ஆயுத எழுத்து

நேற்று சென்னையில் நடந்த ஆசிரியர் தின விழாவில் இந்தியாவின் பெருமை வாய்ந்த கலாசாரம்,  குருவை மதிக்கும் பண்பு என்ற வழக்கமான cliche சொற்பொழிவுகள்தான். ஒருவர் தினமும் காலையில் நாளிதழ்களில் செய்திகளைப் பார்த்தால் இது இந்தியாவா என்று சந்தேகம் என்றார். இன்னொருவர் ஊடகங்கள் விதிவிலக்குகள் மேல்தான் வெளிச்சம் போடும், ஆனால் இந்தியா ஒரு உன்னத தேசம் என்றார்.

நிகழ்ச்சியின் இடையில் பாரதியின் வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் பாடலை ஒலிபரப்பினார்கள். இந்தியா ஒரு மகத்தான தேசம் என்பதை பாரதியார் நம்பிய அளவுக்கு வேறு யாருமே நம்பவில்லை என்று தோன்றுகிறது. எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம் என்று நம் நாட்டின் பெருமை சொல்கிறார்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் – அடி

மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்

பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள்

பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

திரையில் கப்பலோட்டிய தமிழன் படத்தில் ஜி ராமநாதன் இசையில் திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடல்.  https://www.youtube.com/watch?v=eYJFwd85SDk

உழவு, நெசவு, தொழிற்சாலைகள், நதி நீர் பங்கீடு, infrastructure, நிலத்தடியில் இருக்கும் வளம், கலை, ஓவியம் என்று  உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம் என்று சொல்லும் அற்புதமான வரிகள்.

ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்

ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்

ஒயுதல்செய் யோம்தலை சாயுதல் செய்யோம்

உண்மைகள்சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

இந்திய அமைதி விரும்பும் நாடல்லவா? ஏன் மகாகவி ஆயுதம் செய்வோம் என்கிறார்? மாலன் ஒரு சிறுகதையில் இதற்கு ஒரு சுவாரசியமான twist தருகிறார். வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பும் நாயகன் சில நிகழ்வுகளை கண்டு மனம் வருந்தி மாற்றம் தேவை, அதற்கு ஆயுதம் ஏந்திய புரட்சி வேண்டும் என்றும் ஆனால் இதற்கு எழுத்துதான் சரியான ஆயுதம் என்றும் நினைக்கிறான். Pen is mightier than sword. மகாகவி ஆயுதம் செய்வோம் என்று சொல்லி உடனே நல்ல காகிதம் செய்வோம் என்று அதை qualify செய்கிறார் என்று ஒரு interpretation தருவான். பாரதி நினைத்தது வேறாக இருக்கலாம். ஆனால் எனக்கு மாலன் சொல்லும் கோணம் பிடித்திருக்கிறது.

திரைப்பாடல்களில் ஆயுதம் காதல் கணைகளாகவும் அடித்தட்டு மக்களின் குரலாகவும் அடிக்கடி வரும். வேறு கோணம் இருக்கிறதா என்று தேடினால் ஆயுத எழுத்து படத்தில் வைரமுத்து ஜன கன மன என்ற பாடலில் (இசை / பாடியவர் ஏ ஆர் ரஹ்மான் )

http://www.youtube.com/watch?v=nbUPFfxQzHA

 ஆயுதம் எடு ஆணவம் சுடு

தீப்பந்தம் எடு தீமையை சுடு

இருளை எரித்துவிடு

என்று எழுதுகிறார். இதில் அறியாமை என்ற இருள் அழிக்க என்று பொருள் கொண்டால் அதற்கான ஆயுதம் எழுத்தறிவித்தல் தானே?  நல்ல காகிதம் என்பது நாளிதழ்கள்  மட்டுமல்ல நல்ல கல்வி முறையும் தானே?

மோகனகிருஷ்ணன்

280/365