நாணத் தங்கமே!

  • படம்: தெய்வ வாக்கு
  • பாடல்: வள்ளி, வள்ளி என வந்தான்
  • எழுதியவர்: வாலி
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: இளையராஜா, எஸ். ஜானகி
  • Link: http://www.youtube.com/watch?v=10PSPLEH1D0

வண்ணப் பூ, வஞ்சிப் பூ, வாய்வெடித்த வாசப் பூ அன்புத் தேன், இன்பத் தேன் கொட்டுமா?

இந்தப்பூ, சின்னப்பூ, கன்னிப்போகும் கன்னிப் பூ, வண்டுதான் வந்துதான் தட்டுமா?

என்னை மீண்டும் கொஞ்சத் தூண்டும்

நாணல் போலே தேகம் தன்னில் நாணம் என்னம்மா!

சமீபத்தில் ஒரு நடிகை தந்த பேட்டி கண்ணில் பட்டது. ‘நான் மாடர்ன் பொண்ணு, எனக்கு வெட்கம், நாணம்ல்லாம் கொஞ்சம்கூட இல்லை’ என்று சொல்லியிருந்தார்.

உண்மையில் அவர் சொல்ல வந்தது, ’எனக்குக் கூச்சம் கிடையாது’ என்றுதான். அதற்குப் பதிலாக ’நாணம்’ என்ற சொல்லைப் பயன்படுத்திவிட்டார்.

அவரைச் சொல்லிக் குற்றமில்லை. தமிழ் சினிமா செய்திருக்கிற வேலை அப்படி. சுற்றிச் சுற்றி எல்லாப் பாடல்களிலும் காட்சிகளிலும் வசனங்களிலும் நாணம் என்றால் வெட்கம், கூச்சம், பெண்களுக்குமட்டுமே சொந்தமான ஓர் உணர்வு என்று காட்சிப்படுத்திவிட்டார்கள்.

அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்று பெண்களின் இலக்கணமாக(?) வர்ணிக்கப்படும் நான்கு விஷயங்களில் ‘நாணம்’ இடம் பிடித்திருக்கிறது. அப்படியானால் அது ஆணுக்கு இருக்கக்கூடாதா?

இதுபற்றித் திருவள்ளுவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா?

’நாணுடைமை’ என்று அவர் ஒரு முழு அதிகாரமே எழுதியிருக்கிறார். அதன் முத்தாய்ப்பாக வரும் குறள்:

நாண் அகத்து இல்லார் இயக்கம், மரப்பாவை

நாணால் உயிர்மருட்டி அற்று

அதாவது, உள்ளத்தில் நாணம் இல்லாதவர்கள், கயிறால் ஆட்டி வைக்கப்படும் பொம்மைக்குச் சமம். இங்கே அவர் ஆண், பெண் என்று எதுவும் சொல்லவில்லை.

அப்படியானால் எல்லாருக்கும் நாணம் வேண்டும் என்றல்லவா அர்த்தமாகிறது. எதற்காக நாணுவது?

அன்றாட வாழ்க்கையில் நாம் செய்யும் தவறுகளுக்கா குறைச்சல்? அந்தத் தவறுகளை எண்ணி நாணுங்கள் என்கிறார் திருவள்ளுவர். அப்போதுதான் அடுத்தமுறை அதே தவறைச் செய்யாமல் இருப்போம்.

ஆக, ‘எனக்கு நாணமே கிடையாது’ என்று ஒருவர் சொன்னால், அவர் மரப் பொம்மை என்று அர்த்தம்!

அது கிடக்கட்டும். இந்தக் குறளில் ‘நாண்’ என்ற சொல் இரண்டுமுறை வருகிறதே. ஏன்?

தமிழில் இந்தச் சொல்லுக்கு இரு பொருள்கள் உண்டு. முதலில் வரும் ‘நாண்’ என்பதன் அர்த்தம், நாணம், அடுத்த வரும் ‘நாண்’ என்பதன் அர்த்தம், கயிறு.

நாண் = கயிறு? நம்பமுடியவில்லையா?

அர்ணாக்கயிறு என்று சொல்கிறோமே, அந்தக் கொச்சைச் சொல்லின் உண்மையான வடிவம், ‘அரை நாண்’ என்பதுதான். ‘அரை’ என்றால் இடுப்பு, ‘நாண்’ என்றால் கயிறு. ஆக, ‘அரை நாண்’ என்றால், இடுப்பில் கட்டப்படும் கயிறு. இதனை ‘அரை ஞாண்’ என்றும் சொல்வார்கள்.

அப்படியானால், ‘அரை நாண் கயிறு’ என்றால், ‘இடுப்புக் கயிறுக் கயிறு’?

ஆமாம். ‘அரை நாண் கயிறு’ என்று சொல்ல அவசியமே இல்லை. ‘அரை நாண்’ என்று சொன்னாலே போதும். கயிறு அதற்குள்ளேயே இருக்கிறது.

இந்தமாதிரி வேடிக்கை தமிழில்மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் உண்டு. உதாரணமாக, ‘ATM Machine’ என்று சொல்கிறோமே, அதை ATM என்றுதான் சொல்லவேண்டும், அதன் முழு வடிவம் ‘Automatic Teller Machine’. அதற்குப்பின்னால் கூடுதலாக இன்னொரு மெஷினைச் சேர்க்கவேண்டியதில்லை!

***

என். சொக்கன் …

12 09 2013

285/365