இதோ! இதோ! இதோ! இதோ!!

எங்கள் அலுவலகத்தில் புல் தரைகளும் செடிகளும் மரங்களும் மிகச்சிறப்பாகப் பேணப்படும். ஒரு கட்டிடத்திலிருந்து இன்னொரு கட்டிடத்துக்கு நடந்து செல்லும் போது கல் பாவிய புல் தரை மீதுதான் நடந்து செல்ல வேண்டும்.

அந்தக் கல் பாவிய தரையில் சில பூச்சிகளும் நத்தைகளும் அடிக்கடி செல்லும். அவைகளில் சிலபல நடப்பவர் கால் பட்டு நசுங்கிப் போயிருக்கும்.

அதனால்தான் நடக்கும் போது பார்த்துப் பார்த்து நடப்பேன். ஆனால் அதில் ஒரு ஆச்சரியம். ஆம். ஊர்ந்து செல்லும் நத்தைகள் முதுகில் கூடுகளே இருந்ததில்லை. முதன்முதலில் பார்த்த போது அட்டையோ என்று நினைத்ததும் வாஸ்தவம் தான்.

ஆனால் அவை நத்தை என்று தெரிந்து வியந்து போனேன். நத்தை என்றால் முதுகில் ஓடு இருக்கும் என்ற நம்பிக்கை தகர்ந்தது அன்றுதான்.

சிறுவயதில் நான் படித்த நத்தைக்கோட்டை இளவரசி புத்தகத்தின் அட்டைப்படம் இன்னும் நினைவிருக்கிறது. அதில் மிகப்பெரிய நத்தை ஒன்றை குதிரை போல ஏறி இளவரசி ஒருத்தி ஓட்டிச் செல்வது போல வரையப்பட்டிருந்தது.

நத்தை என்றதும் என்னுடைய சிந்தனை அடுத்து ஓடியது ”என் சுவாசக் காற்றே” திரைப்படத்தில் கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதி ஏ.ஆர்.ரகுமான் இசையில் இடம் பெற்ற “திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே நாமும்” என்ற பாடலுக்குதான்.

காட்டுக்குள் ஓடிய இருவர் … இருவர் என்ன இருவர்? அவர்கள் காதலர்கள். இந்தக் காலத்தில் ஆணும் பெண்ணுமாகிய காதலர்கள் என்றும் குறிப்பிட்டு சொல்ல வேண்டியிருக்கிறது.

காட்டின் அழகை இருவரும் ரசித்து கண்களால் ருசித்துப் பாடி ஆடுகிறார்கள். பாடல் முழுவதும் இயற்கை வருணனை விவரிப்புதான். அந்தப் பாட்டிலும் நத்தை வருகிறது. அந்த வரிகளைக் கீழே தருகிறேன். நீங்களே படித்துப் பாருங்கள்.

என் காலடியில் சில வீடுகள் நகருது
இதோ இதோ இதோ இதோ இதோ
ஆஹாஹா வீடுகள் இல்லை நத்தைக் கூடுகளோ
அவை நத்தைக் கூடுகளோ வீடுகள் இடம் மாறுமோ

நத்தைக்கூடு என்று எளிமையாகச் சொல்லி விடுகிறோம். அந்தக் கூடுதான் அதன் வீடு என்பது மட்டும் நமக்குப் புரிவதேயில்லை. நாமெல்லாம் சொந்தமாக ஒரு வீடு வாங்குவற்கு என்னென்ன பாடுபடுகிறோம். ஆனால் நத்தைக்கு மட்டும் பிறக்கும் போதே கடவுள் ஒரு வீட்டைக் கொடுத்து அனுப்புகிறான்.

நத்தைக்கு மட்டுமல்ல… சிப்பிகளுக்கும் சங்குப்பூச்சிகளுக்கும்தான். அவைகள் எங்கு போனாலும் வீட்டைத் தூக்கிக் கொண்டு செல்லும் அழகுதான் என்ன.

அப்படி சங்குப்பூச்சிகள் அழகாக ஊர்ந்த ஒரு வீதிக்கு சங்குவீதி என்றே பெயர். என்ன? அந்த வீதி எங்கிருக்கிறது என்றா கேட்கிறீர்கள்? திரிகூடராசப்பக் கவிராயரைக் கேட்டிருந்தால் உடனே சொல்லியிருப்பார். அந்த சங்குவீதி இருந்தது குற்றாலத்தில்.

குற்றாலநாதர் சங்கநெடு வீதி தனிலே
உல்லாச மாது ரதிபோல் வசந்தவல்லி
உருவசியும் நாணவே வந்தாள்

அந்தச் சங்கு வீதியில்தான் குற்றாலநாதர் கோயில் இருக்கிறது. அந்த வீதியில் வசந்தவல்லி ஊர்வசியைப் போல ஒய்யாரமாக வந்தாள் என்கிறார் கவிராயர்.

இன்னொரு அழகுமிகு சொல்லாடலும் குற்றாலக் குறவஞ்சியில் இருக்கிறது. எளிமையாகவும் சுருக்கமாகவும் விளக்கிக் கூறுகிறேன்.

நடைகண்டா லன்னம் தோற்கு
நன்னகர் வசந்த வல்லி
விடைகொண்டா னெதிர்போய்ச் சங்க
வீதியிற் சங்கம் தோற்றாள்

வசந்த வல்லியிடம் ஒன்று தோற்றது. ஆனால் வசந்தவல்லி ஓரிடத்தில் தோற்றாள். ஆம். வசந்தவல்லியில் எழிலான நடை கண்டு அன்னம் தோற்றது. அப்படியான அழகு நடையாள் குற்றாலநாதரைக் கண்டு சங்குவீதியில் சங்குவளை பசலையால் தோற்று கீழே விழக்கொண்டாள்.

அதுதான் சங்கவீதியில் சங்கம் தோற்றாள் என்பது. சங்கினால் ஆன வளையல் என்பதால் வளையலுக்குப் பதில் சங்கு என்ற சொல்லையே திரிகூடராசப்பக் கவிராயர் பயன்படுத்தியிருக்கிறார்.

எதையோ சொல்லத் தொடங்கி எங்கேயோ போய் ஏதோவொரு இடத்தில் முடிப்பது நமக்கென்ன புதிதா! இந்தப் பதிவும் அப்படித்தான் இருக்கிறது.

பாடல் – திறக்காத காட்டுக்குள்ளே
வரிகள் – வைரமுத்து
பாடியவர்கள் – உன்னி கிருஷ்ணன், கே.எஸ்.சித்ரா
இசை – ஏ.ஆர்.ரகுமான்
படம் – என் சுவாசக் காற்றே
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=JkRyuEbmXd8கா

அன்புடன்,
ஜிரா

290/365