விருந்தினர் பதிவு : துஷ்யந்தன் கதை

நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது, டிவியில் அசல் படத்திலிருந்து, ’ஹே துஷ்யந்தா உன் சகுந்தலா தேடி வந்தாள்’ என்ற பாடல் வந்தது. துரியோதனன் தெரியும், துகிலுரி புகழ் துச்சாதனன் தெரியும் அட ,அஸ்வத்தாமன் கூட தெரியும். இது யார்…? துஷ்யந்தன். கூடவே சகுந்தலா…? காரணமில்லாமலா எழுதியிருப்பார் வைரமுத்து!. அதனால் தேடினேன். பாண்டவர்கள் கௌரவர்கள் என அவர்கள் பிரிவதற்கு முன்னரே, அவர்களின் மூதாதையர்களில் ஒருவர்தான் துஷ்யந்தன். தவிர, இவருக்கும் சகுந்தலாவுக்கும் இடையே சொல்லப்படும் சுவாரசியமான கதையொன்றும் சிக்கியது. மகாபாரதத்திற்கு அப்பெயர் வரக் காரணமே துஷ்யந்தன்தான் என்றால் நம்புவீர்களா…?

இராமாயணத்தில் இராமனும் சீதையும் பிரிய எது காரணமே, அதுவேதான் துஷ்யந்தனும் சகுந்தலாவும் இணையக் காரணமாக இருந்துள்ளது. ஆமாம், மான்! மானைத் துரத்திக் கொண்டு வந்த இடத்தில், சகுந்தலையைச் சந்திக்கிறான் துஷ்யந்தன். கண்டதும் காதல். அடுத்த சீனில்,கந்தர்வத் திருமணம். மணம் முடிந்து, தன் நினைவாக கணையாழியொன்றை சகுந்தலாவிடம் கொடுத்து விட்டு அஸ்தினாபுரத்திற்கு வந்து விடுகின்றான் துஷ். ஆனால் அந்தப்பக்கம், சகுந்தலாவையோ பசலை ஆட்கொள்கிறது. அதன் விளைவால், வீட்டிற்கு விருந்தாடி வந்த துர்வாச முனிவரை கண்டு கொள்ளாமல் விடுகிறாள். முனிவர் என்றாலே முனிதல் (கோபப்படுதல்) சகஜம்தானே, பிடி சாபம்! “யார் நினைவில் நீ என்னை அவமதித்தாயோ, அவன் உன்னை மறப்பான்”. (செலக்ட்டிவ் அம்னீஷியா) பின்பு சமாதானமெல்லாம் பேசி, ”சரி ஆனது ஆகிப் போச்சு…அந்தக் கணையாழி உன்னிடம் இருக்கும் வரை நீ சேஃப்” என்று exemption தருகிறார் துர்வாசர். இதன் பின்பு சகுந்தலா,கரு உண்டாவதால் ( Remember கந்தர்வ மணம்). துஷ்யந்தனைத் தேடிச் செல்கிறாள். ஆனால், துஷ்யந்தனுக்கு இவள் நினைவில்லை. காரணம் , முன்னமே அந்தக் கணையாழியைத் தொலைத்து விட்டிருக்கிறாள் சகுந்தலை. துர்வாசரின் விளையாடல்! சகுந்தலா துஷ்யந்தனுக்கு தன் நினைவு வர அவனிடம் மன்றாடுகிறாள். (பின்பு கணையாழி கிடைத்து, அவர்கள் சேர்ந்ததெல்லாம் வேறு கதை)

கிட்டத்தட்ட இதே சூழல்தான், மேற்கண்ட பாடலில் பாவனாவிற்கும். எனவேதான்,துஷ்யந்தனையும் சகுந்தலாவையும் உள்ளே இழுத்து வருகிறார் வைரமுத்து. பற்றாக்குறைக்கு, “பார்த்த ஞாபகம் இல்லையோ,பருவ நாடகம் தொல்லையோ” எனும் கண்ணதாசனின் வரிகளையும் எடுத்தாள்கிறார். இன்னும் இந்தப் பாடலை, கவனித்துக் கேட்டால் துஷ்யந்தனுக்கும் சகுந்தலாவிற்கும் நடந்த ’எல்லாவற்றையுமே’ சொல்லியிருப்பார் கவிஞர்.

மகாபாரதமென பெயர் வரக் காரணம் துஷ்யந்தன்தான் என்றேனல்லவா..? துஷ்யந்தனுக்கும் சகுந்தலாவிற்கும் பிறக்கும் குழந்தையின் பெயர் பரதன். அவன் பெயராலேயே அது மகா பாரதம். நம் நாடும் கூட இதனாலேயே ‘பாரத நாடு’ என் பெயர் பெற்றதென சொல்வோரும் உளர்.

இந்தப் பாடலைத் தவிர்த்து, மகாபாரதத்தை மையமாகக் கொண்டு வந்துள்ள பாடல்களை கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன்.

  • துரியோதனா துரியோதனா நீ தாயம் உருட்ட வாடா! -சாக்லேட்.
  • துரியோதனனும் கர்ணன் போல நாங்க நல்ல நட்புக்கொரு இலக்கணம்தாங்க! -ஜேம்ஸ் பாண்டு.
  • அர்ஜூனா அர்ஜூனா அம்புவிடும் அர்ஜூனா…- ஏய்!
  • வா வா காதல் துஷ்யந்தா உந்தன் கண்கள் கற்கண்டா..? – எங்கள் அண்ணா.

ராஜூ

பிறந்தது வளர்ந்தது எல்லாம் மதுரைப் பக்கம். கடந்த ஆறாண்டுகளாக தமிழிணைய வாசி. இது அது என்று வகை தொகையின்றி எல்லாவற்றிலும் நுனிப்புல் மேய்வது பிடித்த செயல்.

வலைப்பூ: http://www.tucklasssu.blogspot.com
ட்விட்டரில்: http://www.twitter.com/naaraju