கண்ணன் பிறந்தான்

இன்று கண்ணன் பிறந்த நாள். ஆவணிப் பொன்னாளில் ரோகிணி நன்னாளில் அஷ்டமி திதி பார்த்துக் கண்ணன் வந்த நாள்.

அந்த ஒரு நாள் இரவில் நடந்த சம்பவங்கள்,  பல திருப்பங்கள் கொண்ட ஒரு த்ரில்லர். கடும் மழை பெய்ய, அருகிலிருந்த யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோட, இருள் சூழ்ந்த ஒரு சிறைச்சாலைக்குள், குழந்தை ஒன்று பிறந்தது. இரவோடு இரவாக, தந்தையாகிய வாசுதேவர் அக்குழந்தையை ஒரு கூடையில் வைத்து, அதைத் தமது தலை மேல் சுமந்து கழுத்தளவு நீர் ஓடிய யமுனை ஆற்றைக் கடந்து, அக்கரை சென்று நந்தகோபரிடம் ஒப்படைத்தார்.

ஒப்பற்ற தேவகியின் மகனாகப் பிறந்து அந்த இரவிலேயே மற்றோர் ஒப்பற்ற பெண்ணாகிய யசோதையிடம் வந்து வளர்ந்தாய்.என்று சொல்லும் ஆண்டாள் பாசுர வரிகள்

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்-

ஒருத்தி மகனாய் ஒளித்து வளர

யசோதைக்கு அடித்தது மிகப்பெரிய ஜாக்பாட். அந்த மாயன் கோபாலகிருஷ்ணனை,  ஈரேழு புவனங்கள் படைத்தவனை கையில் ஏந்தி சீராட்டி பாலூட்டி தாலாட்டும் பெரும்பாக்கியம் அவளுக்கு கிடைத்தது. இதை  பாபநாசம் சிவன் ஒரு அற்புதமான பாடலில் http://www.youtube.com/watch?v=efsqGgf2KUg

என்ன தவம் செய்தனை யசோதா

எங்கும் நிறை பரப்ரம்மம் அம்மா என்றழைக்க

என்ன தவம் செய்தனை யசோதா

 என்ற வரிகளில் சொல்கிறார்.

பிறந்தது ஓரிடம். வளர்ந்தது வேறிடம். இந்த core கருத்தை  கண்ணதாசன் அன்னை என்ற படத்தில் வரும் ஒரு காட்சிக்கு ஏற்றபடி கொஞ்சம் மாற்றி எழுதுகிறார் (இசை ஆர். சுதர்சனம், பாடியவர் பானுமதி)

http://www.youtube.com/watch?v=wigeyu943kM

பூவாகி காயாகிக் கனிந்த மரம் ஒன்று

பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று

காய்க்காத மரத்தடியில் தேனாறு பாயுதடா

கனிந்து விட்ட சின்ன மரம் கண்ணீரில் ஆடுதடா

வளர்க்கும் அன்னையின் வாழ்வில் தேனாறு என்கிறார்

பத்து மாத பந்தம் என்ற படத்தில் ‘இரண்டு தாய்க்கு ஒரு மகள்’ என்ற பாடலில் இதே கருத்தை மறுபடியும் சொல்கிறார். (இசை சங்கர் கணேஷ் பாடியவர் பானுமதி)

ஒருத்தியின் கண்ணீரில் பிறந்தவள் கண்ணே நீ

ஒருத்தியின் கையோடு வளர்ந்திட வந்தாய் நீ

கண்ணனும் உனைப்போலே பிள்ளை தானம்மா

பிறப்பும் வளர்ப்பும் வேறு வேறம்மா

படத்தின் காட்சிக்கு ஏற்ற வரிகள். பாடல் வரிகளில் கண்ணன் கதையும் ஆண்டாள் பாசுரமும்  அடுக்கி எழுதுகிறார்.

மோகனகிருஷ்ணன்

271/365