உன்னுடைய வசந்தத்திலே

சென்னை புறநகரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் நண்பரின் மகனுக்கு அட்மிஷன் கிடைத்திருக்கிறது. அவர் இதற்காக கடந்த சிலமாதங்களாக அலைந்தது தெரியும். உரையாடலை பொதுவாக ஆரம்பித்த நண்பர், உயர் கல்வி நிறுவனங்களை நடத்தும் தனி மனிதர்களை கடுமையாக விமர்சனம் செய்தார். அவர்கள் வழிமுறைகள் பற்றி கேள்வி எழுப்பினார்.

வெற்றிக்கான வழிகளும் சரியானதாக இருக்க வேண்டும் என்பது முன்னோர் வகுத்த நெறி. இலக்குகள் மட்டுமல்ல, அதை அடையும் பாதைகளும் நியாயமானதாக இருக்கவேண்டும். பிறர் அழத் திரட்டிய செல்வம் அழ அழப் போய்விடும் என்று வினைத்தூய்மை அதிகாரத்தில் சொல்லும் வள்ளுவர் பொருள் செயல்வகை என்ற அதிகாரத்தில்

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து

தீதின்றி வந்த பொருள்.

என்ற குறளில் தீமை ஏதும் செய்யாமல் சம்பாதிக்கப்பட்ட செல்வம்தான் அறத்தையும் இன்பத்தையும் தரும் என்கிறார்.

கண்ணதாசன் எதிர்காலம் படத்தில் கல்லுக்கு நீதி சொல்ல முடியாது (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர் டி எம் எஸ்) என்ற பாடலில் இதே கருத்தை வலியுறுத்துகிறார்

கல்லுக்கு நீதி சொல்ல முடியாது வெங்

கானலில் மீன் பிடிக்க முடியாது

பாறையில் நெல் விதைக்க முடியாது

உன் பாவத்தில் வந்த இன்பம் நிலைக்காது

என்று ஆசையை முன்னே வைத்து தர்மத்தை பின்னே வைத்தால் என்னென்ன விளைவாகும் என்று கேள்வி கேட்கிறார். ஏணிப்படிகள் படத்தில் கண்ணிழந்த பிள்ளைக்கு என்ற பாடலில் (இசை கே வி மகாதேவன் பாடியவர் பி சுசீலா) அதிரடியாக ஒரு extreme நிலை எடுத்து

https://www.youtube.com/watch?v=IOKAeOZkbdw

நல்லவர்க்கு பொருள் எதற்கு

நாடி வரும் புகழ் எதற்கு

உன்னுடைய வசந்தத்திலே

ஒன்றுமில்லை ரசிப்பதற்கு

என்கிறார். இது ஒரு பொதுவான மன நிலை. வெற்றி பெற்றவர்களை – இவர் இன்னாருடைய பினாமி, அவர் எண்பதுகளில் சட்ட விரோத செயல்கள் செய்தார் இவருக்கு இந்த கட்சி ஆதரவு என்று எதையாவது சொல்லி அந்த வெற்றியின் தரம் பற்றி கேள்வி எழுப்பும் மனோ நிலை. தார்மீகக் கோபம். நல்லவனுக்கு கிடைக்கும் எல்லா மரியாதையும் கெட்டவனுக்கும் கிடைக்கிறதே என்ற ஆதங்கம்.

ஆனால் எல்லா வெற்றிகளையும் இப்படி விமர்சிப்பது சரியா? ஒருவேளை இது பொறாமையால் வரும் வார்த்தைகளா? கண்ணதாசன் சாந்தி நிலையம் படத்தில் கடவுள் ஒரு நாள் என்ற பாடலில் பொறாமை பற்றி hint கொடுக்கிறார்

http://www.youtube.com/watch?v=6UDl9gCxVC0

கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்

கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம்

ஒரு மனிதன் வாழ்வே இனிமை என்றான்

ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்

படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்

ஒருவன் வாழ்வை இனிமை என்றான். அடுத்தவன் ’அதுவே கொடுமை என்றான்’ என்பது, வாழ்வைக் கொடுமை என்றான் என்கிற பொருளைத் தருவதுடன் ‘அவன் நல்லாயிருக்கானே, அதுதான்யா கொடுமை’ என்ற பொருளையும் தருகிறது. இப்படி அடுத்தவன் வாழ்க்கையைப் பொறுக்காமல், அதைக் கொடுமை என்று சொன்னதைக் கேட்டவுடன், ‘என்ன இது, மனிதர்கள் இப்படி பொறாமை கொண்டவர்களாக இருக்கிறார்களே?’ என்று கடவுளுக்குச் சிரிப்பு வந்துவிட்டது என்று சொல்கிறார். எனக்கும் சிரிப்பு வருகிறது

மோகனகிருஷ்ணன்

274/365