விழியில் விழுந்து இதயம் நுழைந்து…

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண் காண அழகுக்கு கவிதாஞ்சலி

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல் இனிமையாக காதுக்குள் வழுக்கி ஓடியது. கூடவே கதரி கோபால்நாத்தின் சாக்சபோனும். ஆண்குரல் முடிந்து சித்ராவின் பெண் குரல் தொடங்கியது.

சீதையின் காதல் அன்று விழிவழி நுழைந்தது
கோதையின் காதல் இன்று செவிவழி புகுந்தது
என்னவோ என் நெஞ்சினை….

நிறுத்துங்க நிறுத்துங்க… முதல் வரி என்னது?

சீதையின் காதல் அன்று விழிவழி நுழைந்தது

ஆகா. என்ன அருமையான வரி. வரியை விடவும் அதிலுள்ள பொருள். சீதையின் காதல் அவள் நெஞ்சுக்குள் எப்படி நுழைந்ததாம்? கண்களின் வழியாக.

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்” என்று நாமெல்லாம் எத்தனை முறை படித்திருப்போம். அல்லது கேள்விப்பட்டிருப்போம். இந்த வரிகளைக் கேட்டதும் எனக்கு மறுபடியும் அந்த கம்பன் பாடலை ரசிக்க வேண்டும் என்று ஆவல். உங்களையும் என்னோடு அந்த ரசனைக்கு கூட்டிக்கொண்டு போகிறேன்.

இதற்கு மேல் படிக்கின்ற வரிகளைப் படிக்கும் போதே கற்பனை செய்து கொண்டு படியுங்கள்.

இடம் – மிதிலை நகர வீதி

யானைப்போர் விளையாட்டுகள் நடக்கின்றன. நீர் நிலைகளில் பெண்கள் நீர்விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஊரெங்கும் வளமை பெருமை மகிழ்ச்சி.

அந்த ஊரின் வீதிகளில் மும்மூர்த்திகளைப் போல மூன்று பேர் வருகின்றார்கள். பெண்களின் கண்களில் அவர்கள் விழுகிறார்கள்.

மூவரில் ஒருவரைப் பார்த்தால் தவத்தில் அமர்ந்த சிவம் போல் இருக்கிறது. ஆம். சிவம் அருளிய கோசிக முனிதான் அவர். முன்பு அவரைப் பார்த்திருக்கிறேன். அவரை மனதுக்குள் வணங்கிக் கொள்வோம்.

அருகில் வருவது நாராயணனா? அவனைப் போலத்தான் இருக்கிறது. ஆனால் தெரியவில்லை. அவன் தோளைப் பார்த்தேன். இன்னும் அவன் தோளையே பார்த்துக் கொண்டிருக்கிறேன். கண்களை நகட்ட முடியவில்லை. கையைப் பார்த்த ஒருத்தி இன்னும் கையையே பார்த்துக் கொண்டிருக்கிறாளாம். எவளாவது முகத்தைப் பார்த்திருக்கக் கூடாது. ச்சே!

அவர்கள் பார்த்தது இராமனை. இரகுகுலச் சோமனை. கருமுகில் மெய்யனை. அவனைப் பார்த்தவர்களால் வேறு எதையும் பார்க்க முடியவில்லை. அருகில் இலக்குவன் என்று ஒருவன் வருவதும் தெரியவில்லை.

அந்த நேரம் பார்த்து மாளிகையின் கன்னி மாடத்தில் ஒரு மலர் மலர்ந்தது. ஆம். கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகி தோழியரோடு வந்தாள்.

அவன் பார்த்தான். ஏதோ ஒரு உந்துதல். அவளும் பார்த்தாள். இருவருமே தற்செயலாகத்தான் பார்த்தார்கள். விதி வந்து உந்தியிருக்க வேண்டும். கண்டவர்கள் எல்லாம் கண்டதையும் கண்டார்கள். ஆனால் இவர்கள் கண்டது கண்களை மட்டுமே.

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினான்

சரி. அப்படி நோக்கியதால் என்ன ஆயிற்று?

கண்ணொடு கண் கண்ட பொழுதிலேயே ஒன்றையொன்று பசி கொண்டு கவ்வி உண்டு… அந்த இன்ப உணர்வு உள்ளத்தையும் உணர்வையும் நிறைத்திட நின்றார்கள்.

கண்ணொடு கண்ணிணை கவ்வி ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட.
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்

பார்வை மட்டுமா ஒட்டிக் கொண்டது? இருவரின் உள்ளங்களும்தான் ஒட்டிக்கொண்டன. சேச்சே! உள்ளங்கள் மட்டுந்தானா? அப்படியானால் இது வெறும் வனப்பின் ஈர்ப்புதானா?

இல்லையில்லை. உணர்வுகளும் ஒட்டிக் கொண்டன. வெறும் உணர்வுகள் மட்டுந்தானா? அப்படியானால் அவர்கள் காதல் வயது கொடுக்கும் உணர்ச்சிகளின் வழி வந்ததுதானா?

இல்லையில்லை. அதையும் தாண்டியது.

அதெப்படி அதையும் தாண்டியது? இன்னும் விளக்கம் வேண்டும்.

பாற்கடல் இருக்கிறதே… அந்தப் பாற்கடலில் முன்பு கணவன் மனைவியாக இருந்தவர்கள்தான் இவர்கள் இருவரும். ஏதோ காரணம்… மனிதர்களாகப் பிறந்து விட்டார்கள். கிட்டத்தட்ட ஒருவரையொருவர் மறந்து விட்டார்கள்.

இன்று ஒருவருக்கொருவர் பார்வையைப் போர்வையாய் போர்த்தியதும் பழைய நினைவுகள் வந்து விட்டன. பாற்கடலிலே பாம்பணையிலே அன்று நாடியதும் பாடியதும் கூடியதும் கைகளால் ஒருவரையொருவர் கண்மூடித் தேடியதும் நினைவுக்கு வந்து விட்டன. அந்த பழைய பாசம் தான் மீண்டும் துளிர்க்கிறது. அன்று பிரிந்தவர்கள் இன்று கூடினால் பேசவும் முடியுமா?

கருங் கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்ப்
பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ

இப்போது புரிந்திருக்குமே “சீதையின் காதல் அன்று விழிவழி நுழைந்தது” எப்படியென்று?

பாடல் – அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
வரிகள் – வைரமுத்து
பாடியவர்கள் – எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா
இசை – இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்
படம் – டூயட்
பாடலின் சுட்டி – http://youtu.be/uK7Z8m1rp4U

அன்புடன்,
ஜிரா

284/365