கொடிமேல் காதல்

  • படம்: கிழக்கே போகும் ரயில்
  • பாடல்: மாஞ்சோலைக் கிளிதானோ
  • எழுதியவர்: முத்துலிங்கம்
  • இசை: இளையராஜா
  • பாடியவர்: ஜெயச்சந்திரன்
  • Link: http://www.youtube.com/watch?v=6CPH_pnHqB8

மஞ்சம் அதில், வஞ்சிக்கொடி வருவாள்,

சுகமே தருவாள், மகிழ்வேன்,

கண் காவியம் பண் பாடிடும் பெண்ணோவியம்,

செந்தாமரையே!

வஞ்சிக்கொடி என்பது பல பாடல்களில் பெண்களுக்குப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் உவமை.

மற்ற பல கொடிகளைப்போலவே, வஞ்சியும் மெலிதானது, எளிதாகத் துவள்வது. ஆகவே, இடை சிறுத்த கதாநாயகிகளை வர்ணிக்கும் தேவை ஏற்படும்போதெல்லாம் கவிஞர்கள் வஞ்சிக்கொடியை அழைத்துவிடுவார்கள்.

உதாரணமாக, பாரதிதாசனின் அருமையான காதல் பாடல் ஒன்று, ‘வஞ்சிக் கொடி போல இடை அஞ்சத்தகுமாறு உளது!’ என்று தொடங்கும்.

பொதுவாக எல்லாருக்கும் காதலி இடையைப் பார்த்தால் ஆசை வரும். ஆனால், பாரதிதாசனுக்கு அச்சம் வருகிறது, ‘உன் இடுப்பைப் பார்த்து நான் பயந்தேபோய்ட்டேன் தெரியுமா?’ என்கிறார்.

ஏன் அப்படி? பொண்ணு செம குண்டோ? காதல் பரிசாக ஒட்டியாணம் செய்து தரச் சொல்லிவிடுவாளோ என்று நினைத்துக் கவிஞர் பயந்துவிட்டாரோ?

அந்தச் சந்தேகமே வரக்கூடாது என்பதற்காகதான், ‘வஞ்சிக்கொடி போல இடை’ என்கிறார் பாரதிதாசன். ‘இத்தனை மெல்லிய இடையா’ என்றுதான் அவருக்கு அச்சம்!

அதோடு நிறுத்தவில்லை, தொடர்ந்து கண்களுக்கு உவமையாக என்னவெல்லாம் வருமோ அத்தனையையும் அடுக்குகிறார், பின்னர், ‘ம்ஹூம், உனக்கு இணையாக எதையும் சொல்லமுடியாது’ என்று கை தூக்கிவிடுகிறார். சந்தம் கொஞ்சும் அந்த அழகான பத்தி முழுமையாக இங்கே:

வஞ்சிக்கொடி போல இடை

அஞ்சத் தகுமாறு உளது!

நஞ்சுக்கு இணையோ, அலது

அம்புக்கு இணையோ, உலவு

கெண்டைக்கு இணையோ, கரிய

வண்டுக்கு இணையோ விழிகள்!

மங்கைக்கு இணை ஏது உலகில்,

அம் கைக்கு இணையோ மலரும்?

ஆனால், கிட்டத்தட்ட இதேமாதிரிதானே கொடி இடை, நூலிடை, துடி இடை என்றெல்லாம் இடுப்பை வர்ணிப்பார்கள்?

உண்மைதான். ஆனால் அவற்றுக்கு இல்லாத ஒரு சிறப்பு ‘வஞ்சி’க்கு உண்டு. இடுப்பைமட்டுமல்ல, ஒரு பெண்ணையே ‘வஞ்சி’ என்று அழைப்பதும் உண்டு.

இதற்கு உதாரணமாக, ‘குற்றாலக் குறவஞ்சி’ என்ற நூலே இருக்கிறது. அதன் பொருள், குற்றாலம் என்கிற பகுதியில் வாழ்கிற, குறவர் இனத்தைச் சேர்ந்த, வஞ்சி போன்ற ஒருத்தி.

சினிமாப் பாட்டு உதாரணம்தான் வேண்டுமா? அதுவும் நிறைய உண்டு. ‘வண்ணக்கிளி சொன்ன மொழி, என்ன மொழியோ? வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ!’

ஆக, ஒரு பெண், அவளுடைய மெலிதான இடுப்பு, அதற்கு உவமை வஞ்சி, அதுவே அந்தப் பெண்ணையே அழைக்கும் பெயராகிவிடுகிறது. ஆகவே, இலக்கண அறிஞர்காள், இது சினையாகுபெயரா, உவமையாகுபெயரா, அல்லது சினையுவமையாகுபெயர் என்று ஒன்றை உருவாக்கவேண்டுமா? 🙂

***

என். சொக்கன் …

28 08 2013

270/365