உதவ வரும் ஆட்டோக்காரன்

  • படம்: பாட்ஷா
  • பாடல்: நான் ஆட்டோக்காரன்
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: தேவா
  • பாடியவர்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
  • Link: http://www.youtube.com/watch?v=zCY6NeOsRvU

இரக்கமுள்ள மனசுக்காரன்டா, நான்

ஏழைக்கெல்லாம் சொந்தக்காரன்டா,

அஜக்குன்னா அஜக்குதான்,

குமுக்குன்னா குமுக்குதான்!

அஜக்கு என்றால் என்ன? குமுக்கு என்றால் என்ன?

பொதுவாக சினிமாப் பாடல்களில் எழுதப்படும் இதுமாதிரி filler சொற்களுக்கு அர்த்தம் தேடக்கூடாது. சும்மா பாடுவதற்கு ஜாலியாக இருந்தால் போதும், அவ்வளவே.

சமீபத்தில் பாரதிதாசன் பாடல்களைப் படித்துக்கொண்டிருந்தேன். அங்கே ‘தமிழர்க்கே சலுகை வேண்டும்’ என்ற பாடலின் நடுவே ஒரு வரி, ‘குமுக்கு சொல்லித் தமுக்கடிப்பீர்’ என்று இருந்தது.

தமுக்கு என்றால் அர்த்தம் தெரியும், அது ஓர் இசைக்கருவி. ஆனால் குமுக்கு? அதற்கு என்ன அர்த்தம்? பாரதிதாசனுமா ஃபில்லர் வார்த்தைகளைப் பயன்படுத்துவார்?

அந்த வரிக்குக் கீழேயே, அதையும் குறிப்பிட்டிருந்தார்கள். ”குமுக்கு = ஆதரவு” என்று.

ஆச்சர்யத்துடன் அகராதியைப் புரட்டினேன். அங்கேயும் ‘குமுக்கு’ என்றால் ‘assistance’ என்று உள்ளது.

ஆக, குமுக்கு என்றால் குமுக்குதான், குமுக்கு என்றால் உதவிதான் என்று அர்த்தம் எடுத்துக்கொள்ளலாம். ஆட்டோக்காரர்கள் நமக்குப் பல உதவிகளைச் செய்கிறார்கள் அல்லவா?

அப்போ அஜக்கு? அதற்கும் அர்த்தம் இருக்குமோ? உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்!

***

என். சொக்கன் …

15 09 2013

288/365