ளழளழ
- படம்: பயணங்கள் முடிவதில்லை
- பாடல்: ஏ ஆத்தா
- எழுதியவர்: கங்கை அமரன்
- இசை: இளையராஜா
- பாடியவர்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
- Link: http://www.youtube.com/watch?v=FkTJXOAuld4
சிரிச்ச சிரிப்புல சில்லறையும் சிதறுது,
செவந்த தேகம் கண்டு என் மனசு பதறுது,
பவள வாயில தெரியுற அழக,
பார்த்ததுமே மனசும் பட்டுத் துடிக்குது!
’பச்சை மாமலைபோல் மேனி, பவள வாய் கமலச் செங்கண்’ என்பது தொண்டரடிப்பொடியாழ்வார் எழுதி மிகப் பிரபலமான பிரபந்தப் பாடல். அதில் வருவது பவள வாய். ளகரம்.
இந்த சினிமாப் பாடலில் கங்கை அமரனும் ‘பவள வாய்’ என்றுதான் எழுதியிருக்கிறார். பாடிய SPBயும் தெளிவாக ளகரம் சேர்த்துப் பாடுகிறார்.
ஆனால் பலர் ‘பவழம்’ என்றும் எழுதுகிறார்கள். அப்படியானால் ஆழ்வாரும், கங்கை அமரனும் எழுதியது தவறா? அல்லது, அவர்கள் எழுதியபடி ‘பவளம்’தான் சரியா?
தமிழ் இலக்கணத்தில் ’போலி’ என்று ஒரு சமாசாரம் உண்டு. ஒரு சொல்லில் உள்ள ஓர் எழுத்து (அல்லது சில எழுத்துகள்) முறைப்படி எழுதவேண்டிய வழக்கத்திலிருந்து மாறிக் காணப்படும். பின்னர் அதை அப்படியே மக்கள் பயன்படுத்திப் பயன்படுத்தி அதுவே நிலைத்துவிடும்.
உதாரணமாக, ‘மனம்’ என்பது ‘மனது’ அல்லது ‘மனசு’ என்று மாறும். ‘ஐந்து’ என்பது ‘அஞ்சு’ என மாறும். இவற்றை ‘நாலு வரி நோட்’டில் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்.
அதன்படி, இங்கே பவளம், பவழம் இரண்டில் ஒன்றுதான் சரி, இன்னொன்று போலி என்று நாம் ஊகிக்கலாம். அதாவது, பவளம் சரி என்றால், பவழம் போலி, அல்லது Vice Versa.
பெரும்பாலானோர் ‘பவழம்’தான் சரி, ழகரம் உச்சரிக்க வராத மக்கள் அதைப் ‘பவளம்’ என்று மாற்றிவிட்டதாகச் சொல்கிறார்கள். எனக்கு அது சரியாகத் தோன்றவில்லை.
காரணம், தமிழில் ழகரம் வரும் சொற்கள் ஏராளமாக உள்ளன. அவை எல்லாமா ‘ளகர’த்துக்கு மாறிவிட்டன? பவழம்தான் சரி, பவளம் போலி என்று உறுதியாகச் சொல்லத்தக்க சான்றுகள் எனக்குத் தெரிந்து இல்லை.
பவளம், பவழம் இரண்டும் ஒரே மீட்டர் (புளிமா). எனவே, இவற்றில் ஒன்றைத் தூக்கிவிட்டு இன்னொன்றை அங்கே சுலபமாக வைத்துவிடலாம். ஒரு பாடலின் ஒலி அழகு கெடாது.
அதேபோல், பவ’ள’ம், பவ’ழ’ம் என்ற சொல் இணையில் பிரச்னைக்குரிய எழுத்து (ழ அல்லது ள) மூன்றாவதாக இருக்கிறது. எனவே, மரபுக் கவிதைகளில் வருகிற எதுகை நயத்தை வைத்தும் இவற்றில் எது சரி என்று நாம் கண்டுபிடிக்கமுடியாது.
ஆக, பவளமா, பவழமா என்கிற கேள்விக்கான விடையை நாம் மரபுக்கவிதை இலக்கணத்தை வைத்தும் பெற இயலாது.
இதன் அர்த்தம், ‘ஐந்து’ என்பது சரி, ‘அஞ்சு’ என்பது போலி என்று உறுதியாகச் சொல்வதைப்போல், பவளம், பவழம் விஷயத்தில் நம்மால் ஓர் உறுதியான தீர்மானத்துக்கு வர இயலவில்லை. பழந்தமிழ் இலக்கியங்களில் பவழம், பவளம் இரண்டுமே பயன்பட்டுள்ளன.
ஆகவே, இவற்றில் ஒன்று போலியாக இருந்தாலும்கூட, நெடுநாளாகப் பயன்பாட்டில் உள்ளதால் எது நிஜம், எது போலி என்பதே தெரியாத அளவுக்கு மயங்கிவிட்டோம்!
பவளமோ பவழமோ, பொதுவாகச் செக்கச் சிவந்த உதட்டுக்குதான் உவமையாகச் சொல்லப்படும். அதைப் பார்த்த மோகத்தில் வாய் குழறுவது சகஜம்தான்!
***
என். சொக்கன் …
18 09 2013
291/365
amas32 9:21 pm on September 18, 2013 Permalink |
எது நிஜமோ எது போலியோ தெரியாது ஆனால் பவளம் என்று சொல்லும் போது காதுக்கு இனிமையாக உள்ளது. அதே போல பவளமோ பவழமோ எந்தப் பெயரில் சொன்னாலும் மாலை ஒரே மாதிரி அழகாகத் தான் இருக்கும்.
“A rose by any other name would smell as sweet” :-))
amas32
elavasam 9:38 pm on September 18, 2013 Permalink |
மதில் மதிள், உளுந்து உழுந்து, மங்கலம் மங்களம் என்பதிலும் கூட இந்த மயக்கம் உண்டு.
போலி என்று ஒன்று இருப்பதால் எல்லாவற்றையும் அதனுள்ளே அடக்கிவிடலாம். தொல்காப்பியரே போலி ஓக்கேன்னு சொல்லிட்டார். எதுவுமே தப்பில்லை என்று வாதாடுபவர்கள் உண்டு. நாளைக்கு வாழை வாளை என்று நம்மால் கெடுக்கப்பட்டவை எல்லாமும் கூட ஏறக்கத்தக்கவையாகிவிடும்.
rajinirams 10:23 pm on September 18, 2013 Permalink |
ஆமாம் சார்,நீங்கள் சொல்வது சரி தான்.கண்ணதாசன் -முத்து “பவளம்” முக்கனி சர்க்கரை மூடி வைக்கலாமா” என்றும் வாலி “பவழ”கொடியிலே முத்துக்கள் பூத்தால் என்றும் இரண்டு மாதிரி எழுதியிருக்கிறார்கள். நன்றி.
Uma Chelvan 3:04 am on September 19, 2013 Permalink |
I thought that it is “பவள கொடியிலே முத்துகள் பூத்தால்”
rajinirams 10:29 am on September 19, 2013 Permalink |
Uma Chelvan பவழக்கொடியிலே முத்துக்கள் தான்-இப்ப கூட கேட்டேன்:-))
Uma Chelvan 6:21 am on September 20, 2013 Permalink
Thanks
க்ருஷ்ணகுமார் 12:24 pm on September 19, 2013 Permalink |
\\\ உதாரணமாக, ‘மனம்’ என்பது ‘மனது’ அல்லது ‘மனம்’ என்று மாறும் \\\
‘மனம்’ என்பது ‘மனது’ என்று மாறும் …..புரிகிறது
‘மனம்’ என்பது ‘மனம்’ என்று மாறும். 😉
புரியல சார்.
என். சொக்கன் 12:27 pm on September 19, 2013 Permalink |
மன்னிக்க, தட்டச்சுப்பிழை, இப்போது சரி செய்துவிட்டேன்