வேறிடம்

பிறந்த இடம் ஒன்றிருக்க அங்கிருந்து பிடுங்கியெடுத்து வேறொரு இடத்தில் வளரவிடுவது நியாயமா?

எதையென்று கேட்கின்றீர்களா? செல்வத்தில் எல்லாம் பெரிய செல்வமாக நாம் கொண்டாடும் பிள்ளைச் செல்வத்தைதான் சொல்கிறேன்.

பெற்ற குழந்தையை அப்படியே எடுத்துக் கொடுத்துவிட எந்த சராசரித் தாயும் சம்மதிக்க மாட்டாள். அது ஒரு பெரும் துன்பம். அப்படிக் குடுத்தவர்கள் பலர் இருக்கிறார்கள். குடுத்த பிறகு அவர்கள் கடைசி வரை முழுமையாக உரிமையைச் சொல்லிக்கொள்ள முடியாத நிலையே உண்டாகியிருக்கிறது.

அன்பைத்தேடி என்றொரு படம். அந்தப் படத்தின் நாயகி ஒரு குழந்தையைச் சுமந்து கொண்டிருக்கிறாள். ஆனால் அந்தக் குழந்தை அவளுக்கல்ல. அவளது கணவன் தவறுதலாகத் தொலைத்து விட்ட அக்காவின் குழந்தைக்கு மாற்றாக கொடுப்பதற்காக இந்தக் குழந்தையை பெறப் போகிறாள்.

கொடுக்கப் போகிறோம் என்ற நினைப்பே அவளைச் சுடுகிறது. அந்தச் சூட்டில் சொற்கள் பாடலாகி மாறி அழுகையோடு கலந்து வருகிறது.

சிப்பியிலே முத்து – அது சிப்பிக்கென்ன சொந்தம்
தென்னையிலே இளநீர் – அது தென்னைக்கென்ன சொந்தம்
ஓங்கி வரும் முல்லை – அது ஒரு கொடியின் பிள்ளை
எடுத்துக் கொண்டு போனால் – அது கொடிக்குச் சொந்தமில்லை

அவள் சொல்கின்ற ஒவ்வொன்றும் அவளுடைய நிலையை உணர்த்துகின்றன. எந்தச் சிப்பியாலும் முத்தை எடுக்கின்றவர்களைத் தடுக்க முடியாது. அதே நிலைதான் தென்னைக்கும் முல்லைக் கொடிக்கும். அப்படியொரு கையறு நிலையில்தான் அவள் இருக்கிறாள்.

அவளைப் போலவே பழங்கதைகளில் துன்பப்பட்டவர்கள் இருந்தார்கள் என்பது நினைவுக்கு வருகிறது. அவர்களையும் பாட்டில் சொல்கிறாள்.

கர்ணன் எனும் வள்ளலுக்கும் அன்னை சொந்தமில்லை
கண்ணன் எனும் தெய்வம் கூட இரண்டு வீட்டுப் பிள்ளை

எவ்வளவு சத்தியமான வரிகள்! வாணி ஜெயராம் பாடிய இந்தப் பாடலை கவியரசர் கண்ணதாசனைத் தவிர யார் எழுதியிருக்க முடியும்!

இதே போல பணம் படைத்தவன் படத்தில் இன்னொரு பாடல் உண்டு. பிரிந்து போன குடும்பத்தை ஒன்று சேர்ப்பதற்காக தன் குழந்தையை தம்பி குழந்தையாக நடிக்கக் கொடுக்கிறான் அண்ணன். அதற்கு அவன் மனைவியும் உடந்தை. கொடுத்ததுதான் கொடுத்தார்கள். அதற்குப் பிறகு நிம்மதியாக இருந்தார்களா?

மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க
மன்னவன் மட்டும் அங்கிருக்க
காணிக்கையாக யார் கொடுத்தார்
அவள் தாயென்று ஏன் தான் பேர் எடுத்தாள் (அவன்)
அது கடமை என்றே நான் கொடுத்தேன் (அவள்)

வாலி எழுதிய அருமையான பாடல் இது. ஒரு குடும்பம் ஒன்றாக வேண்டும் என்று நல்ல எண்ணத்தில் கொடுத்த காணிக்கைதான். ஆனால் பெற்ற குழந்தையின் பிரிவு வாட்டுகிறதே!

கொடியில் பிறந்த மலரை
கொடி புயலின் கைகளில் தருமோ!
மடியில் தவழ்ந்த மகனை
தாய் மறக்கும் காலம் வருமோ!

யோசித்துக் கொடுத்தாலும் யோசிக்காமல் கொடுத்தாலும் இப்படிப் புலம்புவதை தவிர்க்க முடியாதுதான். ஆனாலும் அவளுக்கு நம்பிக்கை இருக்கிறது. அவளால் பிரிந்த குடும்பம் அவள் பெற்ற மகனால் சேரும் என்று நம்புகிறாள்.

இன்று நாளை மாறும்
நம் இதயம் ஒன்று சேரும்
சென்ற மகனும் வருவான்
முத்தம் சிந்தை குளிரத் தருவான்!

அவள் எண்ணம் கதையில் பலித்து அனைவரும் ஒன்றாக இருந்து மகிழ்ந்தார்கள்.

பெற்றவர்கள் நிலை இப்படியிருக்க… அப்படிக் கொடுக்கப்பட்ட பிள்ளையின் நிலை எப்படியிருக்கும்? அதை பணக்காரன் படப்பாடலில் மு.மேத்தா எழுதியிருக்கிறார்.

பெத்து எடுத்தவதான் என்னையும் தத்து கொடுத்துப்புட்டா
பெத்த கடனுக்குத்தான் என்ன வித்து வட்டியக் கட்டிப்புட்டா
பிள்ளையின் மனது பித்தாச்சு இங்க பெத்தவ மனசு கல்லாச்சு
இன்னொரு மனசு என்னாச்சு அது முறிஞ்சு போன வில்லாச்சு

தத்துக் கொடுக்கப்பட்ட பிள்ளைகள் உண்மையான பெற்றோர்கள் மீது ஒரு நெருடலான அன்பையே காட்டுவார்கள் என்பதை இந்தப் பாடலில் மு.மேத்தா சொல்லியிருக்கிறார் என்றே நான் கருதுகிறேன்.

முருகனால் வேண்டுமானால் பார்வதி மீதும் கார்த்திகைப் பெண்கள் மீதும் சமமாக அன்பு காட்ட முடியலாம். ஆனால் மனிதர்களுக்கு அந்த அளவுக்கு வலிமையான உள்ளம் இல்லை என்றே தோன்றுகிறது.

பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
பாடல் – சிப்பியிலே முத்து
வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
பாடியவர் – வாணி ஜெயராம்
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
படம் – அன்பைத் தேடி
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=PuD5y0kY4RY

பாடல் – மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க
வரிகள் – கவிஞர் வாலி
பாடியவர்கள் – பி.சுசீலா, டி.எம்.சௌந்தரராஜன், எல்.ஆர்.ஈசுவரி
இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் – டி.கே.இராமமூர்த்தி
படம் – பணம் படைத்தவன்
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=8C-A5-Rja1o

பாடல் – பெத்து எடுத்தவதான்
வரிகள் – மு.மேத்தா
பாடியவர் – மலேசியா வாசுதேவன்
இசை – இசைஞானி இளையராஜா
படம் – வேலைக்காரன்
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=xUeBwu4RDAQ

அன்புடன்,
ஜிரா

281/365