மரபும் புதுசும்

  • படம்: இதயம்
  • பாடல்: பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
  • எழுதியவர்: வாலி
  • இசை: இளையராஜா
  • பாடியவர்: கே. ஜே. யேசுதாஸ்
  • Link: http://www.youtube.com/watch?v=zOYOXCneRME

யாப்போடு சேராதோ பாட்டு, தமிழ்ப் பாட்டு,

தோப்போடு சேராதோ காற்று, பனிக் காற்று,

வினாத்தாள்போல் இங்கே கனாக் காணும் காளை,

விடைபோலே அங்கே நடை போடும் பாவை,

ஒன்றாய்ச் சேரும், ஒன்றாய்ப் பாடும்

பொன்னாள், இன்று எந்நாளோ!

தமிழில் ’யாப்பு’ என்றால், செய்யுள் என்று பொருள். எழுத்து, சொல் போன்றவற்றுக்கு இலக்கணம் இருப்பதுபோலவே, யாப்புக்கும், அதாவது ஒரு செய்யுளை இப்படிதான் எழுதவேண்டும் என்பதற்கும் தமிழில் இலக்கணம் உண்டு. அதற்குப் பொருந்தி எழுதப்படும் கவிதைகளை ‘மரபுக் கவிதை’ என்கிறோம்.

உதாரணமாக, வெண்பா என்றால் முதல் சொல், இரண்டாம் சொல் இடையே இப்படிப்பட்ட பிணைப்பு வேண்டும், முதல், மூன்றாவது சொற்கள் மோனை வேண்டும், முதல், ஐந்தாவது சொற்கள் எதுகை வேண்டும்… இப்படி ஒவ்வொரு வகைப் பாடலுக்கும் வெவ்வேறு நெறிமுறைகள், அவற்றைப் பின்பற்றிச் சொற்களைக் கோத்தால் இனிமையாக இருக்கும். இவற்றை ஒருபோதும் மீறக்கூடாது.

இதுபோல் எந்த இலக்கண நெறிக்கும் கட்டுப்படாமல் எழுதப்படுபவற்றைப் ’புதுக் கவிதைகள்’ என்கிறோம். அவற்றில் கருத்துக்குதான் மரியாதை, அவற்றை ஒரு குறிப்பிட்ட அமைப்பில் ஒழுங்குபடுத்துவதற்கு அவசியமில்லை.

சினிமாப் பாட்டுகள் இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட ஒன்று. அதாவது, இலக்கணம் உண்டு, ஆனால் அது மரபு வழி வந்த இலக்கணம் அல்ல, புதிதாக ஒருவர் (இசையமைப்பாளர்) தந்த இலக்கணம். அதற்குமேலே, பாடலைக் கேட்கும் இனிமை கருதி, கவிஞரும் சில இலக்கணங்களைச் சேர்த்துக்கொள்ளலாம்.

உதாரணமாக, இந்தப் பாடலில் முதல், இரண்டாவது வரிகளில் யாப்பு, தோப்பு என எதுகை உள்ளது, ஆனால் 3, 4வது வரிகளில் வினா, விடை என்று மோனை வந்துள்ளது, மூன்றாவது வரியில் வினா, கனா என்று எதுகை / இயைபு உள்ளது, நான்காவது வரியில் விடை / நடை என்று அதேபோன்ற எதுகை / இயைபு உள்ளது, இதே 3, 4 வரிகளிடையே சுத்தமான இயைபு இல்லை, ஆனால் காளை, பாவை என ஒரேமாதிரி ஒலி கொண்ட சொற்கள் உள்ளன. ஐந்தாவது வரியில், ஒன்றாய் என்ற சொல் இரண்டு முறை வந்துள்ளது, சேரும், பாடும் என இயைபு வருகிறது. ஆறாவது வரியில் பொன்னாள், எந்நாள் என்கிற எதுகை வந்துள்ளது.

இதையெல்லாம் வாலி எழுதியதை வைத்து நாமாகச் சொல்வதுதான். இப்படிதான் எதுகை, மோனை அமைக்கவேண்டும் என்று அவருக்கு யாரும் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. அவர் மாற்றி எழுதியிருந்தாலும் யாருக்கும் தெரிந்திருக்காது. மெட்டு செல்லுகிற திசையைக் கவனித்து, எங்கே எதுகை, எங்கே மோனை, எங்கே இயைபு வந்தால் இனிமையாக இருக்கும் என்று அவரே புரிந்துகொண்டு அமைத்திருக்கிறார்.

அதுமட்டுமில்லை, யாப்பு தனி, பாட்டு தனி என்றில்லாமல் இரண்டும் சேர்ந்தால்தான் இனிமை, தோப்பில் பனிக் காற்று சேர்ந்தால்தான் இனிமை, வினாவுக்கு விடை கிடைத்தால்தான் இனிமை என்கிற கருத்துகளை உள்ளடக்கி, ‘ஒன்றாய்ச் சேரும், ஒன்றாய்ப் பாடும் பொன்னாள் என்றைக்கு?’ என்று அழகான முத்தாய்ப்பும் வைக்கிறார்.

இதில் மரபும் உண்டு, புதுசும் உண்டு!

***

என். சொக்கன் …

03 09 2013

276/365