ஆயிரம் மலர்களே

கடந்த சில தினங்களாகவே சென்னை பரபரவென்று பிள்ளையாரின் பிறந்த நாளைக் கொண்டாடத் தயாராகிக்கொண்டிருந்தது. பூஜை, ஹோமம், ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் என்று அமர்க்களமான ஏற்பாடுகள். சில இடங்களில் கோயில் இருப்பதே நடைபாதையில். அங்கு போக்குவரத்துக்கு இடைஞ்சலாக தெருவை அடைத்து பந்தல் அலங்காரம் சீரியல் விளக்குகள்,

அந்த நாளில் அழகிய சிறுகதையாக இருந்த பூஜையை ஏதோ ஷங்கர் பட பிரம்மாண்டத்தில் மாற்றியது யார்? கொஞ்சம் மஞ்சள் பொடியை குவித்து உருவம் செய்தாலே பூஜையை ஏற்கும் பிள்ளையாருக்கு இதையெல்லாம் செய்தவர் யார்? இறைவனை வழிபட இவையெல்லாம் தேவையா? ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்பவுதில்லை என்று கண்ணதாசன் சொன்னாரே ?

தாயுமானவர் ஒருநாள் நடராஜர் பூஜைக்குப் பூ எடுக்க நந்தவனத்திற்கு போனார். செடிகொடிகள் மலர்களால் நிறைந்திருக்க ‘ ஆஹா இயற்கையே நடராஜப் பெருமானை ஆராதிக்கிறது’ என்று எண்ணுகிறார். தன் பூஜையை மறந்தார்.

பண்ணேன் உனக்கான பூசை ஒரு வடிவிலே

பாவித்து இறைஞ்ச ஆங்கே

பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி அப்

பனிமலர் எடுக்க மனமும்

நண்ணேன் அலாமல் இரு கைதான் குவிக்க எனில்

நாணும் என் உளம் நிற்றி நீ

நான் கும்பிடும் போது அரைக்கும்பி டாதலால்

நான்பூசை செய்யல் முறையோ

என்று இவர் தம் அனுபவத்தைப் பாடியிருக்கிறார். கண்ணதாசன் மகாகவி காளிதாஸ் என்ற படத்தில் (இசை கே வி மகாதேவன் பாடியவர்கள் டி எம் எஸ் பி சுசீலா )

மலரும் வான் நிலவும் சிந்தும்

அழகெல்லாம் உன் எழில் வண்ணமே

குழலும் யாழ் இசையும்

கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே

என்று சொல்வதும் இயற்கையின் அழகெல்லாம் இறை வழிபாடு என்பதுதான். கண்ணதாசன் திருமால் பெருமை படத்தில் மலர்களில் இறைவன் நிறம் பார்க்கிறார். பக்தி உள்ளம்தான் பூஜைக்கேத்த பூ என்கிறார்

http://www.youtube.com/watch?v=l9dg_SPhdxM

மலர்களிலே பல நிறம் கண்டேன் – திரு

மாலவன் வடிவம் அதில் கண்டேன்

பக்தி உள்ளம் என்னும் மலர்தொடுத்து

பாசமென்னும் சிறுநூலெடுத்து

சத்தியமென்னும் சரம் தொடுத்து – நான்

சாற்றுகின்றேன் உன் திருவடிக்கு

இப்படி ஒரு எளிமையான One-to-One வழிபாடு இப்போது சாத்தியமா? யோசித்தால் சமீபத்திய பக்தி இயக்கங்கள் மக்கள் ஒன்று கூடி வழிபடுவதையே வலியுறுத்துகின்றன என்று தோன்றுகிறது.. ஐயப்பன், ஹரே ராம ஹரே கிருஷ்ணா, சாய்பாபா, மேல் மருவத்தூர், பஜனை மண்டலி என்று பல உதாரணங்கள். இதனால்தான் பூஜை பெரிய அளவில் சிறப்பாக ஒளியும் ஒலியும் போல் நடக்கிறதா? பக்தி உள்ளம் மலர் என்றால் ஓராயிரம் மலர்கள் ஒன்று கூடி வழிபடுதல் சரிதானே ?

மோகனகிருஷ்ணன்