மனக் கணக்கு

  • படம்: கோபுர வாசலிலே
  • பாடல்: தாலாட்டும் பூங்காற்று
  • எழுதியவர்: வாலி
  • இசை: இளையராஜா
  • பாடியவர்: எஸ். ஜானகி
  • Link: http://www.youtube.com/watch?v=326Usof7ZOQ

நள்ளிரவில் நான் கண் விழிக்க,

உன் நினைவில் என் மெய் சிலிர்க்க,

பஞ்சணையில் நீ முள் விரித்தாய்,

பெண் மனதை நீ ஏன் பறித்தாய்?

உங்கள் வீட்டின் பின்புறத்தில் ஒரு மரம் இருக்கிறது. அதை உங்களுக்கு மிகவும் பிடிக்கும். இதை வாக்கியமாக்கச் சொன்னால் எப்படிச் சொல்வீர்கள்?

‘எனக்கு அந்த மரத்தை மிகவும் பிடிக்கும்’.

இதில் மற்ற வார்த்தைகள் ஒருபுறமாக இருக்கட்டும், அந்த ‘மரத்தை’ என்ற வார்த்தையைமட்டும் எடுத்துக்கொள்வோம். அது எப்படி வந்தது?

மரம் + ஐ என்கிற வேற்றுமை உருபு, மரமை என்றுதானே மாறவேண்டும்? ஏன் ‘மரத்தை’ என்று ஆனது?

தமிழ் இலக்கணத்தில் இதற்குச் ‘சாரியை’ என்று பெயர். ஒரு சொல்லின் நிறைவு எழுத்தாக ‘ம்’ இருந்து, அதோடு ஐ, ஆல், கு, இன், அது, கண் போன்ற வேற்றுமை உருபுகள் சேர்கிறபோது, இந்த இரண்டுக்கும் இடையே ’அத்து’ என்கிற சாரியை கூடும்.

ஆக, மரம் + ஐ = மரம் + அத்து + ஐ = மரத்தை

இதேபோல், மரம் + இல் = மரம் + அத்து + இல் = மரத்தில், மரம் + கு = மரம் + அத்து + கு = மரத்துக்கு… இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்தப் பாட்டில், மரம் இல்லை, மனம்தான் இருக்கிறது. அதுவும் ‘ம்’ என்ற எழுத்தில் முடிவதால், இதே விதிமுறை பொருந்தும். அதாவது, மனம் + அத்து + ஐ = மனத்தை. ‘பெண் மனத்தை நீ ஏன் பறித்தாய்’ என்றுதான் எழுதவேண்டும்.

அப்படியானால் பாரதியார் ‘மனதில் உறுதி வேண்டும்’ என்று எழுதியதும் தவறா? அந்த வரி ‘மனத்தில் உறுதி வேண்டும்’ என்று இருக்கவேண்டுமா?

உண்மைதான். ஆனால், கவிதைக்கு வேறு இலக்கணங்கள் உண்டு என்பதால், இதுபோன்ற சில மீறல்கள் அனுமதிக்கப்படுகின்றன. எல்லாக் கவிஞர்களும் தெரிந்தே மீறியிருக்கிறார்கள்.

கொஞ்சம் பொறுங்கள், மனம் + ஐ என்று எழுதினால்தானே ‘மனத்தை’ என்று வரும்? அதையே நான் மனது + ஐ என்று எழுதினால்? அப்போது ‘மனதை’ என்பது சரிதானே?

வடமொழியில் ‘மனஸ்’ அல்லது ‘மன்’ என்ற வடமொழிச் சொல் உள்ளது. ஆனால் தமிழில் அது பயன்படுத்தப்படுவதில்லை, ‘மனம்’ என்ற வேறு சொல் உள்ளது. இதைப் பலர் ‘மனது’ என்றும் எழுதுகிறார்கள். ஆனால் அது சரியான பயன்பாடாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

உண்மையில், மனம் + ஐ = மனம் + அத்து + ஐ = மனத்தை என்பதுதான் இலக்கணம். இது தெரியாத யாரோ, ‘மனத்தை’ என்ற வார்த்தையை மனது + ஐ என்று தவறாகப் பிரித்து ‘மனது’ என்று ஒரு வார்த்தையை உருவாக்கிவிட்டார்கள் என்று தோன்றுகிறது. பின்னர் அதை இன்னும் கொச்சையாக்கி ‘மனசு’ என்று வேறு மாற்றிவிட்டார்கள்.

தற்போது, ‘மனம்’க்கு இணையாக, ‘மனது’ என்ற சொல்லும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் அதைச் சரி என்று ஏற்றுக்கொண்டால் ‘மனதை’, ‘மனதில்’ என்று எழுதுவதும் சரி. ’மனம்’ என்பதுதான் வேர்ச்சொல் என்று வைத்துக்கொண்டால், ‘மனத்தை’, ‘மனத்தில்’ என்பதுதான் மிகச் சரி!

***

என். சொக்கன் …

31 08 2013

273/365