இல்லற ஜோதி

சில தினங்களுக்கு முன்பு ட்விட்டரில் ஒரு சுவாரசியமான உரையாடல். நான் வழக்கம் போல் பெவிலியன் சீட்டில் உட்கார்ந்து ரசித்துக்கொண்டிருந்தேன். விவாதத்தின் இடையில் நண்பர் @nchokkan பாரதிதாசனின் குடும்ப விளக்கு படிக்க link கொடுத்தார். வாழ்வியல் பற்றிய அருமையான வரிகள். படிக்கும்போதே மனதில் காட்சிகள் விரியும் ஒரு விஷுவல் எழுத்து.

ஒருநாள் நிகழ்ச்சி என்ற முதற் பகுதியின் தலைப்பை படித்தவுடன் எனக்கு ஒரு பாடல் நினைவுக்கு வந்தது. கண்ணதாசன் பாலும் பழமும் என்ற படத்தில் எழுதிய ஆலய மணியின் (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் பி சுசீலா) மனைவி காலை மாலை இரவு என்ற மூன்று காலம் பற்றி பாடுகிறாள்.

https://www.youtube.com/watch?v=GN2a7WO3wkI

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்

என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்

உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்

இளகும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே

ஏழையின் இல்லம் இதுவென்றான் இரு விழியாலே மாலையிட்டான்

காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே

யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே

காலை நேரத்து ஒலிகள், கணவனே கண் கண்ட தெய்வம், மாலையில் அவன் வருகை, யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் என்ற வரிகளில் ஒரு சிறுகதை.

தொடர்ந்து படித்தால் காலை மலர்ந்தது, அவள் எழுந்தாள், கோலமிட்டாள் என்ற தலைப்புகள். அடடா இது போல கண்ணதாசன் பாடல் உண்டே என்றே தோன்றியது. நீ படத்தில் ஒரு பாடல் (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர் பி சுசீலா)

https://www.youtube.com/watch?v=2tDB6NWrXdg

வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்

வள்ளி கணவன் பேரை சொல்லி கூந்தலில் பூ முடித்தேன்

மஞ்சள் கொஞ்சிடும் மங்கள முகத்தில்

குங்குமம் விளங்கட்டுமே –

கைவளையாடலும் காலடி ஓசையும்

வருகையை முழங்கட்டுமே -பாவை

வருகையை முழங்கட்டுமே

இளங்கதிர் கிழக்கில் இன்னும் எழவில்லை, விடியும் வேளைதான். ’தெருக்கதவு சார்ந்ததாழ் திறந்து, அரிசிமாக் கோலம் அமைத்தனள்’ என்ற வரிதான்  ‘வாசலில் கோலமிட்டேன்’ என்று வருகிறதோ?அடுத்த சரணத்தில் மனைவி கணவனை எழுப்பும் ஒரு காட்சி சொல்கிறார்

மார்கழி திங்களை மூடிய பனித்திரை

காற்றினில் விலகட்டுமே -காலை

காற்றினில் விலகட்டுமே

வாடையில் வாடிய மேனியை மூடிய

மன்னவன் விழிக்கட்டுமே – காதல்

மன்னவன் விழிக்கட்டுமே

வாடையில் வாடிய  மேனியை மூடிய மன்னவன் … அருமை!  கண்ணதாசன் பாடல்களை அடுக்கினால்  ஒரு புது குடும்ப விளக்கு கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

மோகனகிருஷ்ணன்

289/365