தெய்வம் உள்ள வீடு

  • படம்: சரஸ்வதி சபதம்
  • பாடல்: தெய்வம் இருப்பது
  • எழுதியவர்: கண்ணதாசன்
  • இசை: கே. வி. மகாதேவன்
  • பாடியவர்: டி. எம். சௌந்தர்ராஜன்
  • Link: http://www.youtube.com/watch?v=-aJ5cuerkpg

தெய்வம் இருப்பது எங்கே?

தெளிந்த நினைவும், திறந்த நெஞ்சும் நிறைந்ததுண்டோ அங்கே!

எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம் இறைவன் திகழும் வீடு!

இசையில், கலையில், கவியில், மழலை மொழியில் இறைவன் உண்டு,

இவைதான் தெய்வம் என்பதை அறிந்தால் ஏற்கும் உனது தொண்டு!

மேற்கண்ட வரிகளை இன்னொருமுறை படித்துப் பாருங்கள், இது ஆத்திகப் பாட்டா, அல்லது நாத்திகப் பாட்டா?

எழுதியவர் கண்ணதாசன் எனும்போது, இந்தச் சந்தேகம் இன்னும் வேறுவிதமாக எழும். இது அவர் நாத்திகராக இருந்தபோது எழுதியதா, அல்லது ஆத்திகராக மாறியபின் எழுதியதா?

உண்மையில், தெய்வம் கோயிலில் இருக்கிறதா, அல்லது வேறு எங்குமா? ஆத்திகர்கள் என்னதான் சொல்கிறார்கள்?

’தெய்வம் கோயிலில் இல்லை’ என்று கண்ணதாசன் சொல்லவில்லை. ஆனால் வேறு எங்கெல்லாம் இருக்கிறது என்று தெளிவாகச் சொல்கிறார்: தெளிந்த நினைவு, திறந்த நெஞ்சு (Open Mind), நிறைந்த நெஞ்சு, எண், எழுத்து, இசை, கலைகள், கவிதை, ஏன் மழலை மொழியில்கூட இறைவன் இருக்கிறான்!

கடவுளை வெளியே தேடலாகாது என்பது நிச்சயம் நாத்திகக் கருத்தல்ல. அநேகமாகத் தமிழின் பக்தி இலக்கியங்கள் அனைத்தும் திரும்பத் திரும்ப இதைப் பலவிதமாக வலியுறுத்தியுள்ளன.

உதாரணமாக, சிவனின் அடி, முடி தேடி பிரம்மனும் விஷ்ணுவும் திணறிய கதை நமக்குத் தெரியும். அதைக் குறிப்பிட்டுத் திருநாவுக்கரசர் தரும் ட்விஸ்டைப் பாருங்கள்:

’நாடி நாரணன், நான்முகன் என்று இவர்

தேடியும் திரிந்தும் காண வல்லரோ?

மாட மாளிகை சூழ் தில்லை அம்பலத்து

ஆடி பாதம் என் நெஞ்சுள் இருக்கவே!’

பிரம்மனே, விஷ்ணுவே, நீங்கள் அங்கேயும் இங்கேயும் தேடித் திரிந்து என்ன பலன்? தில்லை அம்பலத்தில் ஆடுகிற சிவன் என்னைப்போன்ற பக்தர்களின் நெஞ்சுக்குள் அல்லவா இருக்கிறான்?!

இறைவனின் வீடு, பக்தர்கள் நெஞ்சம் என்றார் திருநாவுக்கரசர். அதைக் கொஞ்சம் நீட்டி, தெளிவான சிந்தனை உள்ளவர்கள், திறந்த மனம் கொண்டவர்கள், கல்வியில் வல்லவர்கள், கலையில் சிறந்தவர்கள், குழந்தைகள் நெஞ்சிலெல்லாம் அவன் இருப்பான் என்கிறார் கண்ணதாசன்.

சரிதானே? கொஞ்சம் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்!

***

என். சொக்கன் …

09 09 2013

282/365