எங்கிருந்தோ வந்தான்

கடந்த வாரம் அலுவலகத்தில் House Keeping சர்வீஸ் பற்றி நிறைய புகார் என்பதால் அந்த contractor ஐ கூப்பிட்டு விசாரித்தோம். அவர் இந்த சர்வீஸ் நடத்துவதில் உள்ள சிரமங்களை அடுக்கினார். வேலையாட்கள் சரியான நேரத்தில் வருவதில்லை, சொன்ன வேலைகள் எதையும் சரியாகச் செய்வதில்லை, வெறும் அரட்டையில் நேரத்தை வீணடிக்கிறார்கள், அடிக்கடி விடுப்பு எடுக்கிறார்கள் என்று அங்கலாய்த்தார்.

எனக்கு மீட்டிங் அறையில் முண்டாசுடன் ஒருவன் சிரிப்பது கேட்டது. பல வருடங்களுக்கு முன் பாரதி சொன்ன

கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார்:

வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்;

ஓயாமல் பொய்யுரைப்பார்; ஒன்றுரைக்க வேறுசெய்வார்;

தாயாதி யோடு தனியிடத்தே பேசிடுவார்;

உள்வீட்டுச் செய்தியெல்லாம் ஊரம் பலத்துரைப்பார்;

சேவகரால் பட்ட சிரமமிக உண்டு கண்டீர்

என்ற வரிகளுக்கு ஏற்ப இன்றும் சேவகர்கள் அப்படியே இருப்பது ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் மகாகவிக்கு யோகம் – கண்ணனே சேவகனாக வருகிறான். கண்ணன் இலட்சிய சேவகன். வந்தவுடன் தான் என்னென்ன செய்வேன் என்று கூறுவதாக வரும் வரிகள்

மாடுகன்று மேய்த்திடுவேன், மக்களை நான் காத்திடுவேன்

வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்;

சொன்னபடி கேட்பேன்; துணிமணிகள் காத்திடுவேன்;

சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தே

ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்;

கற்ற வித்தை யேதுமில்லை; காட்டு மனிதன்; ஐயே!

ஆன பொழுதுங் கோலடி குத்துப்போர் மற்போர் .

நானறிவேன்; சற்றும் நயவஞ் சனைபுரியேன்”

என்றுபல சொல்லி நின்றான்

இத்தகைய சேவை செய்கின்ற கண்ணன் என்னும் சேவகன் கேட்ட கூலி என்ன? ‘நெஞ்சிலுள்ள காதல் பெரிதெனக்குக் காசு பெரிதில்லை’ என்கிறான்.

படிக்காத மேதை என்ற படத்தில் கண்ணதாசன் ஒரு சேவகன் தான் என்னென்ன செய்வேன் என்று சொல்லுவதாக ஒரு பாடல் அமைக்கிறார் (இசை கே வி மகாதேவன் பாடியவர் டி எம் எஸ்)

http://www.youtube.com/watch?v=K1I3c64ieBs

உள்ளதை சொல்வேன் சொன்னதை செய்வேன்

வேறென்றும் தெரியாது

உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும்

கபடம் தெரியாது

பள்ளிக்கு சென்று படித்ததில்லை

ஒரு எழுத்தும் தெரியாது

பார்த்த உலகத்தில் பாசத்தை தவிர

எதுவும் கிடையாது

அடிப்பது போல கோபம் வரும்

அதில் ஆபத்து இருக்காது

நீ அழுதால் நானும் அழுவேன் அதற்கும்

காரணம் புரியாது

நயவஞ் சனைபுரியேன், காதலே போதும் என்ற பாரதியின் கண்ணன். கபடம் தெரியாது பாசத்தை தவிர எதுவும் கிடையாது என்ற கண்ணதாசனின் ரங்கன். கண்ணனும் ரங்கனும் ஒன்றுதானே?

மோகனகிருஷ்ணன்