: “மண் சட்டியில் சோறு ஆக்கி விளையாடுவது பிடிக்கும். பல்லாங்குழி வீட்டில் வைத்து இருக்கிறேன். மழை நின்றபிறகு மரத்தில் உள்ள நீரை உதிர்த்து விளையாடுவது பிடிக்கும். ஆற்று மணலில் வீடு கட்டி விளையாடுவது பிடிக்கும்”