கண்ணை நம்பாதே

டிவியில் தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் பாடல் ஓடிக்கொண்டிருந்தது.அதில் ‘கூட இருந்தே குழி பறித்தாலும்  கொடுத்தது காத்து நிக்கும்’ என்ற வரியைக் கேட்டவுடன் கொஞ்சம் அதிர்ந்து போனேன். எந்த சமயத்திலும் தர்மம் தலை காக்கும் என்று  உணர்த்த கண்ணதாசன் சொல்லும் ஒரு extreme சூழ்நிலை – கூட இருந்தவர்கள் குழி பறிப்பது!

நம்மில் பலருக்கு பள்ளியில், கல்லூரியில்,அலுவலகத்தில், உறவுகளில், நட்பில், வாழ்க்கையில் என்று ஏதாவது ஒரு இடத்தில் இந்த அனுபவம் கிடைத்திருக்கும் The saddest thing about betrayal is that it never comes from your enemies என்று படித்திருக்கிறேன்.

வள்ளுவர் கூடா நட்பு என்ற அதிகாரத்தில் சிரித்துப் பேசி நம்மைச் சீரழிக்க நினைக்கும் வஞ்சகரின் நட்புக்கு அஞ்சி ஒதுங்கிட வேண்டும்

முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா

வஞ்சரை அஞ்சப் படும்.

என்று சொல்கிறார். வஞ்சகரின் சிரிப்பு மட்டுமல்ல கண்ணீரும் சதியே என்கிறார். தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் என்ற குறளில் வணங்குகின்ற போதுகூட கைக்குள்ளே கொலைக்கருவி மறைந்திருப்பது போலவே, கண்ணீர் கொட்டி அழுதிடும் போதும் சதிச்செயலே அவர்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும் என்கிறார்  ஆனால் அடையாளம் காண முடிந்தால்தானே கூடா நட்பு என்று filter செய்ய முடியும்? என்ன வழி ?

திரைப்படங்களில் நம்பிக்கை துரோகம் கதையின் ஓட்டத்துக்கு பெரிதும் உதவும் என்பதால் பல பாடல்களில் இதே கருத்து தென்படுகிறது. கண்ணதாசன் பறக்கும் பாவை படத்தில் (இசை எம் எஸ் வி பாடியவர் பி சுசீலா)

http://www.youtube.com/watch?v=5Pg7cM-CsV0

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்

உறவெல்லாம் முள்ளாகும்
உயிரெல்லாம் கல்லாகும்

என்று ஆரம்பித்து வஞ்சம் அதனால் வந்த வலி, விடுபட வழி என்று அசத்துகிறார்.

அழகைக் காட்டும் கண்ணாடி
மனதைக் காட்டக் கூடாதோ
பழகும்போதே நன்மை தீமை
பார்த்துச் சொல்லக் கூடாதோ
வாழ்த்தும் கையில் வாளுண்டு
போற்றும் மொழியில் விஷமுண்டு
வஞ்சம் சிந்தும் புன்னகையில்லா
மனிதர் இங்கே எவருண்டு

அட இப்படி ஒரு கண்ணாடி இருந்தால் அது எப்படி இருக்கும்?

வாழ்த்தும் கையில் வாளுண்டு என்ற வரியும் வள்ளுவன் சொன்னதுதானே? இதை பஞ்சு அருணாசலம் காயத்ரி படத்தில் வாழ்வே மாயமா என்ற பாடலில்

http://www.youtube.com/watch?v=NUixEzeTpuI

சிரிப்பது போல முகமிருக்கும்

சிரிப்புக்குப் பின்னால் நெருப்பிருக்கும்

அணைப்பது போல கரமிருக்கும்

அங்கே கொடுவாள் மறைந்திருக்கும்

திரைபோட்டு நீ மறைத்தாலென்ன

தெரியாமல் போகுமா?

என்ற வரிகளில் சொல்கிறார். கண்ணதாசன் ஒரு கண்ணடி வேண்டும் என்கிறார். பஞ்சு திரை போட்டாலும் இதை மறைக்க முடியாது வெளியே தெரியாமல் போகாது என்கிறார்.

இன்னொரு பாடல் கிடைத்தது. கண்ணதாசன் திருவருட் செல்வர் படத்தில் வேறு context ல் நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து , நல்லவன் போல் நடிப்பான் ஞானத் தங்கமே என்று எழுதுகிறார். சிவ சிவா!

மோகனகிருஷ்ணன்

286/365