காலை எழுந்தவுடன் பாட்டு

பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய குடும்ப விளக்கு என்ற நூலைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு காட்சி. பொழுது புலர்கிறது. இல்லறத் தலைவி எழுகிறாள். அப்போது அவள் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் செய்து விட்டு யாழை மீட்டிப் பாடுகிறாள். அந்த இனிய பாடலைக் கேட்டு கணவனும் குழந்தைகளும் கண்விழிக்கிறார்கள்.

யாழின் உறையினை எடுத்தாள்; இசையில்
‘வாழிய வையம் வாழிய’ என்று
பாவலர் தமிழிற் பழச்சுவை சேர்த்தாள்.
தீங்கிலாத் தமிழில் தேனிசைக் கலவைபோல்
தூங்கிய பிள்ளைகள், தூங்கிய கணவனின்
காதின் வழியே கருத்தில் கலக்கவே,
மாதின் எதிர்அவர் வந்துட் கார்ந்தனர்
அமைதி தழுவிய இளம்பகல்,
கமழக் கமழத் தமிழிசை பாடினான்

காட்சி முற்போக்குத்தனமா பிற்போக்குத்தனமா என்பதை ஆராய்வதை விட காட்சியின் அழகில் நான் மயங்கிவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

இன்றைக்கும் பல வீடுகளில் பெண்கள் எழுந்ததும் கந்த சஷ்டிக் கவசத்தையோ சுப்ரபாதத்தையோ ஒலிக்க விடுவதைக் கேட்கத்தானே செய்கிறோம்.

இப்படியான காட்சிகள் திரைப்படங்களில் வந்திருக்கிறதா என்று யோசித்தேன். சட்டென்று எனக்குத் தோன்றியவை மூன்று பாடல்கள்.

மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
பொழுதும் விடிந்தது கதிராலே
சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே

காலை நேரத்துக் காட்டியையும் முந்தைய இரவில் அவள் கண்ட இன்பங்களின் மீட்சியையும் இப்படி நான்கு வரிகளில் சொல்ல கண்ணதாசன் இருந்தார் அப்போது.

அந்தப் பெண் கணவனோடு கொண்ட காதல் விளையாட்டைக் கூட நாகரிகமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் கவியரசர்.

சேர்ந்து மகிழ்ந்து போராடி
தலை சீவி முடித்தேன் நீராடி
கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி
கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி
பட்ட காயத்தைச் சொன்னது கண்ணாடி

கூடல் இன்பத்தை மட்டும் பாட்டில் வைக்கவில்லை அவர். அந்தக் குடும்பத்தலைவியின் அகவொழுக்கத்தையும் இறைநம்பிக்கையையும் பாட்டில் வைக்கிறார்.

இறைவன் முருகன் திருவீட்டில்
என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி
உயிரெனும் காதல் நெய்யூற்றி
உன்னோடிருப்பேன் மலரடி போற்றி

மேலே நான் சொன்ன பாடல் இதயக்கமலம் திரைப்படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் பி.சுசீலா அவர்கள் பாடியது. அடுத்து இளையராஜா இசையில் ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது. ஆம். காயத்ரி படப் பாடல் அது. பஞ்சு அருணாச்சலம் எழுதிய பாடல்.

காலைப்பனியில் ஆடும் மலர்கள்
காதல் நினைவில் வாடும் இதழ்கள்
காயம் பட்ட மாயம் கன்னி எந்தன் யோகம்

இந்தப் பாடலில் புதிதாகத் திருமணமான பெண் விடியலில் முந்தைய இரவின் நினைவுகளை வைத்துக் கொண்டு பாடுவாள்.

எல்லாம் சரி. திருமணமான பெண்கள் இதையெல்லாம் நினைத்துக் கொண்டு விடியலில் பாடலாம். திருமணம் ஆகாத பெண்? திருவெம்பாவையும் திருப்பாவையும் மட்டுமே பாட வேண்டுமா?

இல்லை என்கிறது உயர்ந்த உள்ளம் திரைப்படத்துக்காக கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல்.

காலைத் தென்றல் பாடி வரும் ராகம் ஒரு ராகம்
பறக்கவே தோன்றும் சிறகுகள் வேண்டும்

இளம் பெண்ணின் ஆசை என்னும் வானில் இன்பம் என்னும் சிறகுகளை விரித்துப் பறக்கத் துடிப்பதை இந்த வரிகள் அழகாகச் சொல்கின்றன.

அவளுடைய மனது அழகை ரசிக்கிறது. படிந்திருக்கும் பனி. குளிர்ந்திருக்கும் நிலம், கூவியிருக்கும் குயில், கூடியிருக்கும் குருவி, ஓங்கியிருக்கும் மரங்கள், பறவைகளைத் தாங்கியிருக்கும் கிளைகள் என்று அழகை ரசிக்கிறாள்.

அந்த இரசனையில் இரவை நினைத்துப் பார்க்கிறாள். ஒரு அழகான பாடல் வரி உடனே தோன்றுகிறது.

இரவிலே நட்சத்திரம் இருந்ததே எங்கே
பனிதுளிகளாய் புல்வெளியில் விழுந்ததோ இங்கே

இப்படியாக அவள் பெற்ற இன்பங்களை உலகமும் பெற வேண்டும் என்று நினைக்கிறாள். உறங்குகின்றவர்களை எழுப்புகிறாள்.

உறங்கும் மானிடனே உடனே வா வா
போர்வை சிறையை விட்டு வெளியே வா வா
அதிகாலை உன்னை பார்த்து வணக்கம் சொல்லும்

பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
பாடல் – மலர்கள் நனைந்தன பனியாலே
வரிகள் – கவி்ரசர் கண்ணதாசன்
பாடியவர் – பி.சுசீலா
இசை – திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்
படம் – இதயக்கமலம்
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=4HVJhS-KTzM

பாடல் – காலைப்பனியின் ஆடும் மலர்கள்
வரிகள் – பஞ்சு அருணாச்சலம்
பாடியவர் – சுஜாதா
இசை – இசைஞானி இளையராஜா
படம் – காயத்ரி
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=pTgZcMOGveI

பாடல் – காலைத் தென்றல் பாடிவரும்
வரிகள் – கவிஞர் வைரமுத்து
பாடியவர் – இசையரசி பி.சுசீலா
இசை – இசைஞானி இளையராஜா
படம் – உயர்ந்த உள்ளம்
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=HMdOYRD3Shs

அன்புடன்,
ஜிரா

275/365